
பா - கே
கல்லுாரி பேராசிரியராக இருந்து, ஓய்வு பெற்ற நண்பர் அவர். மதுரைவாசி. தற்சமயம், மனவள பயிற்சியாளராக ஊர், ஊராக சென்று கொண்டிருக்கிறார். சமீபத்தில், சென்னை வந்தவர், என்னை சந்திக்க அலுவலகம் வந்திருந்தார்.
அன்று இருந்ததை போலவே, 'டிரிம்' ஆக, ஷர்ட்டை, 'டக் - இன்' செய்து, கம்பீரமாக இருந்தார். தலைமுடிதான், சால்ட் அண்டு பெப்பராக காட்சியளித்தது.
'எப்படி இருக்கிறது உங்கள் புது வேலை?' என்றேன்.
'சிறப்பா, போயிட்டிருக்கு மணி... நிறைய கல்லுாரி மற்றும் ஐ.டி., நிறுவனங்களில் மன வள பயிற்சி அளித்து வருகிறேன். இளம் தலைமுறையினர், சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட, மனசு ஒடிந்து போயிடறாங்கப்பா.
'அந்த மனநிலையை மாற்றியே ஆக வேண்டும். இல்லாவிட்டால், 'எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் இருக்கிறது...' என்று கூறிய, விவேகானந்தரின் கூற்று பொய்யாகிவிடும். சரி... அது இருக்கட்டும், நீ எப்படி இருக்கிற... லென்ஸ் மாமா எங்கே காணோம்?' என்றார்.
'ஒரு, 'அசைன்மென்ட்' க்கு போயுள்ளார். இப்ப வந்துடுவார்...' என்றேன்.
நண்பரின் பேவரிட்டான, இஞ்சி டீயும், மசால் வடையும் வரவழைத்துக் கொடுத்தேன். ரசித்து சாப்பிட்டார். கொஞ்ச நேரம் பல விஷயங்களை பேசியவர், 'ஒரு பேனாவையும், பேப்பரையும் எடுத்துக்க...' என்றார்.
நான் அவற்றை எடுப்பதற்குள், அருகிலிருந்த, உ.ஆசிரியைகள் இருவர், பரீட்சைக்கு தயாராவது போல், பேப்பர், பேனாவை எடுத்து வைத்துக் கொண்டனர்.
'நான் கேட்கிற, ஐந்து கேள்விகளுக்கு உடனே, பதில் எழுதணும். ரொம்ப நேரம் எடுத்துக்க கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்க கூடாது. முடியலன்னா, அடுத்த கேள்விக்கு உடனே போயிடணும்...' என்றபடி, கேள்விகளை அடுக்கினார்.
1. உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர்கள், ஐந்து பேரை எழுதவும்.
2. 2004 மற்றும் 2009 லோக்சபா தேர்தலில் பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில், நான்கு பேரின் பெயரை எழுதவும்.
3. சர்வதேச அளவில் நடக்கும் அழகிப் போட்டிகளில் வென்ற இந்திய பெண்கள் நான்கு பேர் பெயர்கள்.
4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த, 10 பேர் பெயரை சொல்லுங்க.
5. கடைசியா, ஆஸ்கர் விருது வாங்கிய, ஐந்து நடிகர் மற்றும் நடிகையர் பெயரை சொல்லுங்க.
சில பதில்கள் மட்டுமே எழுதியிருந்தனர், உ.ஆசிரியைகள்.
'உங்கள் பதில் உங்களுக்கு திருப்தியா இருந்ததா... இல்லை தானே?' என்று கேட்டு, அதற்கான விளக்கத்தையும் கூறினார்.
நம்மில் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை.
இத்தனைக்கும் இவங்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல. அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள்; மிகப்பெரிய சாதனையாளர்கள்.
ஆனால், கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன. சாதனைகள் மறக்கப்படுகின்றன. விருதுகளும், பாராட்டுகளும் அவர்களுடனேயே புதைந்து போய் விடுகின்றன.
'சரி... இப்போது இன்னொரு, ஐந்து கேள்விகள் கேட்கிறேன். பதில் எழுத முடிகிறதா பாருங்கள்...' என்றார்.
1.உங்கள் பள்ளிக் காலத்தில் மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்கள் பெயர்.
