
பா - கே
நீண்ட நாட்களுக்கு பின், 'பீச்'சில் கூடியிருந்தது, நண்பர்கள் குழு. நல விசாரிப்புக்கு பின், மொபைல் போனில் எதையோ சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.
'ஓய், லென்சு... ரொம்ப நாளைக்கு பிறகு சந்தித்துள்ளோம். ஜாலியாக பேசறதை விட்டு, மொபைலை நோண்டிக்கிட்டு இருக்கிறீரே...' என்றார், ராமசாமி அண்ணாச்சி.
'அது ஒண்ணுமில்லப்பா... இந்தியாவில், நம்பர் ஒன் பணக்காரரான, முகேஷ் அம்பானி மகனின் திருமணம் நடந்தது இல்லையா. அதைப்பற்றிய வீடியோக்கள், சமூக வலைதளங்களில், 'வைரலாகி' உள்ளது. அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு ஆடம்பரமாக நடந்தேறியுள்ளது, இத்திருமணம்...' என்று வியந்தார், லென்ஸ் மாமா.
'ஆமாப்பா... நான் கூட பார்த்தேன். கின்னஸ் ரெக்கார்ட்டில் கூட பதிவு செய்யப்பட்டதாமே... உண்மையா?' என்றார், குப்பண்ணா.
'ஹும்... முடி உள்ளவங்க, அள்ளி முடியறாங்க...' என்றார், 'திண்ணை' நாராயணன்.
'ஒரு திருமணத்துக்கு, ஆயிரம், லட்சம், கோடிகள்ன்னு செலவழிப்பதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. இந்தியாவில், திருமண நிகழ்வுகளுக்கு அதிக அளவில் பணம் செலவழிப்பது பற்றி, ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை வெளியாகியிருந்ததை சமீபத்தில் படித்தேன்...' என்றார், அந்தோணிசாமி.
அதைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில், அவர் முகத்தை பார்த்தேன்.
என் எண்ணத்தை புரிந்து கொண்டவர் போல், கூற ஆரம்பித்தார், அந்தோணிசாமி:
இந்தியாவில், திருமண நிகழ்ச்சிகளுக்காக செலவிடப்படும் தொகை எவ்வளவு தெரியுமா? 13 லட்சம் கோடி ரூபாய். ஆனாலும், இந்த விஷயத்திலும், நாம் சீனாவுக்கு அடுத்த படியில் தான் உள்ளோம்.
அங்கு திருமண நிகழ்ச்சிகளுக்கான தொகை, 17 லட்சம் கோடி ரூபாய்.
இதேபோல் மற்றொரு, ருசிகர ஒப்புமை உண்டு.
இந்தியாவில், கல்விக்கு செலவழிப்பதை விட, இரண்டு மடங்கு அதிகமாக திருமண நிகழ்ச்சிகளுக்காக செலவழிக்கிறோம்.
ஆனால், அமெரிக்கா, இதற்கு நேர் எதிர். அங்கு கல்விக்கு, திருமண செலவை விட, இரு பங்கு அதிகம் செலவழிக்கின்றனர்.
இன்று, இந்தியாவில், நடுத்தர குடும்ப திருமணங்களுக்காக ஆகும் செலவு, ஏழு லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை. சினிமா நட்சத்திரங்கள் அல்லது பிரபலங்கள் திருமணம் செய்யும் ஆடம்பரங்களை பார்த்து, தாங்களும், திருமணத்திற்கு பணத்தை வாரி இறைக்க தயாராக உள்ளனர்.
தங்கள் மகன், மகளுக்கு நல்லபடியாய், திருமணம் செய்து வைக்க வேண்டும் என, சேமிக்க ஆரம்பித்து விடுகின்றனர், பெற்றோர்கள்.
சேமிப்பை பயன்படுத்தி, வெற்றிகரமாக திருமணத்தை முடிக்கும்போது மகிழ்கின்றனர்.
அதே சமயம், இன்று, விமானங்களில், கப்பல்களில் நடத்தப்படும் சொகுசு திருமணங்களுக்கும், 'டிமான்ட்' அதிகமாகி விட்டது.
இத்தகைய திருமண நிகழ்ச்சிகளை நடத்தி கொடுக்கும் நிறுவனங்களை பலர் அணுகுகின்றனர். சொகுசு திருமணங்களுக்காக, மூன்று கோடி முதல், 50 கோடி ரூபாய் வரை, கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
பலர், சொந்த ஊரில் திருமணம் செய்தாலும், ஆடம்பரமாய், நாலு பேர் மெச்ச நடக்கணும் என்கின்றனர்.
மேலும், சிலர், கவர்ச்சிமிக்க வித்தியாசமான இடங்களுக்கு, உதாரணமாக, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஏரிகள், கோட்டைகள், அரண்மனைகளில் திருமணத்தை நடத்த விரும்புகின்றனர். காஷ்மீரின் கண்கவர் இடங்களும் இதில் அடக்கம்.
கோவா, கேரளா, உத்தரகண்ட் மற்றும் கர்நாடகாவின் பாரம்பரிய இடங்களிலும் திருமணத்தை முடிக்க விரும்புகின்றனர்.
இதை கச்சிதமாய் முடித்து தர, திருமண அமைப்பு நிறுவனங்கள் தயார்.
இன்று நம் ஊர் திருமணங்களில், மண்டபம், சாப்பாடு கான்டிராக்ட், கலை நிகழ்ச்சிகள், புகைப்படம் என, பல செலவுகள் உள்ளன. நகைகள் மற்றும் துணிமணிகள் இதில் அடங்காது.
- இப்படி கூறி முடித்தார், அந்தோணிசாமி.
'அம்மாடியோவ்... ஒரு திருமணத்துக்கா இவ்வளவு பணத்தை செலவழிக்கின்றனர். ஒரே குடும்பத்தில், இரண்டு, மூன்று பிள்ளைகள் இருந்தால் என்ன செய்வர்...' என்ற எண்ணம் ஏற்பட்டது, எனக்கு.
டெயில் பீஸ்:
ஆடம்பரமாக திருமணம் நடத்த தடைவிதித்துள்ள உலகிலேயே முதல் நாடு, பாகிஸ்தான்.
ப
உழைக்காமலேயே அனைவருக்கும் மாதம்தோறும் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினால், அரசு என்னவாகும்? இதைப்பற்றி, படிக்காத மேதை காமராஜர் அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பேசி உள்ளார்.
காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில், தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில், காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியது:
நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும். தங்கள் இயலாமையை சொல்லி, அரசாங்கம் பண உதவி பண்ணணும்ன்னு கேட்கிறாங்க. எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை.
பண நோட்டு அடிக்கிற மெஷின் எங்க கிட்ட தான் இருக்கு; எவ்வளவு வேண்டுமானாலும் அடிச்சுக்கலாம்னேன். அடிச்சு, உங்க இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்.
சரி, இப்போது, பணம் இல்லாதவங்களே நாட்ல கிடையாதுன்னு வச்சுக்குவோம். கொஞ்ச நாட்களுக்கு பின், கடைத்தெரு பக்கம் போனீங்கன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும். அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் மற்றும் எண்ணெய்ன்னு ஒண்ணும் கிடைக்காது. விவசாய வேலைக்கோ, வேறு எந்த வேலைக்கும் யாரும் வரமாட்டான்.
எப்படி வருவான்னேன்?
பணம் தேவைக்காக தான் உழைக்கவே செய்யறோம். கட்டு கட்டா பணம் இருக்கும்போது எவன் தான் வேலைக்கு வருவான்?
பணத்தை தலை மாட்டில் வச்சுக்கிட்டு, வயித்துல ஈரத்துணியை போட்டுகிட்டு, கெடக்க வேண்டியது தான்.
ஊரே துாக்கம் வராம கெடக்கும். இப்போ, அது மதிப்புள்ள பணம் இல்ல. வெத்து பேப்பர் தான்னேன்; உழைப்பு தான் பணம்ன்னேன். பொருளாதாரத்துக்கு மூல ஆதாரமே, உழைப்பு தான்னேன்.
உழைப்பு இல்லாமல், ஒண்ணுமே கிடைக்காது; எதுவுமே கிடையாது! இப்ப தெரிஞ்சுதா... உழைப்பு இல்லாமல் கட்டு கட்டா பணம் கொடுத்தால், நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு, கதை கந்தலாகி போகும்ன்னேன்.
இவ்வாறு பேசி, அசத்தினார்.
பொருளாதார படிப்பு படிக்காமல், நாட்டு நிலையையும், நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் படிச்ச, ஒரு பாமர மனுஷன் சொன்னது, எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.
இலவசம், இலவசம்ன்னு சொல்லி, மக்களை உழைக்காமல் சோம்பேறி ஆக்குபவர்களுக்கு இது புரியுமா?
— எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.