/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (9)
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (9)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (9)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (9)
PUBLISHED ON : செப் 29, 2024

நான் பேசும் தமிழை கேட்ட சிவாஜி, ஆரம்பத்திலேயே, 'சரோஜா, நீ உன்னுடைய ஸ்டைலிலேயே தமிழ் பேசு. உன்னுடைய தமிழை மக்கள் ஏத்துக்கிட்டாங்க. என் தமிழை ஒரு பக்கம் தள்ளு. நீ இதே தமிழ் பேசு. கொஞ்சம் கூட சேஞ்ச் பண்ணாத...' என்று, சொல்லி விட்டார்.
பணக்கார பெண் போல் காட்சி எடுக்கின்றனர் என்றால், 'உன்னிடம் இருக்கும் நகைகளெல்லாம் போட்டுட்டு வந்துரும்மா. நீ நல்ல பொண்ணு இல்லையா? உன்னுடைய நகையை போட்டுட்டு வந்து நடி...' என சொல்வார்.
'இந்த டிரஸ்ல நீ ரொம்ப அழகாயிருக்கே...' என்று, சில உடைகளை பார்த்ததும் சொல்வார். சில காட்சிகளில் நான் நடிக்கும் போது, 'இது மாதிரி பண்ணும்மா...' என்று, கூறுவார்.
பாலும் பழமும் படம் பார்த்துட்டு, 'என்னை விட நீதான் ரொம்ப நல்லா நடிச்சிருக்க...' என்றார்.
அதே போல, புதிய பறவை படத்தில், அந்த ஒரு டயலாக். இப்ப கூட மலேஷியா, சிங்கப்பூர் என, எந்த வெளிநாடு போனாலும், 'ஒரு தரம் கோபால்ன்னு சொல்லிருங்க...' என்கின்றனர்.
சிவாஜி, கமலாம்மாவுக்குப் பிறகும், இன்று வரை அவர்கள் குடும்பத்தினருடன் மிக நல்ல தொடர்பு உள்ளது. எப்போது நான் சென்னை வந்தாலும், அவர்கள் வீட்டில் சாப்பிடச் சென்று விடுவேன்.
என் கணவர் இறந்த பின், என்னைப் பார்க்க மறுத்துவிட்டார், சிவாஜி.
'மாமா, போய் சரோஜாவை பார்த்துவிட்டு வரலாம்...' என, கமலாம்மா சொல்லு வாங்களாம்.
'இல்ல... அவ நெத்தியில் குங்குமம் இல்லை. தலையில் பூ இல்லை. இப்படிப்பட்ட, சரோஜாவை நான் பார்க்க விரும்பவில்லை. அவ பழைய, சரோஜாதேவியாய் ஆகிற வரைக்கும் நான் பார்க்க விரும்பலைன்னு சொல்லிடு...' என்று சொல்லி உள்ளார், சிவாஜி.
ஸ்ரீஹர்ஷா இறந்து, நான்கு ஆண்டுகள் வரை, சிவாஜி என்னைப் பார்க்கவே இல்லை.
அன்று முதல் தலைக்கு பூ வைப்பதை விட்டு விட்டேன். இப்போதும், நான் தலைக்கு பூ வைப்பதில்லை. நான் பொட்டு வைத்துக் கொள்ள, மூன்று ஆண்டுகள் ஆனது.
எனக்கு, ஜெமினிகணேசனுடன் மட்டுமல்ல, அவர் குடும்பத்துடனும் நெருங்கிய தொடர்பு இருந்தது. குறிப்பாக, அவர் மனைவி, பாப்ஜியுடன் நெருங்கிய பழக்கம் இருந்தது.
கணவர் இறந்த செய்தி கேள்விபட்டதுமே, வந்து என்னை கட்டிப்பிடித்து, ஓவென்று அழுது விட்டார், ஜெமினி கணேசன்.
ஆடிப்பெருக்கு படத்தில் எனக்கு இதே மாதிரி வேடம் தான். திருமணம் ஆன சில நாட்களிலேயே புருஷன் செத்து போய்விடுவார். நான் விதவை ஆவேன். 'ஆடிப்பெருக்கு மாதிரியே ஆயிருச்சே...' என்று சொல்லி அழுதார், ஜெமினி.
நான் தான், ஜெமினியை சமாதானப் படுத்தினேன்.
எல்லாரும் இந்நாட்டு மன்னர் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது.
பொதுவாக இதுபோன்று வெளியூர் படப்பிடிப்பு என்றால், ஜெமினி குடும்பத்தில் எல்லாரும் வந்து விடுவர்.
அப்படி ஒருமுறை, ஜெமினியின் இரண்டு மகள்களான கமலா, ரேவதி இருவரும் வந்தனர். நாங்கள் மூவரும் போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்பினோம். ஜெமினியின் அம்மாவும் எங்களுடன் வந்தார்.
சில கல்லுாரி மாணவர்கள் எங்களை பின் தொடர்ந்தனர்.
படகில் செல்லும் போது, சும்மா இருக்காமல் கொஞ்சம் தண்ணீரை எடுத்து, அவர்கள் மீது தெளித்தாள், கமலா.
கேட்கணுமா?
தண்ணீரை வாரி வாரி எங்கள் மீது அடிக்க ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் இது அதிகமாகி கொண்டே போனது.
பயந்து விட்டார், ஜெமினியின் அம்மா.
படகு தத்தளிக்க ஆரம்பித்தது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
நல்ல வேளையாக துாரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த போலீசார், வேறொரு படகில், அருகில் வந்து அவர்களை விரட்டியடித்து, எங்களை காப்பாற்றினர்.
தண்ணீரில் விழுந்திருந்தால் அவ்வளவு தான்.
அதன்பிறகு, நாங்கள் கரைக்கு திரும்பினோம்.
கரை வந்து சேர்ந்தவுடன், 'உன்னை நம்பி, 30 தயாரிப்பாளர்கள் இருக்காங்க. நீ எப்படிப் போவ? ஒருவேளை உனக்கு ஏதாவது ஆபத்தென்றால் அந்த, 30 தயாரிப்பாளர்களின் கதி என்ன?' என்று திட்டினார், அம்மா.
அப்போது, 'என்னம்மா நீங்க, இதுக்கெல்லாம் போய் சரோஜாவைத் திட்டிக்கிட்டு. அவளும் சின்னக் குழந்தை தானே. அவளுக்கும் ஆசை இருக்காதா? எப்பப் பார்த்தாலும், ஷூட்டிங், ஷூட்டிங்னே இருக்கணுமா? நாங்கள்லாம் இருக்கோம். என்ன ஆகிவிடும். தயவுசெய்து அவளைத் திட்டாதீங்கம்மா...' என்றார், ஜெமினி கணேசன்.
என் பக்கம் திரும்பி, 'சரோஜா, நீ ஆடும்மா. எப்படி வேணும்ன்னாலும் ஆடு. நான் இருக்கேன். நான் வந்து உனக்கு, 'ஹெல்ப்' பண்றேன்...' என்றார்.
பத்திரிகையாளர்களின் கோபத்திற்கு எப்படி ஆளானேன் என்பதையும், அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதையும் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு சமயம், பிரியம் கூட எவ்வளவு தொந்தரவாகி விடுகிறது என்பதற்கு, இது ஒரு நல்ல உதாரணம்.
அந்த நிகழ்ச்சி...
தொடரும்.
நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்
எஸ்.விஜயன்