/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (11)
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (11)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (11)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (11)
PUBLISHED ON : அக் 13, 2024

ராஜ்கபூருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் சந்தோஷமாக இருந்தேன். ஆனால், வேறொரு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட தீவிபத்தில் லேசாக காயம் அடைந்து, ஓய்வில் இருந்தேன்.
நான் நடிக்க இருந்த வேடத்தில், வைஜயந்திமாலாவை வைத்து படப்பிடிப்பு நடந்ததை அறிந்து, எனக்கு மிகுந்த வருத்தம். தவிர, அந்த சமயத்தில் நான் மிகவும் மெலிந்து விட்டேன்.
ராஜ்கபூர் நடித்த, நஸ்ரால் படமும், எல்.வி.பிரசாத் இயக்கி, நான் நடித்த, சசுரால் படமும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு, இரண்டும் ஒரே நாளில் வெளியாகின. நஸ்ரால் படம், 15 வாரங்களும், சசுரால் படம், 40 வாரங்களும் ஓடின.
இதுபோல் என் பல படங்கள், போட்டா போட்டியில் வெற்றி பெற்றன.
திலீப்குமார் நடித்த, லீடர் படம் அப்போது வெளியானது. நான், சுனில் தத் உடன் நடித்த படமும் அப்போது வெளியாயிற்று. இரண்டு படங்களுமே கறுப்பு வெள்ளை தான். லீடர் படம் அந்த அளவிற்கு ஓடவில்லை.
அந்த சமயத்தில், பேட்டா பேட்டி என்ற படத்தை எடுத்தார், எல்.வி.பிரசாத்.
'இந்தப் படம் மட்டும், 25 வாரங்கள் ஓடினால், பம்பாயில் விழா எடுப்பேன். பெரிய விழா ஏற்பாடு செய்து, அதிக பணம் தருவேன்...' என்று கூறினார், பிரசாத்.
தமாஷுக்கு சொல்கிறார் என, நான் நினைத்தேன். ஆனால், படம் 25 வாரங்கள் ஓடிய பின், பம்பாயில் விழா எடுத்தார். சொன்னபடி, 25 வாரங்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அதிகம் கொடுத்தார்.
பிரசாத்திற்கு, பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக, அவருக்கு மோதிரம் ஒன்றை பரிசளித்தார், என் அம்மா. மோதிரம் பெரிதாக இருப்பதாக சொல்லி, அந்த மோதிரத்திலிருந்து, அவர் வீட்டு பெண்களுக்கு, மூன்று மோதிரங்களை செய்தார்.
இப்போதும் அவர் வீட்டுப் பெண்கள், 'சரோஜா, உங்க அம்மா கொடுத்த மோதிரம் இது...' என்று, பார்க்கும் போதெல்லாம் கூறுவர்.
என் திருமணத்திற்கு வந்திருந்தார், பத்மினி.
பத்மினியின் கணவர் ராமச்சந்திரனும், என் கணவர் ஹர்ஷாவும் நல்ல நண்பர்கள்.
ஒருமுறை நாங்கள் அமெரிக்கா சென்றிருந்தபோது, 'ஒரு, 'சர்ப்ரைஸ்' விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்...' என்றார், ராமச்சந்திரன்.
விருந்து பிரமாதமாக இருந்தது. விருந்துக்கு பின், 'இது தான், சர்ப்ரைஸ்...' என கூறி, நான் நடித்த, பைகாம் படத்தை போட்டு காண்பித்தார்.
அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு அந்த படத்தை பார்த்தோம். அந்த ஆனந்தத்தை என்றைக்கும் மறக்க முடியாது.
பத்மினியும், நானும், தேனும் பாலும் படத்தில் நடிக்கும் போது, படப்பிடிப்பின் இடையே, பத்மினியின் கணவருக்கு அமெரிக்காவில், 'ஹார்ட் அட்டாக்' என்ற செய்தி வந்தது.
படப்பிடிப்பை ரத்து செய்து போனவர், சிறிது காலம் கழித்து திரும்பினார். பத்மினி, அப்போது அமெரிக்கவாசியாக இருக்கவில்லை.
அடிக்கடி அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்குமாக போய் வந்து கொண்டிருந்தார்.
'ஹார்ட் அட்டாக்'கிற்கு பின், 'நீ அமெரிக்காவுக்கே வந்து விடு...' என்று, அவரது கணவர் கூறியுள்ளார்.
பத்மினிக்கு இங்கு இருக்கும் எல்லாவற்றையும் விட்டுப் போவதில் சிரமமிருந்தது. அவராக முடிவெடுக்க முடியவில்லை.
சிவாஜியிடம் கேட்டார். என்னை கைக்காட்டி, 'அவளுக்கு வயது குறைச்சல். சின்னவளாய் இருந்தாலும் எல்லாருக்கும் உபதேசம் பண்ணுவாள். நீ அவளிடம் கேளு...' என்று கூறியுள்ளார், சிவாஜி.