2.உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய, மூன்று நண்பர்கள் யார், யார்?
3.உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த, சிலரது பெயரை கூறுங்கள்.
4.உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றிய சிலரை கூறுங்கள்.
5. நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்.
சில மணித்துளிகளில், பதில்களை பட்டென்று எழுதி குவித்த, உ.ஆசிரியைகள் எழுதியதை வாங்கி பார்த்தார். அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து இருந்தனர்.
'இதிலிருந்து என்ன தெரிகிறது? உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் பணக்காரர்களோ, புகழ்பெற்றவர்களோ அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல.
'உங்கள் மீது அக்கறை செலுத்தியவர்கள் தான். மற்றவர்களை மறக்கும் நீங்கள், இவர்களை மறப்பதில்லை. பணம், பட்டம், பதவி, இவற்றின் மூலம் பெறும் புகழ் மற்றும் வெற்றியோ நிலையானதல்ல.
'பிறருக்கு உதவி செய்து, பிறர் மீது அக்கறை கொண்டு, ஒருவர் பெறும் புகழ் மற்றும் வெற்றியே நிலையானது.
'உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு, அவர்கள் ஒருவராவது உங்கள் பெயரையும் சொல்லுவர் என்றால், நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று வீட்டீர்கள் என்று அர்த்தம்.
'எனவே, அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க வேண்டுமென்றால் எப்போதும் நல்லதே நினையுங்கள்; எல்லாருக்கும் நல்லதையே சொல்லுங்கள். நல்லதையே செய்யுங்கள்.
'கோவிலுக்கு போய், கும்பிட்டு கடவுள் மனசுல இடம் பிடிக்கிறது இருக்கட்டும். முதலில் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனசுல நமக்கு இடம் இருக்கான்னு பார்க்கணும்; கடவுள் தானா தன் மனசுல இடம் தருவார்...' என்று சொல்லி முடித்தார், நண்பர்.
அப்போது, லென்ஸ் மாமா உள்ளே வர, அவருடன் பேச ஆரம்பித்தார், நண்பர்.
அவர் கூறியதில் இருந்த உண்மையை அசைப்போட்டேன், நான்.
ப
திருவிளையாடல் படத்தில், தண்டோரா அடிப்பவன், 'பாண்டிய மன்னனின் சந்தேகத்தை தீர்த்து வைப்பவருக்கு ஆயிரம் பொற்காசு பரிசு...' என்று கூற, நடிகர் நாகேஷ் அதைப் பெற அடித்த கூத்துக்களை நாம் அனைவரும் பார்த்து ரசித்தோம். ஆனால், அந்த பொற்காசுகளின் மதிப்பு என்ன தெரியுமா?
இந்த பொற்காசுகள் எல்லாம் பரிசாக கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை. கோதுமைத் தானிய அளவு முதல், நெற்றிப் பொட்டு அளவு வரை தான், இவை இருக்கும். தங்கத்தில் தான் இருக்க வேண்டும் என்று இல்லை.
பல ராஜ்ஜியங்களில் கடைத் தெருவுக்கு சென்றால், இந்த பொற்காசுகள் செல்லாது. அரசரின் கஜானாவில் மட்டுமே செல்லும். அவற்றை கஜானாவில் கொடுத்து, அப்போது வழக்கத்தில் உள்ள செல்லும் காசுகளையோ, பொருட்களையோ வாங்கிக் கொள்ளலாம். ஏறக்குறைய வங்கியில், 'செக்' மாற்றுவது போல.
இதனால், தங்களுக்குக் கீழ் இருந்த சமஸ்தானங்கள், பொற்காசுகள் உருவாக்கி கொள்வதற்கு அனுமதித்து இருந்தனர், ஆங்கிலேயர்கள்.
புதுக்கோட்டை சமஸ்தானம் கடந்த, 1995ம் ஆண்டு வரை, அம்மன் காசு என்று அழைக்கப்படும் நெற்றிப் பொட்டு அளவுள்ள காசை அச்சடித்தது. நவராத்திரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு இந்த காசுகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு ஏதாவது, பணத்தேவைகள் வந்தால், சமஸ்தான கஜானாவில் மாற்றிக் கொள்ளவும் வசதி செய்து தந்தனர்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.