
* ம.கார்த்தி, ராமநாதபுரம்: தென்மேற்கு பருவமழை, 55 சதவீதம் கூடுதலாக பெய்தும், அதை சேமிக்காமல், கடலில் கலக்கவிட்டு, கர்நாடகத்திடம் கையேந்துவது எப்படி நியாயம்?
பெரும்பாலான ஆட்டோக்களின் பின்னால், 'மழைநீர் சேகரிப்பீர்' என எழுதச் சொல்லிவிட்டு, இருக்கும் நீர்நிலைகளைக் கூட துார்வாராமல், சரிவர பராமரிக்காமல் இருப்பதன் விளைவை, நம் மாநிலம் அனுபவிக்கிறது இப்போது!
மா.தருண் ராஜா, பாப்பான்குளம், தென்காசி: முட்டையை பொரித்து சாப்பிடுவது, அவித்து சாப்பிடுவது, ஆம்லெட் போட்டு சாப்பிடுவது, 'ஆப் பாயில்' ஆக சாப்பிடுவது... எது பிடிக்கும் லென்ஸ் மாமாவுக்கு?
'சன்னி சைடு அப்' - இது, 'ஆப் பாயில்' முட்டையையே, திருப்பிப் போட்டு, 'புல் பாயில்டு' ஆக செய்து, உப்பு - மிளகுத் துாள் துாவிச் சாப்பிடுவது தான் பிடிக்கும், லென்ஸ் மாமாவுக்கு!
ஆர்.சிவராம கிருஷ்ணன், பெங்களூரு: 'காவிரி பிரச்னைக்காக, மத்திய அமைச்சரை சந்தித்துப் பேசினால், 'அச்சா, அச்சா' என்று பேசுகிறார். ஒன்றும் புரியவில்லை...' என்கிறார், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன். ஹிந்தியின் அருமை, இப்போது புரிந்ததா அவருக்கு?
அச்சா, அச்சா!
எம்.ராஜேந்திரன், லால்குடி: வெளியூர் பயணம் செய்ய, பஸ், கார், ரயில், விமானம் - எது சிறந்தது?
கார்! இனிமையான பாடல்களை மெலிதாக ஓட விட்டு, நன்கு தமிழ் படிக்கத் தெரிந்தவரை, அருகில் அமர வைத்து, நல்ல கதையை ஏற்ற இறக்கத்துடன் படிக்கச் சொல்லி கேட்டபடியே, நெடுஞ்சாலையில் கார் ஓட்டிச் செல்வதே, தனி சுகம் தான்!
சூ.அந்தோணிசாமி, நாகர்கோவில்: ஆரம்பத்தில் இருந்த, 'தினமலர்' நாளிதழின் விறுவிறுப்பும், விற்பனையும் இப்போது எப்படி இருக்கிறது?
அதிவேக வளர்ச்சியுடன் இருக்கிறது!
வி.பரணிதா, உளுந்துார்பேட்டை: சைக்கிள், கார் இரண்டைத் தவிர, வேறு வாகனம் ஏதாவது ஓட்டி இருக்கிறீர்களா?
நெல்லை மாவட்டம், புதுக்குடி தோட்டத்தில், வயல்வெளிகளுக்கு நடுவே, புல்லட்டில் சென்றிருக்கிறேன்!
* ச.புவனேந்திரன், தேனி: மொபைல்போனில் பேசியபடியே, இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அறிவுரை...
அப்படி செய்வது தவறு; செய்யக் கூடாது!
எம்.கதிரேசன், தஞ்சை: உண்மையான மகிழ்ச்சி எதில் கிடைக்கும்?
உண்மையான மகிழ்ச்சி, நாம் எவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறோம் என்பதில் இல்லை; எவ்வளவு தர்மம் செய்திருக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது!