நான் வயதில் சிறியவள். திருமணம் கூட ஆகவில்லை. ஆனாலும், பத்மினியை பார்த்து, 'உங்களுக்கு இப்போது வயது என்ன?' என்று கேட்டேன்.
'நாற்பது...' என்றார்.
'வயது ஏற ஏற, சினிமாவில் வாய்ப்புகள் குறையும். 'கிளாமர்' போய்விடும். வயதான பின், கதாநாயகி வேடங்கள் கிடைக்காது. கதாநாயகியையோ, கதாநாயகனையோ சார்ந்த வேடங்கள் தான் தருவர். அதனால், நீங்கள் இப்போதே, நடிப்பதை விட்டு, அமெரிக்கா சென்று, கணவரை கவனியுங்கள்...' என்றேன்.
அமெரிக்கா சென்ற பத்மினி, அங்கிருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில், 'நான், இங்கு, 'டான்ஸ் கிளாஸ்' வைத்து, நடத்திக் கொண்டிருக்கிறேன். நல்ல வருமானம் வருகிறது. சரியான நேரத்தில், சரியான முடிவைச் சொன்னாய். என் கணவரும் இப்போது நன்றாக இருக்கிறார்...' என்று, எழுதியிருந்தார்.
அந்தக் கடிதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது.
விதி ஒவ்வொரு சமயம், நாக்குக்கு மேல் என்ன சூட்சமத்தை கொண்டு வரும் என்று சொல்ல முடியாது.
நானும், கணவர் ஹர்ஷாவும் அமெரிக்கா சென்றிருந்தோம். வழக்கம் போல், பத்மினி வீட்டிற்கு போனோம்.
காரில் செல்லும்போது, 'உங்க கணவர், இப்போது எப்படி இருக்கிறார்...' என்று, கேட்டேன்.
'நன்றாக இருக்கிறார். 'ஹார்ட் அட்டாக்' வந்து, 10 ஆண்டுகள் ஆகின்றன. 10 ஆண்டுகளுக்கு பிறகு, 'ஹார்ட் அட்டாக்' வராதாம். தவிர, நாங்கள் இப்போது, நியூயார்க்கில் இருக்கிறோம். நியூயார்க் நகரம், ஆஸ்பத்திரிகளுக்கு பிரபலமானது. இப்போது எந்த தொந்தரவும் இல்லை...' என்றார், பத்மினி.
வார்த்தைகள் எப்படி எப்படியோ போய், அயல் நாட்டில் இறந்து போனால், பாடியை வீட்டிற்கு அனுப்புவரா, அங்கேயே புதைத்து விடுவரா என்றெல்லாம் பேசியபடி, வீடு சேர்ந்தோம்.
எங்களுக்காக காத்திருந்தார், ராமச்சந்திரன். இரவு உணவு முடிந்து, மறுபடியும் நான் நடித்த ஒரு ஹிந்தி படம் பார்த்த பின், புறப்படத் தயாரானோம்.
எங்களுக்காக நியூயார்க் சிட்டிக்கு டிக்கெட் போட்டு வைத்திருந்தார், ராமச்சந்திரன்.
நாங்கள் அவரிடமிருந்து விடை பெற்று, மேலும், 15 நாட்கள் வெவ்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பும் சமயத்தில், பத்மினியிடம் இருந்து போன் வந்தது.
அந்த அழைப்பு, பத்மினியின் கணவர் ராமச்சந்திரனின் மறைவு செய்தியை தாங்கி வந்திருந்தது.
எனக்கு ஒரே அதிர்ச்சி.
என்ன இப்படி ஆகிவிட்டதே என, வருந்தினேன். 10 ஆண்டுகள் ஆகிய பின், திரும்பவும், 'ஹார்ட் அட்டாக்' வராது என, பத்மினி, தன் வாயாலேயே சொன்னாரே?
ராமச்சந்திரனை இந்தியாவிற்கு அனுப்பாமல் அங்கேயே புதைத்து விட்டனர்.
எனக்கு, பத்மினியை பார்க்கும் தைரியமே வரவில்லை. ஒரு மாதத்திற்கு பிறகு தான், பத்மினியை சென்று பார்த்தேன்.
இது நடைபெற்று, மூன்று மாதங்களுக்கு பின், இந்தியா திரும்பினார், பத்மினி.
பத்மினியை போலவே, என் நெருங்கிய தோழி, பி.சுசீலா.
என் படப்பிடிப்பு ஏதாவது ஒரு தளத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்றால், ஸ்டுடியோவின் இன்னொரு பகுதியில், பாடல்களின் ஒலிப்பதிவு நடந்து கொண்டிருக்கும். அங்கு, பி.சுசீலா பாடிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால், நான் ஆஜராகி விடுவேன். அதே போல, நான் நடிக்கிறேன் என்று தெரிந்தால், இடைவேளை சமயத்தில், அவர் ஆஜராகி விடுவார்.
தொடரும்
-நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்
எஸ். விஜயன்