
குளிர்பான மோசடி... உஷார்!
தியேட்டர் ஒன்றின் கேன்டீனில், புதிதாக சேர்ந்து பணிபுரிகிறார், நண்பர் ஒருவர். அண்மையில் அவரைச் சந்தித்தபோது, அவர் கூறிய தகவல் கேட்டு, அதிர்ச்சியில் உறைந்துப் போனேன்.
அந்த கேன்டீனில், பாப்கார்ன், பப்ஸ், இன்ன பிறவற்றோடு, காகித டம்ளர்களில் நிரப்பப்பட்ட, குறிப்பிட்ட குளிர்பானத்தையும், 'பேக்கேஜ்' என்று குறிப்பிட்டு வழங்குவது வழக்கமாம்.
அப்படி வழங்குவதற்காக, இரண்டொரு நாளில், 'எக்ஸ்பயரி' ஆகவிருக்கிற குளிர்பான பாட்டில்களை, மொத்த விற்பனையாளர்களிடமிருந்து, மிகக்குறைந்த விலைக்கு வாங்குவராம். அதை பாட்டில்களாக விற்பனை செய்யாமல், உடைத்து மொத்தமாக நிரப்பி வைத்து, காகித டம்ளர்களில் ஊற்றி விற்பராம்.
இதே முறையைத் தான், சில ஹோட்டல்களும், குளிர்பான நிலையங்களும் கையாண்டு, 'எக்ஸ்பயரி' ஆகவிருப்பதை, 'ஆபர்' என்ற பொறிக்குள் வாடிக்கையாளர்களை சிக்க வைத்து, கல்லா கட்டுவதாக கூறினார்.
வாசகர்களே... குளிர்பானங்கள் அருந்துவதே உடல் நலத்திற்கு கேடு என்பர். தற்போது, அதையும், பாட்டில்களிலுள்ள காலாவதி தேதி பார்த்து, எச்சரிக்கையோடு அருந்த வாய்ப்பு தராமல், டம்ளர்களில் வழங்கப்படுவதை, தவிர்ப்பதே நல்லது.
— -பொ.தினேஷ்குமார், செங்கல்பட்டு.
பந்தி பரிமாறும் போது...
அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று இருந்தேன். வழக்கம் போல பந்தியில், ஆட்கள் அமர்வதற்கு முன்பே, இலையில் நிறைய பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்தேன். பந்தியில் அமர்ந்த பிறகு, பந்தி வைக்கும் ஆட்கள் வந்து, இனிப்புகளை வைத்தனர்.
சர்க்கரை நோய் காரணமாக சிலர், இனிப்புகளை வேண்டாம் என, மறுத்து விட்டனர். சிலர் கொஞ்சமாக வாங்கி இலையில் வைத்து சாப்பிட்டனர்.
இதுபற்றி திருமண வீட்டாரிடம் கேட்டபோது, 'பந்தியில் ஆட்கள் உட்காரும் முன்பே, உணவுப் பதார்த்தங்களை வைத்து விடுவது, தங்களுக்கு எளிதாக இருப்பதாக, கேட்டரிங் உரிமையாளர் கூறினார். அப்போது, நான் ஒரே ஒரு நிபந்தனை போட்டேன்.
'எல்லா பதார்த்தங்களையும் வைத்து விடுங்கள். ஆனால், இனிப்பு மட்டும் வைக்காதீர்கள். பெரும்பாலானவர்கள் இனிப்பை தவிர்க்கின்றனர். எனவே, ஆட்கள் உட்கார்ந்த பிறகே, இனிப்பு பதார்த்தங்களை வைக்க கூறினேன். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்...' என்றார்.
இந்த யோசனை சரியாக தெரிந்தது. இப்போது பெரும்பாலும் இலையில் வீணாவது இனிப்பு வகைகள் மட்டும் தான்.
பந்தி வைக்கும் ஆட்கள், சாப்பிட ஆட்கள் அமர்ந்த பிறகு, இலையில் இனிப்பு பதார்த்தங்களை தேவை உள்ளவர்களுக்கு கேட்டு வைப்பதால், அதிகமாக இனிப்பு உணவுகள் வீணாவதை தடுக்கலாம். இதை அனைத்து திருமணத்திலும் கடைப்பிடிக்கலாமே!
— பொன்சரவணகுரு, செங்கோட்டை.
கொலு வைப்பவர்களுக்கு சிறு வேண்டுகோள்!
கடந்த ஆண்டு கொலுவுக்கு, மகளின் தோழி வீட்டிற்கு சென்றிருந்தோம். தாம்பூலத்துடன் புடவை, என் மகளுக்கு, வளையல், கம்மல் என, ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம், 200 - 500 ரூபாய் வரை, செலவு செய்தனர்.
அங்கிருந்து விடைபெறும் முன், சிறுவர்கள் சிலர், அந்த வீட்டின் முன் வந்து நின்றனர்.
'இதுங்க வேற, தினமும் தொல்லையா போச்சு. 10:00 மணிக்கு வந்தீங்கன்னா, மிச்ச பிரசாதமிருக்கும், வாங்கிட்டு போகலாம்...' என்று விரட்டினாள், மகளின் தோழி.
அச்சமயம், என் கையில் இருந்த தாம்பூலத்தை பார்த்ததும், மனம் மிகவும் கனத்தது.
ஒரு நாளைக்கு, தாம்பூலத்திற்கு மட்டும், 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்வதாக, பெருமை பேசுவதை விட, ஒரு நாளைக்கு, 200 ரூபாய்க்கு சுண்டல் செய்து, சிறு சிறு பொட்டலங்களாக கட்டி, கொலு பார்க்க வரும், ஏழை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அவர்களின் வயிறும், மனமும் நிறையும்.
இதை, ஏனோ பலர் அறிவதில்லை.
— எஸ்.ரம்யா, சென்னை.