sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (2)

/

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (2)

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (2)

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (2)


PUBLISHED ON : ஆக 11, 2024

Google News

PUBLISHED ON : ஆக 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான் படித்த கான்வென்டில், கன்னியாஸ்திரீகளின் சேவை அளப்பரியது.

எங்கள் கான்வென்டில், அநாதை ஆசிரமம் இருந்தது. அங்கிருந்தவர்களை, சிஸ்டர்கள் கவனித்துக் கொண்ட விதம், எனக்கு ஆச்சரியம் அளித்தது.

மாணவ - மாணவியரின் சதா சிரிக்கும் முகம், பேச்சுகள், அவர்களின் விளையாட்டுகள் எல்லாவற்றையும் பார்க்கும் போது, 'எவ்வளவு நன்றாக கவனித்துக் கொண்டால், இவர்கள் இவ்வளவு சந்தோஷமாக இருப்பர்...' என்று தோன்றும். அவையெல்லாம் என்னை கவர்ந்தன. நானும் அவர்களில் ஒருத்தியாக மாற விரும்பினேன்.

எனக்கு லட்சணமாக, பூ, பொட்டு வைத்து, பள்ளிக்கு அனுப்புவர். பூ, பொட்டுகளை அழித்து விட்டு தான், நான் கான்வென்டிற்குள் நுழைவேன்.

கான்வென்டிற்கு உள்ளே, சர்ச் இருக்கும். அங்கிருக்கும் ஜீசஸ் முன், மண்டியிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு, உருக்கமுடன் மனதிற்குள் வேண்டிக் கொள்வேன்.

பொட்டு, பூ இல்லாமல் வீடு திரும்பினால், 'ஏன் இப்படி வந்திருக்கிறாய்...' என்று கேட்பார், அம்மா.

'விளையாடும்போது அழிந்து விட்டது...' என்று சொல்லி, சமாளிப்பேன்.

பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், 'ஹோம் ஒர்க்' முடித்து, வீட்டில் சின்ன சின்ன உதவிகளை அம்மாவுக்காக செய்வேன்.

பஸ்சில் போய் வருவதற்கு பணம் தருவார், அம்மா. அதை செலவழிக்காமல், நடந்தே போய் வருவேன். அந்தப் பணத்தை சேர்த்து வைத்திருந்து, அநாதை ஆசிரமத்திற்கு தந்து விடுவேன்.

எத்தனையோ ஆசிரியைகள் இருந்தாலும், எனக்குப் பிடித்த ஆசிரியை, ஜோசப்பின் டீச்சர் தான்.

இயேசுவின் கதையை சொல்லும்போது, நான் விக்கி விக்கி அழுது விடுவேன். அத்தனை உருக்கமாக சொல்வார், ஜோசப்பின் டீச்சர்.

ஆனால், வீட்டில், அம்மாவுடன் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போவேன். வீட்டுக்கு தெரியாமல், கான்வென்டில் இருக்கும் சர்ச்சுக்கும் போய் பிரார்த்தனை செய்வேன்.

ஒருநாள், கமலா அக்கா நேரடியாக பார்த்து விட்டு. அம்மாவிடம் போய் விஷயத்தை சொல்லி விட்டாள்.

எனக்கு அது, பெரிய கவலையாய் இருந்தது. ஆனால், அம்மா என்னை கூப்பிட்டு, 'இனிமே இப்படி யெல்லாம் செய்யக் கூடாது...' என்று, உபதேசம் செய்தார்.

மனதில் அதே யோசனையாக, சர்ச்சில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது, ஜோசப்பின் சிஸ்டர் வந்தார்.

'என்ன சரோஜா, ஏன் இவ்வளவு கவலையாய் இருக்கே...' என்று கேட்டார்.

நான் அழுதுகொண்டே, 'சிஸ்டர், நானும், உங்களைப் போல கன்னியாஸ்திரீ ஆக வேண்டும்...' என, என் விருப்பத்தை சொன்னேன்.

'எதற்காக என்னைப் போல, கன்னியாஸ்திரீ ஆகணும்ன்னு நினைக்கிறே...' என்று, கேட்டார்.

'உங்களைப் போல, கன்னியாஸ்திரீயாகி, நானும் மக்களுக்கு சேவை செய்யணும்...' என்றேன்.

'மக்களுக்கு சேவை செய்யணும் என்றால், அதற்கு கன்னியாஸ்திரீயாய் மாறணும்ன்னு அவசியமில்லை. எங்கும் எப்படி இருந்தும், நீ சேவை செய்யலாம். அதில்லாமல், நீ சம்பிரதாயமான ஹிந்து குடும்பத்தில் பிறந்தவள்.

