
பா - கே
லென்ஸ் மாமாவுக்கு, தொடர்ந்து சளி, இருமல் பாடாய் படுத்த, அவர் வழக்கமாக செல்லும் சித்தா மருத்துவரிடம் செல்ல, என்னை துணைக்கு அழைத்தார். அவருடன் சென்றேன்.
புறநகரில் அமைந்திருக்கும் அவரது மருத்துவமனை இயற்கை சூழலில், ரம்மியமாக இருந்தது. மருத்துவருக்கு, 70 வயதுக்கு மேல் இருக்கும். ஆனாலும், ஆரோக்கியமாக, வெள்ளை நிற வேட்டியும், ஜிப்பாவும் அணிந்து, கம்பீரமாக இருந்தார்.
மாமாவைப் பார்த்ததுமே, 'என்ன... சளி, இருமலா? முகத்தைப் பார்த்தாலே தெரிகிறதே... வெண்குழல் வத்தி, உ.பா., எல்லாம் விட்டொழிக்க சொன்னால், கேட்க மாட்டேங்கிறீர். நம் உடல் ஒரு கோவில் மாதிரி. அதை முறையா பராமரித்தால், நோய் நொடி இல்லாமல் வாழலாம்...' என்றபடி, மாமாவை பரிசோதிக்க ஆரம்பித்தார்.
இரண்டு, மூன்று மருந்து சூரணங்களை கொடுத்து, தேனில் குழைத்து சாப்பிட அறிவுறுத்தினார்.
சிறிது நேரம் பொதுவான விஷயங்களை பேசியவர், 'நம் உடல் பற்றி, சித்தர்கள் எவ்வளவு விஷயங்களை எழுதி வைத்துள்ளனர் தெரியுமா?' என்று கூற ஆரம்பித்தார்:
சித்தர்கள் கணக்குப்படி, மனுஷ உடம்புக்குள், 72 ஆயிரம் நாடி நரம்புகள் இருக்கிறதாம். இதில், முக்கியமானது, 24 நரம்புகள்.
இந்த, 24 நாடி நரம்புகளும், மற்ற நரம்புகள் மாதிரி இல்லாமல், எப்பவும், உறக்கத்துலயே இருக்கும். 24 நாடி நரம்புகளில், 10 நாடிகள் மேல் நோக்கியும், 10 நாடிகள் கீழ்நோக்கியும் இருக்கும்.
மீதியுள்ள, நான்கும், பக்கத்துக்கு ரெண்டு ரெண்டாக பிரிந்து, பாம்பு மாதிரி சுற்றி வளைச்சுக்கிட்டு கிடக்கும். இதில் தான் உயிரின் ஜீவ ஆற்றல், மறைந்துள்ளதாக கூறுகின்றனர், சித்தர்கள்.
இந்த, 24 நாடியிலேயும், 10 மிகவும் முக்கியம். அதிலும், மூன்று மிக மிக முக்கியம். இந்த மூணுக்குள் தான், உயிர் ரகசியம் பொதிந்து கிடக்குதாம்.
இந்த மூன்றும், நம் உயிரை, உடம்புடன் இணைச்சுக்கிட்டு இயங்குகிறது. இந்த நாடிகளோட மூன்று வாயுக்களுக்கும் மூன்று பெயர் உண்டு.
இடகலை, பிங்கலை மற்றும் கழுமுனை. அதாவது, சந்திரன் - சூரியன் - அக்னி.
இடது நாசியில் இழைகிற மூச்சு, இடகலை. வலது நாசியில் இயங்குகிற மூச்சு, பிங்கலை. கழுமுனைங்கிறது, ரெண்டு நாசியிலேயும் வந்து போய் இயங்குகிற சுவாசம்.
இந்த மூன்று மூச்சுகளின் இயக்கத்தை பற்றி, நம் சித்தர்கள் சொல்லி இருக்கிற ரகசியத்தை எல்லாம் வெளிநாட்டுக்காரங்க ஆராய்ச்சி செய்துள்ளனர்.
கொஞ்ச காலத்துக்கு முன், ரஷ்யாவின், லெனின் கிராட் பல்கலைக்கழகத்தில் இருந்து, டாக்டர் மெஸ்ஸிங்ன்னு ஒருத்தர் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
விஞ்ஞான பேராசிரியர், அவர். இமயமலையில் கொஞ்ச காலம் தங்கி, அங்கே இருந்த சில யோகிகளிடம் பழகினார். அவர்களிடமிருந்து, மூச்சு வித்தையை பற்றி தெரிந்து கொண்டு போனார்.
'இந்தியாவில் இருக்கும் சித்தர்கள், பல வாரங்கள் மூச்சு விடாமல் மரக்கட்டை மாதிரி, உயிர் இருந்தும் இல்லாதது மாதிரி, யோக சமாதி நிலையில் இருக்குறாங்க. அவர்களிடம் பயிற்சி எடுத்துக்கிட்ட என்னால், இப்போ, மூன்று நாள் வரைக்கும் அப்படி இருக்க முடியும். அதுக்கு மேலயும் அது மாதிரி இருக்கிறதுக்கு பயிற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்...' என்று, கூறியுள்ளார்.
