/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (5)
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (5)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (5)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (5)
PUBLISHED ON : செப் 01, 2024

எம்.ஜி.ஆருடன் முதன் முதலில் நடித்ததிலிருந்து, கடைசி வரை அவர், எனக்கு நல்ல குருவாக இருந்தார். என் நல்லது கெட்டதுகளில் அவருக்கு பங்குண்டு. நிறைய விஷயங்களில் என்னை திருத்தியவர், எம்.ஜி.ஆர்., தான்.
அப்போதெல்லாம் நான் நிறைய சிரிப்பேன்.
'நீ பொம்பளை பிள்ளை, வளர்ந்து வருகிறவள். பெண் பிள்ளைகள் இப்படியெல்லாம் சிரிக்கக் கூடாது. சிரிப்பதை நிறுத்து, கம்பீரமாக இருக்க வேண்டும்...' என்று, 'அட்வைஸ்' செய்தார்.
அதை, இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன்.
ஆரம்பத்தில், வேறு தயாரிப்பாளர்கள் என்னையும், எம்.ஜி.ஆரையும் வைத்து படம் எடுக்க முன் வரவில்லை என்றதும், 'நானே, உன்னை போட்டு படமெடுக்கிறேன்...' என, முன் வந்தார்.
அதன்படி, நாடோடி மன்னன் படத்தில், என்னை நடிக்க வைத்தார்.
பாதி படத்துக்கு பின், நான் வருகிற காட்சியிலிருந்து படம், கலரில் ஆரம்பிக்கும்.
நாடோடி மன்னன் படம், பெரிய, 'ஹிட்!' அதன்பின், அவருடன் நிறைய படங்களில் நடித்தேன்.
படகோட்டி படப்பிடிப்பிற்காக, கேரளா சென்றிருந்தோம்.
அவருக்கு மீன் என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆனால், கேரளாவில் அவர் மீனே சாப்பிடவில்லை.
'உங்களுக்கு மீனுன்னா ரொம்ப பிடிக்குமே, ஏன் சாப்பிடவில்லை...' என்று கேட்டேன்.
'இல்லம்மா, நான், 48 நாளைக்கு மீன் சாப்பிடப் போவதில்லை...' என்றார், எம்.ஜி.ஆர்.,
'கடவுள் பக்தியே இல்லைன்னு சொல்வீங்க... இப்ப இப்படி சொல்றீங்களே...' என்றேன்.
'எந்த ஒண்ணையும் நினைச்சா சாதிக்கணும் என்பதற்காக இப்படி ஒரு விரதம். 48 நாளைக்கு மீன் சாப்பிடாம இருக்கணும்ன்னு ஒரு தீர்மானம். அதுக்காக இப்ப நான் சாப்பிடாம இருக்கேன்...' என்றார்.
தினசரி அவர் தட்டையே பார்ப்பேன், மீன் சாப்பிடுகிறாரா இல்லையா என்று. ஆயிற்று, அவர் சொன்ன மாதிரியே, 48 நாட்களுக்கு அவர், மீன் சாப்பிடவே இல்லை.
நினைத்தால் அதை சாதித்துக் காட்டும் மன உறுதி உள்ளவர் எம்.ஜி.ஆர்., என்பதற்கு, இது ஒரு சான்று.
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த பெருமை எனக்கு தான். அவருடன் கிட்டத்தட்ட, 26 படங்களில் நடித்திருக்கிறேன். எல்லாமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட். இப்போது கூட, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., ஜோடி என்றே என்னை குறிப்பிடுகின்றனர்.
எம்.ஜி.ஆருக்கு தாராள குணம் நிறைய உண்டு. அரசியலுக்கு சென்ற பின்பும், எம்.ஜி.ஆர்., தம்முடைய தாராள குணத்தை கடைப்பிடித்தார். அதுமட்டுமல்ல, படத்தில் சண்டைக் காட்சி வந்தால், முதலில் தான் நடித்துக் காட்டுவார். பிறகுதான் எங்களை நடிக்க வைப்பார்.
மேலிருந்து குதிப்பது, காருக்கு முன் வந்து விழுவது போன்ற காட்சிகளை, முதலில் தான் செய்து காட்டி விட்டு, பிறகு தான் எங்களை செய்யச் சொல்வார்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என, நிறைய படங்களில் நான் ஒப்பந்தமாகி இருந்த நேரம்.