'கன்னியாஸ்திரீ ஆவதற்கு, உன் தந்தையின் ஒப்புதல் வேண்டும். அதுவுமின்றி, நீ சின்னப் பெண். இதுபற்றி எல்லாம் பேச வேண்டாம். முதலில், உங்க அப்பாவிடம் இதுபற்றி பேச வேண்டும்...' என்றார், சிஸ்டர்.

போலீஸ் அதிகாரியாக இருந்த அப்பாவிடம் பேசுவது இருக்கட்டும். முதலில் அம்மாவிடம் பேசுவதே அத்தனை சுலபமென்று தோன்றவில்லை.

நான் சின்ன வயதிலிருந்தே நன்றாக பாடுவேன். பள்ளியில் எல்லா நிகழ்ச்சிகளிலும், நான் பாடும் பாடல் இடம் பெற்றுவிடும்.

அப்போது, போலீஸ் துறையில், நிறைய நாடகம் போடுவர். அப்பாவுக்கு நாடகம் என்றால் ரொம்பவும் பிரியம். அவர், தன், நாடக குழுவினருடன் இணைந்து நாடகம் போடும் போது, எனக்கு, பாலகிருஷ்ணன் வேடம் கொடுத்திருந்தார். நானும் நடித்தேன்.

நான் நன்றாக நடிப்பதாலும், அழகாக இருப்பதாலும், நிறைய பேர் பாராட்டுவர். அப்பா நடத்தும் நாடகங்களுக்கு பாராட்டுகள் கிடைத்ததும், அப்பாவுக்கு மிகவும் சந்தோஷம். அதனால், எல்லா நாடகங்களிலும் எனக்கு ஏதாவது சின்ன வேடம் கொடுத்து விடுவார்.

ஒருமுறை, எங்கள் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது, என் வயது: 13. என் பாடல் நிகழ்ச்சியும் அதில் இடம் பெற்றது.

'ஏ ஜிந்தகி கூ ஹூஸ்தி ஹை' என்ற ஹிந்தி பாடல், அப்போது மிகவும் பிரபலமாய் இருந்தது. அப்பாடலை பாடினேன்.

அந்த நிகழ்ச்சிக்கு, ஹொன்னப்ப பாகவதரும், அப்போது, கன்னட படங்களுக்கு வசனம் எழுதுவதில் பிரபலமாக இருந்த, கு.ரா.சீதாராம சாஸ்திரியும் வந்திருந்தனர்.

தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பாவுக்கு அடுத்து, ஹொன்னப்ப பாகவதர் பிரபலமாக இருந்த கால கட்டம் அது.

நான் மேடையில் பாடியதைக் கேட்ட, ஹொன்னப்ப பாகவதர், 'பரவாயில்லையே, இந்தப் பெண் நன்றாக பாடுகிறாளே...' என்றார்.

நிகழ்ச்சிக்கு பின், என் பெற்றோரை சந்தித்து, 'உங்க பெண், நன்றாக பாடுகிறாள். அவளை சினிமாவில் நடிக்க அனுப்பி வைக்கிறீர்களா...' என்று, கேட்டார்.

எந்தவிதமான முயற்சியும் எடுக்காமலேயே சினிமா வாய்ப்பு தேடி வந்திருக்கிறதே என்பதில், என் தந்தைக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி; மகிழ்வுடன் ஒப்புக் கொண்டார்.

ஹொன்னப்ப பாகவதரின், ஸ்ரீராம பூஜா என்ற படத்தில், சிறிய வேடத்தில் நடித்தேன். அந்த வேடத்தில் நடித்தேனே தவிர, அந்த ஞாபகம் சிறிதுமின்றி, பள்ளிக்கு தொடர்ந்து சென்று வந்தேன்.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும்; அப்போதெல்லாம் சினிமாவில் நடிப்பவர்களுக்கு, சமூகத்தில் நல்ல பெயர் இருக்கவில்லை. நான் சினிமாவில் நடித்தது, பல்வேறு சர்ச்சைகள் கிளம்ப காரணமாக இருந்தது.

பள்ளியில் என்னைப் பார்த்து, எல்லாரும் தங்களுக்குள் பேசிக் கொள்வர். என்னிடம் வந்து, 'என்ன சரோஜா, கன்னியாஸ்திரீ ஆகிறேன்னு சொல்லிட்டு, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறாயே...' என்று கேட்டனர், சிலர்.

— தொடரும்.

நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்

எஸ். விஜயன்







      Dinamalar
      Follow us