
'பஞ்சர்' கடைக்காரரின் நற்செயல்!
சமீபத்தில், 'டூ -- வீலரில்' வெளியூர் செல்லும்போது, வழியில் ஓரிடத்தில், டயர் 'பஞ்சர்' ஆகியது. அருகில், சாலையோரமாக இருந்த கடையில், 'பஞ்சர்' ஒட்டுவதற்காக அணுகினேன்.
உதவியாளராக இருக்கும் பையனிடம், 'பஞ்சர்' ஒட்டும் வேலையைப் பணித்தார், கடையின் உரிமையாளர்.
அவன், ஒரு காலை விந்தி விந்தி நடக்கும் மாற்றுத்திறனாளி என்பதை, அப்போது தான் கவனித்தேன். அவனை, விரட்டியே 'பஞ்சர்' ஒட்டச் செய்தார், கடை உரிமையாளர்.
அவரின் இரக்கமற்ற செயல், எனக்கு உறுத்தலாக இருந்தது.
'பஞ்சர்' ஒட்டி முடித்ததும், பணம் கொடுக்கும் போது, 'ஒரு மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் இரக்கமின்றி, மிரட்டி, அவனை வேலை வாங்குகிறீர்களே...' என, என் ஆதங்கத்தை தெரிவித்தேன்.
'அவனுக்கு தொழிலில் ஆர்வமும், அக்கறையும் வரவேண்டும். விரைவாக தொழிலைக் கற்றுத் தேற வேண்டும் என்றால், அதற்கான முதல் தேவை, தான் ஒரு மாற்றுத்திறனாளி எனும் குறைபாட்டை, அவன் மறக்கணும். அதைத் தான் நான் செய்து வருகிறேன். மற்றபடி, நீங்கள் நினைப்பது போல், நான் மனிதாபிமானம் இல்லாதவன் இல்லை...' என்றார்.
அவர் சொல்வதிலுள்ள நியாயத்தை உணர்ந்து, தவறாக நினைத்ததற்கு, அவரிடம் வருத்தம் தெரிவித்தேன். அவரின் வழிகாட்டுதலில், தொழிலை விரைந்து கற்று, அவன், தனியாக தொழில் துவங்குவான் என்ற நம்பிக்கையோடு, கிளம்பினேன்!
— -ஆர்.ஜெயசங்கரன், விழுப்புரம்.
இப்படியும் விவசாயத்தை ஊக்குவிக்கலாம்1
புதிதாக அசைவ உணவகம் திறக்கும் முயற்சியில், இடம் பார்த்து, அதற்கான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார், தோழியின் கணவர்.
எதேச்சையாக அந்த பக்கம் சென்ற நான், கடையைப் பார்வையிட்டேன்.
ஹோட்டலின், நான்கு சுவர்களிலும், மீன் வறுவல், சிக்கன் வறுவல், மட்டன் குழம்பு என, பல வகையான உணவு வகைகளின் படங்கள் வர்ணம் தீட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
'மீன் படத்தை வரைவதற்கு பதிலாக, கடலில் அலைகளுக்கு நடுவில் மீனவர்கள், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, மீன் பிடிக்கும் காட்சிகளையும், அவர்கள் படும் கஷ்டங்கள். விவசாயிகள் நிலத்தை உழுது, பாடுபட்டு பயிர் செய்யும் முறைகளையும், சுவரில் வரையலாம்.
'இது, கடையில் சாப்பிட வருவோர், உணவை வீணாக்காமல், கடலிலும், வயலிலும் பாடுபட்டு உழைப்பவர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்வர்...' என, தோழியின் கணவரிடம் கூறினேன்.
'அருமையான யோசனை...' என்றவர், அதையே செயல்படுத்தினார்.
இப்போது, அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன. அனைத்து உணவகங்களிலும், இதை பின்பற்றினால், விவசாயத்தையும், மற்ற தொழிலாளர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இருக்குமே!
—எஸ்.பிரேமாவதி, சென்னை.
சபாஷ் டிராவல்ஸ்!
தாராபுரத்திலுள்ள தோழி ஒருவர், சமீபத்தில், சென்னைக்கு ஒரு வேலையாக வந்தவர், என்னை பார்க்க வந்தார்.
அவருடைய கைப்பையில் இருந்து, மொபைல் போனை எடுக்கும்போது, அதனுடன் ஒட்டிக் கொண்டு இருந்த, 'பிட் நோட்டீஸ்' கீழே விழுந்தது.
எடுத்து படித்தேன்.
அது, ஒரு டிராவல்சின் விளம்பரம்: குறைந்தது, 200 கி.மீ., பயணத்திற்கு, மிகக் குறைவான கட்டணம். 'வெயிட்டிங் சார்ஜ்' கிடையாது; டிரைவர் பேட்டா கேட்க மாட்டோம். 'டோல்கேட்' கட்டணம் தர வேண்டியதில்லை என்ற அறிவிப்பு காணப்பட்டது.
மேலும், வண்டியில் நியூஸ் பேப்பர், வாட்டர் பாட்டில், வாடிக்கையாளரே, பாடலை தேர்வு செய்து கொள்ள, 'ஐ பேட்' மற்றும் 'டிஷ்யூ பேப்பர்' உண்டு.
அதுமட்டுமின்றி, அந்த டிராவல்சில், மாதத்தில் நான்கு முறை வண்டி எடுத்தால், இரண்டு சினிமா டிக்கெட் இலவசம். 700 கி.மீ.,க்கு மேல் ஓடினால், காலை சாப்பாட்டு செலவு முற்றிலும் இலவசம் என்ற அறிவிப்புகளும் இருந்தன.
கூடுதலாக, வயதானோர், உடல் நலமில்லாதோர் மற்றும் கர்ப்பிணிகள், மருத்துவமனைக்கு செல்ல, வண்டி எடுத்தால், டீசல் மட்டும் போட்டு, வாடகைத் தொகையை, ஒரு மாதத்துக்குள் கொடுக்கலாம். இந்த சலுகைகள், ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் உண்டு என்றும் கூறப்பட்டிருந்தது.
படித்து முடித்ததும், தோழியிடம், 'உங்கள் ஊரில், இப்படி ஒரு டிராவல்சா?' என்றேன்.
அவளது, 'ஆமாம்...' என்ற பதிலில், வியந்தேன்.
போட்டி நிறைந்த தொழிலில், புத்திசாலித்தனத்தோடும், மனிதநேயத்தோடும் செயல்படும் டிரால்ஸ் நிர்வாகத்தினரை, மனதார வாழ்த்தினேன்!
— -வீ.குமாரி, சென்னை.