sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பாத பூஜை!

/

பாத பூஜை!

பாத பூஜை!

பாத பூஜை!


PUBLISHED ON : ஆக 11, 2024

Google News

PUBLISHED ON : ஆக 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சம்பந்தி அம்மாளின் மூக்கில், கழுத்தில், காதுகளில் மற்றும் கைகளில் வைர நகைகள் மின்னின.

''இதோ பாருங்க... எங்க பையன், உங்க பொண்ணை, 'லவ்' பண்றான்கிற ஒரே காரணத்துக்காக, அவனோட சந்தோஷத்துக்காக, நாங்க ரொம்பவே, 'காம்ப்ரமைஸ்' பண்ணி வந்திருக்கோம்.

''ஜாதி, சமூக அந்தஸ்து, பணம், காசு, சொத்துன்னு எதையுமே, 'டிமாண்ட்' பண்ணாம, இறங்கி வந்திருக்கோம். ஆனா, இந்த விஷயம் நாங்க எதிர்பார்க்காதது,'' என்று சொல்லி நிறுத்தினாள்.

நான் அமைதியாய் நின்றேன்.

தொடர்ந்தாள்...

''உங்களுக்கும், உங்க கணவருக்கும் சண்டை; நீங்க, 23 வருஷமா பிரிஞ்சிருக்கீங்க. அவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டாருங்கிற விஷயத்தை எங்களாலேயே ஜீரணிக்க முடியலை; நிச்சயமா எங்க சொந்தக்காரங்க இந்த விஷயத்தை சாதாரணமா எடுக்க மாட்டாங்க.

''உறவுக்காரங்க மத்தியில், எங்களுக்கு ரொம்பவே கவுரவக் குறைச்சலா போயிடும். அதனால, என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ தெரியாது, கல்யாணத்தன்று மட்டும் மண மேடையில், நீங்க ரெண்டு பேரும் தம்பதி சமேதரா, பாத பூஜைக்கு நிற்கணும். அவ்வளவு தான்,'' என்றாள், அழுத்தந்திருத்தமாய்.

சம்பந்தி அம்மாள் வீசிய அணுகுண்டு வார்த்தைகள் கேட்டு, என் நெஞ்சம் வெடித்துச் சிதறியது.

அந்த கயவனின் கைக்குழந்தையுடன், நிர்க்கதியாய் நான் வீட்டை விட்டு வெளியேறக் காரணமான நயவஞ்சகன்; இன்று வரை எங்களுக்கு என்ன ஆனது, நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று எட்டிக்கூட பார்க்காத மனசாட்சியற்ற மிருகம்.

அவனை அழைத்து வந்து, சபையில் மரியாதை செய்வதா... ஒருக்காலும் முடியாது என்று, உறுதியுடன் நிமிர்ந்தபோது, என் பெண்ணும், மாப்பிள்ளையும் சிரித்து பேசியபடி, வீட்டினுள் நுழைந்தனர்.

''வந்துட்டீங்களா, எவ்ளோ நேரம் காத்துட்டு இருக்கறது? கல்யாணத்துக்கு அப்புறம் பேச, ஏதாவது மிச்சம் வையுங்க,'' என்றபடி எழுந்தாள், சம்பந்தி அம்மா.

''நீங்க, ஆன்ட்டிகிட்ட கல்யாண விஷயம் பேசிட்டீங்களா?'' என்று சிரித்தபடி கேட்டார், மாப்பிள்ளை.

''பேசியாச்சு, கல்யாண செலவு மொத்தமும் நம்மோடது. அவங்க, கல்யாணத்துக்கு முதல் நாள் மண்டபத்துக்கு வந்தா போதும்,'' என்றார், மாப்பிள்ளையின் அப்பா.

''தேங்க்யூ டாட்!'' என, தந்தையை அணைத்துக் கொண்டார், மாப்பிள்ளை.

அனைவரும் விடைபெற்று கிளம்ப, காரில் ஏறும் முன், சம்பந்தி அம்மாள் என் கைப்பற்றி அழுத்தி, ''நான் சொன்னது நினைவிருக்கட்டும்,'' என்றார் அதிகாரமாய்.

மையமாய் தலையாட்டினேன்.