'அவளுடைய காட்சிகளை எல்லாம் முதல்ல எடுத்திருங்க. பாவம், அவ வேற படங்களுக்கு போகட்டும். பிறகு என் காட்சிகளை எடுத்துக்கலாம்...' என்பார், எம்.ஜி.ஆர்.,
சிவாஜியும், ஜெமினியும் கூட அப்படித்தான் சொல்வர். அதனால் தான், என்னால் எல்லாருடைய படங்களிலும் நடிக்க முடிந்தது.
எம்.ஜி.ஆருடன் நடித்த, எங்க வீட்டு பிள்ளை படம், 25 வாரங்கள் ஓடியது.
ஒரு படம், வெள்ளி விழா படமாக ஓடினால், அந்த படம் ஓடும் எல்லா ஊர்களுக்கும், அதில் பங்காற்றிய முக்கியமானவர்கள் எல்லாம் போய் வருவது வழக்கம். விழா நடைபெறும் தியேட்டரில், ரசிகர்களை சந்திப்போம்.
மதுரையில், நாடோடி மன்னன் படம் ஓடியபோது, அங்கு போயிருந்தோம்.
'பெண்களெல்லாம் வந்திருக்காங்க. அவங்களுக்கு மல்லிகைப்பூ கொண்டு வந்து கொடுங்க. அவங்க வெச்சுக்கட்டும்...' என்ற அளவிற்கு கவனித்துக் கொண்டார், எம்.ஜி.ஆர்.,
அத்தனை பேரையும் கவனித்து கொள்வார். எல்லாருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.
கடலுாரில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது. ரோடு பக்கத்தில் எல்லாரும் நின்று கொண்டிருந்தோம். அப்போது, ஒரு பெண் திடீரென்று ஓடி வந்தாள்.
வந்தவள் என்னை முத்தம் கொடுப்பவள் போல் வந்து, என் கன்னத்தை கடித்து விட்டாள். வலி பொறுக்க முடியாமல், ஓவென்று கதறி விட்டேன்.
அந்த பெண் ஓடிப் போய் விட்டாள்.
கொஞ்சம் தமாஷ் பேர்வழி, நம்பியார். எப்போதும் தமாஷாக பேசி, எல்லாரையும் சிரிக்க வைத்து விடுவார். இந்த விஷயத்தில், 'ஐயையோ, அந்த பொண்ணுக்கு கொஞ்சம் கூட புத்தி இல்லை. உன்னை, 'கிஸ்' பண்ணினதுக்கு பதிலா, என்னை அந்த பொண்ணு, 'கிஸ்' பண்ணியிருக்கக் கூடாதா...' என்றார்.
எல்லாரும் சிரிக்க, நானும் சேர்ந்து சிரித்து விட்டேன்.
நானும், எம்.ஜி.ஆரும் இலங்கை போயிருந்தோம்.
இலங்கையில் எங்களை வரவேற்க, கூட்டமோ கூட்டம்.
'இங்கு, ஜவஹர்லால் நேரு வந்ததற்கு பிறகு, இன்றைக்குதான் இப்படியொரு கூட்டம்...' என்றனர்.
அந்த அளவிற்கு, எம்.ஜி.ஆருக்காக கூடின கூட்டம் அது. இலங்கையில் எல்லா ஊர்களுக்கும் போனோம். 'கோல்ப்' என்ற ஹோட்டலில் தங்கியிருந்தோம்.
கடல் ஓரமாகவே சென்று வருவோம். அப்போது பிடித்த மீனில், மசாலா போட்டு பொரித்து தருவர். அது மிகவும் சுவையாக இருக்கும். எம்.ஜி.ஆர்., விரும்பி சாப்பிடுவார்.
தொடரும்
நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்.
படத்தில் நடித்த, எம்.என்.ராஜத்தின், 'டயலாக் டெலிவரி' மிக நன்றாக இருக்கும். எனக்கு அவர், 'வாய்ஸ்' ரொம்ப பிடிக்கும்.இதேபோல, 'டயலாக் டெலிவரி'யில் இன்னொருவரை சொல்ல வேண்டுமென்றால், விஜயகுமாரி. அவர் போல, கண்ணகி வேடத்தை இன்னொருவரால் செய்ய முடியாது. விஜயகுமாரியும், நானும் நல்ல தோழிகள்.
எஸ்/ விஜயன்