/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம் - தியாக திருவிழா!
/
விசேஷம் இது வித்தியாசம் - தியாக திருவிழா!
PUBLISHED ON : செப் 29, 2024

தனக்காக இல்லாமல், பிறருக்காக வாழ்வது, மிக மிக கடினமான விஷயம். ஆனால், நம் தேசத்தில், மனித குலத்துக்காகவே வாழ்ந்த தியாகசீலர்கள் பலர் அவதரித்தனர். நம் திருவிழாக்கள் கூட, தியாகத்தின் பெருமையை வெளிப்படுத்துகின்றன. அதில் முக்கியமானது, நவராத்திரி.
நவராத்திரியின் போது கோவில்களிலும், வீடுகளிலும் கொலு வைக்கின்றனர். கொலு என்றாலே, மாலை வேளையில் ஒன்று கூடி பஜனை பாடுவது, பூஜை செய்வது.
விதவிதமாய் புடவை கட்டுவது, என்ன சுண்டல் வைக்கலாம், என்ன கலரில் பிளவுஸ் துணி கொடுக்கலாம் என்பதற்காக மட்டுமல்ல. இந்த விழா, நமக்குரிய சிந்தனைக்கான காலமும் கூட.
நாம் ஏன் கொலு மேடையில் பொம்மைகளை அடுக்குகிறோம். ஓர் அறிவு உயிரினங்கள் துவங்கி தெய்வங்கள் வரையிலான எல்லா பொம்மைகளும் இடம் பெறுவது ஏன்?
துர்க்கையைப் போற்றும் விழாவே, நவராத்திரி. உலக உயிர்களுக்கு துன்பம் தந்தான், மகிஷாசுரன். உலகத்தைக் காப்பது தெய்வங்களின் கடமை. அவனை அழிக்க ஒரு பெண் சக்தி தேவைப்பட்டது.
துர்க்கையாக மாறி, அவனை அழிக்க போருக்கு புறப்பட்டாள், பார்வதிதேவி. அப்போது, எல்லா தெய்வங்களும் அவளைச் சுற்றி நின்றனர். தங்கள் சக்தி முழுவதையும் அவளுக்கு அர்ப்பணித்தனர். உயிரற்ற பொம்மை போல் சிலையாய் மாறினர்.
கொலு மேடையைப் பாருங்கள். நடுவில் துர்க்கை, சிங்கத்தின் மேல் வீரமாய் வீற்றிருக்கிறாள். இது பெரிய சிலையாக இருக்கும். மற்ற தெய்வங்கள் அளவில் சற்று சிறியதாய், சுற்றிலுமோ, அருகிலோ நிற்பது போல் வடிவமைத்திருப்பர்.
இது தெய்வங்கள் தங்கள் சக்தியை, பார்வதி தேவிக்கு தாரை வார்த்து விட்டு, அமைதியாய் நிற்கும் கோலம். சக்தி இல்லையேல் ஜீவன் இல்லை. தங்கள் உயிர் பற்றி கவலையில்லை. உலகம் வாழ வேண்டும் என்ற உன்னத நிலையை, நமக்கு கற்றுத் தருகிறது, கொலு மேடை.
மகிஷனை அழித்த துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி என்ற பெயருடன் வெற்றி தேவியாய் வருகிறாள். அவள், தான் பெற்ற சக்தியை மீண்டும் தெய்வங்களுக்கு அளிக்கிறாள். அனைவரும் புத்துணர்ச்சி பெறுகின்றனர்.
அநியாயத்தை அழிக்க, நல்லவர்கள் ஒன்று கூட வேண்டும். உலகம் வாழ, நம் உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்ற அரிய பாடத்தை, நமக்கு கற்றுத் தருகின்றன, நவராத்திரி கொலு மேடைகள்.
நவராத்திரி காலத்தில், நம்மால் ஏதாவது தியாகம் செய்ய இயலுமா என்றால், நிச்சயமாக முடியும். அதுதான், கொலு பொம்மைகள் வாங்கி, அவற்றை தயாரிக்கும் குடும்பங்களை வாழ வைப்பது.
கொலுவுக்கு தான் என்றில்லாமல், குழந்தைகள் விளையாடி மகிழவும், வீட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு பொம்மைகள் வாங்கினால் போதும். லட்சக்கணக்கில் பொம்மைகள் விற்பனையாகும். இதில் கிடைக்கும் வருமானம், பல குடும்பங்களை வாழ வைக்கும்.
தியாகத் திருநாளான நவராத்திரிக்கு வீடுகள் தோறும் கொலு வைத்து, நம்மால் முடிந்த மகிழ்ச்சியை பிறருக்கு கொடுப்போம்.
தி. செல்லப்பா