''என்ன மம்மி, ஹேப்பி தானே?'' என்று அணைத்துக் கொண்ட, என் பெண்ணின் கண்ணில் சந்தோஷம் பொங்கி வழிந்தது.

வலிய வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன், ''ம், சந்தோஷந்தாண்டா செல்லம்,'' என்றேன்.

''ஹேய், நம் மஹா குட்டிக்கு கல்யாணம்,'' என்று, குழந்தையாய் குதுாகலித்தனர், என் பெற்றோர்.

வீடு முழுவதும் சுழித்தோடும் சந்தோஷ அலையை உணர முடிந்தது. என் பெண்ணுக்காக, அவள் சந்தோஷத்துக்காக, ஒரு தாயாய், எதையும் செய்யலாம்; அது என் கடமையும் கூட. ஆனால், என் தன்மானத்தை, விட்டுக்கொடுத்து, அந்த மனித மிருகத்தை பார்க்கவோ, அவன் உதவி வேண்டி நிற்கவோ, என் மனம் முரண்டியது. எதையும் மறந்திடாத நெஞ்சம் பழையதை நினைவூட்டியது.

திருமணம் முடிந்து, முதலிரவு அறையில் நான் நுழைந்தபோது, சிகரெட் புகை மூட்டத்தின் நடுவே அமர்ந்திருந்தான். அலட்சியமும், திமிரும் தொனிக்க, அவன் பார்த்த பார்வையும், 'பணத்துக்கு வக்கில்லாத குடும்பத்தில் பிறந்துட்டு, உனக்கென்னடி, அரசின்னு பேரு?' என்று கேட்ட, எகத்தாள கேள்வியும், நினைவில் வந்தது.

அவன் மனைவியாய் நான் வாழ்ந்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆண் - பெண் உறவில், மனைவியை எவ்வளவு கேவலமாக நடத்த முடியுமோ, அத்தனையும் செய்தான்.

ஒருநாள், துணி காயப் போடுவதற்காக மாடிக்கு செல்லும்போது, 'ஸ்டோர் ரூமில்' இருந்து சத்தம் வந்தது. திருடன் என நினைத்து, வெளிப்புறமாய் கதவைப் பூட்டி, வீட்டிலிருந்தோரை கம்பு, கடப்பாரை சகிதம் அழைத்து வந்தேன்.

கதவைத் திறக்க, வேலைக்காரியுடன் புணர்ந்துக் கொண்டிருந்தான், என் கணவன். எல்லாரும் திகைத்து நிற்க, வன்மத்துடன் முறைத்தபடி, என்னை கடந்துப் போனான். எனக்கு குமட்டியது.

அன்றிரவு படுக்கையறையில் நுழைந்து, 'பளார்' என்று, என் கன்னத்தில் அறைந்தான். சுதாரித்து நிமிரும் முன், தலையில் சரமாரியாய், மூர்க்கத்துடன் என்னைத் தாக்க ஆரம்பித்தான். அலறியபடி அறையை விட்டு வெளியே ஓடினேன்.

என் அலறல் சத்தம், அனைவரையும் வெளியே அழைத்து வர, 'டேய், அடிக்காதடா. புள்ளத்தாச்சி பொண்ணை அடிக்கிறது பாவம்டா...' என்று, அந்த மூர்க்கனைத் தடுத்தார், மாமியார்.

என்னைக் கேவலமாய் பார்த்து, 'நாலு நாள் இருந்திருப்பியா என் கூட, அதுக்குள்ள உண்டாயிட்ட? நம்புற மாதிரி இல்லையேடி...' என கூறி, தன் தாடியை சொறிந்தான்.

அவன் வார்த்தைகளில் கூசி குறுகி, அவனை அச்சத்துடன் பார்த்தேன்.

என் கைப்பற்றி தரதரவென இழுத்துச் சென்று, பூஜை அறையில் படுக்க வைத்தாள், மாமியார்.

ஊரைக் கூட்டி விசேஷமாய் நடத்தப்பட்ட, என் சீமந்தத்திற்கு, கணவன் வரவில்லை. உறவினர்களின் ஏளனப் பார்வையும், குத்தல் பேச்சும், என்னை கண் கலங்க வைத்தது.

பிரசவம் முடிந்து திரும்பி வந்தபோது, கணவன், மேலும் முன்னேறி இருந்தான். 'ஸ்டோர் ரூம்' தவிர்த்து, எங்கள் படுக்கை அறையிலேயே நித்தம் ஒரு பெண்ணோடு கோலாகலமாய் கோலோச்சிக் கொண்டிருந்தான்.

என் குழந்தையுடன், பூஜை அறையில் அடைக்கலமானேன்.

ஒருநாள், இரவு, குழந்தைக்கு ஜுரமும், இருமலும், மூச்சுத்திணறலும் ஏற்பட, பயந்து போனேன். என் தோளில் துவண்டு சரிந்த குழந்தையுடன் மாமியாரிடம் ஓடினேன்.

'குழந்தைக்கு ஜுரம், நெருப்பா கொதிக்குது. மூச்சுவிட முடியாம அவஸ்தைப்படுது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. டாக்டர்கிட்ட போகலாம் மாமி...' என்றேன்.

'நிம்மதியா துாங்கக் கூட விட மாட்டியா?' எரிந்து விழுந்து, 'எல்லாம் காலையில பார்த்துக்கலாம்...' என்று கூறி, கொட்டாவி விட்டபடி, அறைக்கதவை மூடினாள், மாமியார்.

குழந்தையின் அழுகுரல் மெல்ல தேய, தடதடத்த நெஞ்சத்துடன் குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு பர்ஸுடன் புறப்பட்டேன்.

இரண்டு தெரு தள்ளியிருக்கும் ஆட்டோ ஸ்டாண்டிற்கு, வேக நடை நடந்தேன். அப்போது, என்னை நோக்கி வந்தது கார். என் கணவன் தான் ஓட்டிக்கொண்டு வந்தான். அவனருகில் வழக்கம் போல் ஒரு பெண்.

காரை வழி மறித்து, 'என்னங்க, குழந்தைக்கு ரொம்ப உடம்பு முடியலைங்க. ஹாஸ்பிட்டல் போகணும்...' என்றேன்.

கார் கதவை திறந்து என்னையும், குழந்தையையும் மாறி மாறி பார்த்து, 'அரசிக்கு கார் கேட்குதோ?' என்று எகத்தாளமாய் கேட்டவன், 'படார்' என்று கதவை மூடி, 'விர்'ரென கிளப்பிச் சென்றான்.

அத்தருணம், அந்த நொடி, 'என் வாழ்க்கைக்கு அவன் தேவையில்லை' என, திடமாய் உணர்ந்தேன். ஆட்டோ பிடித்து, மருத்துவமனை சென்றேன். கண்கள் மேல்நோக்கி நிலைக்குத்தி நின்ற குழந்தையின் நிலை கண்டு, 'நிமோனியா காய்ச்சல்' என்று சொல்லி சிகிச்சையை ஆரம்பித்தனர், டாக்டர்கள்.

பசி, துாக்கம் மற்றும் இரவு பகல் பாராது, 10 நாள் போராட்டத்திற்குப் பின், குணமடைந்தது குழந்தை.

வீட்டிற்கு வந்ததும், தைரியமாய் படுக்கை அறையிலிருந்த என் அம்மா - அப்பா சீராக கொடுத்த கட்டிலில் படுக்க வைத்தேன்.

நள்ளிரவு வழக்கம் போல், ஒரு பெண்ணுடன் வந்த கணவன், என்னை படுக்கையறையில் கண்டதும், கண்ணில் நெருப்பும், குரலில் வெறுப்பும் மேலிட, 'வெளியே போடி...' என்றான்.

'முடியாது. இது என் அப்பா - அம்மா எனக்காக வாங்கிக் கொடுத்த கட்டில்...' என்றேன்.

'என்னடி சொன்ன?' என்று ஓங்காரமாய் அவன் விட்ட அறையில், என் கன்னம் பழுத்து, காது 'ஙொய்' என, ரீங்காரமிட்டது.

என் தலை முடியைப் பற்றி, தரதரவென்று வெளியே இழுத்து வந்தவன், சமையல்கட்டிற்கு ஓடி, கனமான குக்கர் மூடியால் மூர்க்கமாய் என் முகத்தில் ஓங்கி அடித்தான். வலியில் துடிதுடித்து, குழந்தையை அள்ளியெடுத்து, தலைதெறிக்க அங்கிருந்து ஓடினேன் - நிரந்தரமாக.

அகோரமாய் புடைத்திருந்த முகம், என் வாழ்க்கையை பறைசாற்ற, என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள், அம்மா. விக்கித்து போனார், அப்பா.

வீட்டு மாடி போர்ஷனில் குடி இருந்தவர்களை காலி செய்து, குழந்தையுடன் குடியேறினேன். அக்கம் பக்கத்து மாணவ - மாணவியருக்கு, 'டியூஷன்' எடுக்கத் துவங்கினேன். சரஸ்வதியின் அருளாக பெருகியது, மாணவர் கூட்டம். லஷ்மி தேவியும் எங்கள் இல்லத்தில் கோலோச்சினாள்.

என் உணர்வுகளுடன் கலந்துவிட்ட வீரலஷ்மியின் உதவியோடு, இதோ இன்று, 23 ஆண்டுகள் கழித்து, என் மகளுக்காக, அந்த கயவன் வீடு சென்றேன். வயோதிகனாய் மாறியிருந்த அவனிடம், ரத்தின சுருக்கமாய் மகளின் திருமணம் குறித்த விபரம் சொன்னேன்.

அவன் கண்களில் வழக்கமான திமிரும், ஆத்திரமும் மின்னின.

''என்னை துாக்கி எறிஞ்சிட்டு போனியே, இப்பத் தெரியுதாடி, ஒரு அப்பனோட முக்கியத்துவமும், மதிப்பும், மரியாதையும்?

''நான் மனசு வச்சா, உன் பொண்ணு கல்யாணத்தையே என்னால நிறுத்த முடியும். உன், 'கேரக்டர்' சரியில்லை. அதனால தான் வீட்டை விட்டு விரட்டினேன்னு, ஒரே ஒரு பொய் சொன்னா போதும். முடிஞ்சுது உன் கதை,'' என்று, கொக்கரித்தான்.

அவனது இரண்டாம் மனைவி, ஏதோ அவன் காதில் சொல்ல, பெட்டிப் பாம்பாய் அடங்கினான்.

''சரி சரி, உன்கிட்ட வீண் பேச்சு எதுக்கு? கல்யாணத்துக்கு நான் வர்றேன். ஆனா, ஒரே ஒரு நிபந்தனை. பாத பூஜைக்கு, நீ, என் பக்கத்துல நிற்கக் கூடாது. இதோ என் பொண்டாட்டி, வள்ளிக்குத்தான் அந்த உரிமை. புரிஞ்சுதா?''

விதிர்விதிர்த்து நிமிர்ந்தேன். 'ஸ்டோர் ரூம்' வேலைக்காரி தான், அவன் சொன்ன மனைவி வள்ளியாய் அமர்ந்திருந்தாள்.

அவள் கண்களில் தெறித்த வன்மமும், எகத்தாளமும், என்னை கொலைகாரி ஆக்க நெட்டித் தள்ளின.

ஆனாலும், பொறுமை காத்து, அங்கிருந்து திரும்பினேன்.

அன்றிரவு -

அம்மா மடியில் தலை சாய்த்து கேவிக் கேவி அழுதேன்.

''அரசி, என் தங்கம். நீ எப்பவும் தலைநிமிர்ந்து நிற்கணும். அழாதேடா என் செல்லம்,'' என, ஆறுதல் கூறினாள்.

சடாரென்று எழுந்தமர்ந்த நான், ''அம்மா, கணவனை இழந்த கைம்பெண்கள், தங்கள் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்யும் போது, யாரும்மா பாத பூஜை பண்ணிப்பாங்க?''

''நெருங்கிய சொந்தத்துல, நிறைஞ்ச வாழ்க்கை வாழ்ந்த ஒரு தம்பதி பண்ணிப்பாங்க!''

''அம்மா... நீயும், அப்பாவும் பாத பூஜைக்கு நில்லுங்கம்மா!''

''உன் சம்பந்தி ஒத்துக்கணுமே?''

''பேசிப் பார்க்கலாம்மா,'' என, நம்பிக்கையோடு எழுந்தேன்.

''முடியாது,'' என்று மறுத்தாள், சம்பந்தி அம்மாள்.

சோர்ந்து போனேன். வேறு வழியின்றி அவனுக்கு போன் செய்தேன்.

''எனக்குத் தெரியும், நீ போன் பண்ணுவேன்னு. நான் இல்லேன்னா, நீ வெறும் பூஜ்யம். தெரிஞ்சுதா?'' என்றான்.

திருமண மண்டபம் நிறைந்திருந்தது. அகலக்கரை வைத்த பட்டு வேட்டியும், சட்டையும் அணிந்து, முன் வரிசையில் அமர்த்தலாய் அமர்ந்திருந்தான், அவன். விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் கட்டியது போல் அவனருகில், வள்ளி.

மாப்பிள்ளை, தன் தாய் தந்தைக்கு, பாத பூஜை செய்து முடிக்க, மணமேடைக்கு வந்தவனைக் கண்டு வெகுண்டு எழுந்தாள், என் பெண்.

''என் அம்மாவுக்கு மட்டும் தான், நான் பாத பூஜை செய்வேன். அந்த ஆள் இங்கே இருக்கவே கூடாது. போகச் சொல்லுங்க,'' என்றாள், அழுத்தந்திருத்தமாய்.

''மஹா, முதலில் கல்யாணச் சடங்குகளை மதிக்கக் கத்துக்கோ. அமைதியா உட்கார்,'' என்று உத்தரவிட்டாள், சம்பந்தி அம்மா.

சட்டென எழுந்த மாப்பிள்ளை, ''அம்மா, இதுவரை எங்களை வளர்த்து ஆளாக்கிய தாய் -- தந்தைக்கு நன்றி செலுத்தும் சடங்கு தான், இந்த பாத பூஜை. இதை செய்ய வேண்டியது, தனி ஆளாய் மஹாவை வளர்த்து, ஆளாக்கி இருக்கும், அரசி அத்தைக்கு மட்டும் தான்,'' என்றார், ஆணித்தரமாய்.

''தம்பதி சமேதராகத்தான் பாத பூஜை செய்து கொள்ள வேண்டும். அது தான் சம்பிரதாயம்,'' என்றாள், சம்பந்தி அம்மாள்.

''சம்பிரதாயம் என்ற பெயரில், என் அம்மாவின் சுய மரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது. என் அம்மாவின் அருகில் நிற்கக் கூட அந்த ஆளுக்கு அருகதையில்லை,'' உறுதியாய் சொன்னாள், மஹா.

என் மகளை பெருமிதத்தோடு பார்த்தேன்.

''பாருங்க, கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்தறா உங்க பொண்டாட்டி,'' என்றாள், வள்ளி.

''ஏய் அரசி...'' என்று, என்னை நோக்கி எகிறத் துவங்கியவனின் முன் சென்று, எனக்கு அரணாக நின்றார், மாப்பிள்ளை இல்லை - பிள்ளை!

''ஹலோ மிஸ்டர், மரியாதையா ரெண்டு பேரும் வெளியே போங்க. இல்லேன்னா போலீசை கூப்பிட வேண்டி வரும்,'' கடுங்குரலில் எச்சரித்தார்.

திருமண மண்டபத்தின் செக்யூரிட்டி ஆட்கள், அவர்களை அப்புறப்படுத்தினர்.

பித்தளை தாம்பாளத்தட்டில் என்னை நிற்க வைத்து, பாத பூஜை செய்தாள், என் மகள்.

என் கண்களில், ஆனந்த கண்ணீர் திரண்டது.

எனக்கு பாத பூஜை செய்து கொண்டிருந்த, என் பெண்ணின் நெற்றிச்சுட்டியை சரி செய்து, அவள் நெற்றி வகிட்டில் முத்தமிட்டார், மாப்பிள்ளை.

உறவினர் கூட்டம் சந்தோஷ கரவொலி எழுப்ப, லேசான வெட்கத்துடன் பார்வையை திருப்பிக் கொண்ட நான், இறைவனுக்கு நன்றி சொல்லி, தலை நிமிர்ந்து நின்றேன்.

ஆர். பொற்கொடி






      Dinamalar
      Follow us