இந்த, மூன்று மூச்சுகளை பற்றி, சித்தர்கள் இன்னும் சில ரகசியங்களை சொல்லி இருக்கின்றனர்.
அது, வளர்பிறையில் அதாவது, அமாவாசை கழிச்சு மறுநாளிலிருந்து மூன்று நாட்கள், காலையில் எந்த நாசி எப்படி இயங்கும்கிற கணக்கை கண்டுபிடிச்சு சொல்லி இருக்காங்க.
நான்காம் நாளிலிருந்து ஆறாம் நாள் முடிய இது மாறும். அப்புறம் ஏழாம் நாளிலிருந்து முதல் மூன்று நாள் மாதிரி மறுபடியும் இயங்கும். இப்படியே மூன்று மூன்று நாட்களுக்கு இடகலையும், பிங்கலையும் மாறி மாறி, ஒரு சட்ட திட்டத்தின்படி வேலை செய்யும்.
இப்படி இருந்தா, அந்த உடம்பு ஆரோக்கியமாக இருக்குதுன்னு அர்த்தம்.
இந்த ரெண்டும் தவிர, கழுமுனைங்கிற மூன்றாவது மூச்சு எப்படி இயங்குது என்பதற்கும் ஒரு வாய்ப்பாடு இருக்கு. காலையில் எழுந்ததும், மூச்சு எந்த நாசியில் எப்படி இழையுது என்பதை வச்சு, சில விஷயங்களை புரிஞ்சுக்க முடியும்.
உதாரணத்துக்கு, இரவு முழுக்க ஒரு நாசியில் மூச்சு ஓடிக்கிட்டிருந்தா, அந்த உடம்புக்கு, மூன்று ஆண்டுக்கு மேல் உயிராற்றல் இருக்காதுன்னு, முடிவு பண்ணிக்கலாம்.
இரவு முழுதும் இடகலையும், பகல் முழுதும் பிங்கலையும் மாறாம நடந்துக்கிட்டிருந்தா, அந்த மனுஷன் ஆறு மாசத்துல மரணத்தை நெருங்கறான்னு அர்த்தம்.
ரெண்டு கண்ணையும் அமுக்கினா தண்ணீர் வரணுமாம். வரலேன்னா, அந்த உடம்புக்கு, 10 நாள்ல முடிவு வந்துடுமாம்.
இரவு நேரத்தில், ஆகாயத்துல இருக்கிற நட்சத்திரம் பார்வைக்கு தெரியலேன்னா, ஐந்து நாள்ல மரணம்.
மூக்கு நுனி தெரியலேன்னா, மூன்று நாளில் முடிவு. இப்படியெல்லாம் சொல்லுது, சித்தர் சாஸ்திரம்.
இது மாதிரி அறிகுறி ஏதாவது தெரிஞ்சா, உடனே, சித்தர்கள் மூச்சு இயக்கத்தை, 'அட்ஜஸ்ட்' பண்ணிக்குவாங்கறதும் கூடுதல் தகவல்.
- இவ்வாறு கூறி முடித்தார், மருத்துவர்.
நேரம் கிடைக்கும்போது, சித்தர்கள் பற்றி மேலும், பல தகவல்களை இவரிடம் கேட்க வேண்டும் என்று நினைத்து, அங்கிருந்து கிளம்பினோம்.
ப
மூன்று மனிதர்களுடைய ஆவிகள், ஒரே சமயத்தில் எமனுடைய சன்னிதானத்தை அடைந்தன. முதல் ஆவி, பூலோகத்தில் பிரம்மசாரியாகவே இருந்து, இறந்தவனுடையது.
அவனை பற்றிய விபரத்தை, சித்திரகுப்தன் கூறியதும், 'இவன், பூலோகத்தில் கஷ்டமே அனுபவியாதவன். ஆகையால், இவனை நரகத்தில் போடு...' என்றான், எமன்.
அடுத்த ஆவி, கிரகஸ்தனுடையது.
'ஐயோ பாவம், உலகில், கல்யாணம் செய்து கொண்டு வெகு கஷ்டப்படுகிறான். இங்கேயாவது சுகமாய் இருக்கட்டும், சொர்க்கத்துக்கு அனுப்பு...' என்றான், எமன்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மூன்றாவது ஆவி, 'எமதர்ம ராஜனே, நான் பூலோகத்தில் இரண்டு முறை கல்யாணம் செய்து கொண்டு, ரொம்ப கஷ்டங்களை அனுபவித்தவன்...' என்று, முறையிட்டது.
கோபத்துடன், 'அடே முட்டாளே... ஒருமுறை கல்யாணம் செய்து கஷ்டப்பட்ட பின், இரண்டாம் முறையும் கல்யாணம் செய்து கொண்டாயா... இப்படிப்பட்ட மூடனுக்கு சொர்க்கத்தில் இடம் ஏது? போடு இவனை கொடிய நரகத்தில்...' என்று கூறினான், எமன்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது