
வளையல் வியாபாரமும், லாபம் தரும்!
எங்கள் தெரு வழியாக, தள்ளுவண்டியில் வளையல் விற்றுப் போனாள், இளம்பெண் ஒருத்தி.
மாலையில், உறவினர் வீட்டு விசேஷத்திற்கு அணிந்து செல்ல, 'மேட்சிங்' வளையல் தேவை என்பதால், அப்பெண்ணை அழைத்தேன்.
அவளை எங்கோ பார்த்தது போல் இருக்கவே, விசாரித்தேன்.
'இதுக்கு முன், ஜவுளிக்கடையில் வேலை பார்த்தேன். அங்கே குறைந்தது, 8,000 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே, மாதச் சம்பளம். 12 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். தேவைப்படும் நேரத்தில், விடுப்பும் கிடைக்காது. அதுமட்டுமின்றி, புளோர் மேனேஜர், சூப்பர்வைசர், சக ஆண் ஊழியர்கள்ன்னு, பலரின் சீண்டல்கள் வேறு.
'அதுக்கப்புறம், அப்பாவோட நண்பர் மூலமா, தள்ளுவண்டியில் வளையல் வியாபாரம் செய்பவரிடமிருந்து தொழில் நுணுக்கங்களைக் கற்று, வியாபாரத்துல இறங்கிட்டேன். தினமும், லாபம், 1,000 ரூபாய் வரை கிடைச்சுடும். மாதத்துல, 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். உழைப்புக்குத் தகுந்த உயர்வு நிச்சயம்...' என்றாள்.
சுயதொழிலில் உழைத்து வாழ விரும்பினால், வளையல் வியாபாரமும் லாபம் தரும் என்பதற்கு, உதாரணமாக விளங்கும் அப்பெண்ணை, வாழ்த்தினேன்!
- எஸ்.நாகராணி, மதுரை.
அரசு பள்ளியில் குறும்படம்!
சமீபத்தில், வெளியூரிலுள்ள ஆசிரிய தோழியைப் பார்த்து வர, அவர் பணியாற்றும் அரசுப் பள்ளிக்குச் சென்றிருந்தேன்.
அப்போது அங்கே, பள்ளி மாணவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து, திரை கட்டி, புரொஜெக்டர் மூலம், குறும்படங்கள் ஒளிபரப்பி கொண்டிருந்தனர்.
அதில், அந்த அரசுப் பள்ளியில் படித்து, இப்போது பலவித பணியிலிருக்கும் முன்னாள் மாணவ, மாணவியரைப் பற்றிய விபரங்களும், அவர்களுடைய பேட்டிகளும் திரையிடப்பட்டன.
அதைப் பார்க்கும் ஒவ்வொரு மாணவரின் மனதிலும், கல்வியின் மீதான அக்கறையும், அரசுப் பள்ளிகள் மீதான மரியாதையும் அதிகரிக்கும் வகையில், ஒவ்வொரு குறும்படமும் இருந்தது.
இந்த நல்ல முயற்சி, மனதிற்கு மகிழ்ச்சி தருவதாகவும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்துமே பின்பற்ற ஏற்றதாகவும் இருந்தது.
இதற்கு ஏற்பாடு செய்த அனைவரையும், மனதார வாழ்த்தி வந்தேன்!
-வி.நர்மதா, உளுந்துார்பேட்டை.
குளங்களில், 'கான்கிரீட்' சுவர் வேண்டாமே!
நான் தினமும் காலை, சிதம்பரத்தில் உள்ள ஒரு குளக்கரையில் நடை பயிற்சி மேற்கொள்வேன். ஒருநாள், குளத்திலிருந்த மீன்கள் அனைத்தும் செத்து மிதந்து கொண்டிருந்தன.
பலர் கூட்டமாக நின்று, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்போது, கூட்டத்திலிருந்த பெரியவர் சொன்ன கருத்து, எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அதாவது, 'அந்த காலத்தில் குளங்களின் சுற்று சுவர்கள் அனைத்தும் கருங்கல் மற்றும் மணலால் தான் இருக்கும். ஆனால், நாகரிக உலகில், 'கான்கிரீட்'டால் சுவர்கள் கட்டுகின்றனர். வெயில் காலத்தில், கருங்கல் மற்றும் மணல் சூழ்ந்த தண்ணீரில் எப்போதும் ஆக்சிஜன் இருந்து கொண்டே இருக்கும். அதனால், தண்ணீர் சூடாகாது; மீன்களும் சாகாது.
'இப்படி, 'கான்கிரீட்' சுவர் அமைத்தால், ஆக்சிஜன் வருவது தடுக்கப்படும். தண்ணீரும் சூடாகி, மீன்கள் இறந்து விடும். இந்தக் குளத்தை பொறுத்தவரை, கடுமையான வெயிலின் தாக்கம், 'கான்கிரீட்' சுவர் மீது பட்டு, தண்ணீரில் பிரதிபலித்ததன் விளைவாக, மீன்கள் இறந்திருக்கலாம்...' என்று, கூறினார்.
'அவர் சொல்வது உண்மை தான். பாரம்பரியத்தை மறந்து விட்டதால், வந்த வினை...' என்று, சிலர் ஆதங்கப்பட்டனர்.
குளங்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று, முன்னோர் நமக்கு காட்டிய எந்த வழிமுறைகளையும் நாம் பின்பற்றுவது இல்லை. அதன் விளைவை இப்போது அனுபவிக்கிறோம்!
பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.