
பா - கே
பள்ளிக்கூடத்தில், தமிழ் ஆசிரியராக இருந்து, ஓய்வு பெற்றவர், அவர். தமிழ் இலக்கியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவ்வப்போது ஆசிரியரை சந்திக்க, அலுவலகம் வருவார். அப்படி வரும் போது, எங்களோடும் சிறிது நேரம் பேசிவிட்டு, எங்களுக்கு தமிழில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தீர்த்து வைத்துவிட்டு செல்வார்.
அன்று, ஆசிரியரை சந்திக்க வந்தவர், எங்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். தன் கேபினில், ஆசிரியர் கொடுத்த, 'கார்வான்' ரேடியோவில், பழைய பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.
ரேடியோவில் ஒலித்த, கண்ணதாசன் எழுதிய பாடலை கேட்ட, தமிழ் ஆசிரியர், 'இது எட்டுத்தொகை நுால்களுள் ஒன்றான குறுந்தொகையில், பதுமனார் என்ற புலவர் பாடிய ஆறாவது பாடல். 'நள்ளென்றன்றே யாமம்; சொல் அவிந்து இனிது அடங்கினரே... ஓர் யான் மன்ற துஞ்சா தேனே...' பாடலை, உல்டா செய்து எழுதியுள்ளார், கவியரசர்.
'அதாவது, உறக்கம் வராமல் தவிக்கிற தலைவியின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்த பாடல் வரி. இதைத்தான், தாய் சொல்லை தட்டாதே படத்தில், 'பூ உறங்குது பொழுதும் உறங்குது - நீ உறங்கவில்லை நிலவே...' என, கதாநாயகி பாடுவது போல் எழுதியிருந்தார், கண்ணதாசன்.
'அதேபோல், குறுந்தொகை, 11வது பாடலில், மாமூலனார், தலைவனை பிரிந்த தலைவியின் புலம்பலை, 'கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாடொறும் ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே...' என்று எழுதியிருந்தார். இதை அடிப்படையாக வைத்து, 'எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு... அதைத்தானே கொண்டு வந்தேன் நான் கண்ணோடு...' என்று, நெஞ்சிருக்கும் வரை படத்தில் எளிய நடையில் எழுதியுள்ளார், கண்ணதாசன்.
'அடுத்து, குறுந்தொகை, 366வது பாடல். பேரிசாத்தன் எனும் புலவர் இப்படி எழுதுகிறார்...
பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர்
வயின் சால்பு அளந்து அறிதற்கு யா அம்
யாரோ? அழுத கண்ணள் ஆகி, பழுது
அன்று அம்ம இவ் ஆயிழை துணிவே!
'தலைவியின் காதல், வீட்டினருக்கு தெரிந்துவிட, அவளை சிறைப்படுத்துகின்றனர். அவளது துயர நிலையை பார்த்து, விசாரிக்கிறாள், தோழி. தலைவியே தன் நிலையை விளக்கும் பாடல், இது.
'இதைத்தான், 'மலரே மலரே தெரியாதா, மனதின் நிலைமை புரியாதோ... எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்... கண்களில் தோன்றும் காட்சியில் ஒன்றாய் கலந்தே நின்றாரே...' என்று, தேன் நிலவு படத்திற்காக எழுதியிருந்தார்.
'இன்னொரு பாடலான...' என்று ஆரம்பிக்க, இடைமறித்த, லென்ஸ் மாமா, 'குறுந்தொகை, கலித்தொகை நுால்களில் உள்ள பாடல்களைத்தான் கண்ணதாசன் காப்பியடித்தார் என்று சொல்றீரே... பொருள் புரியாமல், கோனார் உரை உதவியோடு தான் அதை படித்து, தேர்வு எழுதினோம். அப்போதே மறந்தும் போய் விட்டது.
'புரியாமல் இருந்ததை எளிமைப்படுத்தி, இனிய இசையுடன் கொடுத்ததால் தான் கண்ணதாசன் பாடல்களை ரசிக்க முடிகிறது.
'நீர் பாடம் நடத்தும்போது, புரியும்படி எளிமையாகத்தான் சொல்லிக் கொடுத்தீரா? இப்போது, ஒப்பிட்டு கொண்டிருக்கிறீரே...' என்று விளாசி தள்ளினார், லென்ஸ் மாமா.
'நீர் சொல்வதும் உண்மை தான்...' என்றார், தமிழ் ஆசிரியர்.
'தமிழ் இலக்கியங்கள் தான், என் திரை இசை பாடல்களுக்கு அடிப்படையாக இருந்துள்ளது...' என்று, கவியரசர் கண்ணதாசன் முன்பு, ஒரு பேட்டியில் கூறியிருந்தது நினைவுக்கு வந்தது, எனக்கு.
ப
'அப்புசாமி - சீதாப்பாட்டி' புகழ், பாக்கியம் ராமசாமி எழுதிய, 'சிரிக்காத மனமும் சிரிக்கும்' புத்தகத்தில் படித்தது:
* மொபைல்போனை சேர்ந்தாற்போல், இரண்டு மணி நேரம் காதில் வைத்துக் கொண்டிருந்தால், காது, கண் மற்றும் மூளை போன்ற உறுப்புகள் பாதிக்கப்படும்.
* உங்கள் வீட்டில் குடி தண்ணீருக்கு, 'பியூரிபையர்' உபயோகப்படுத்துகிறீர்களா? தொடர்ந்து உபயோகப்படுத்தினால், கேன்சர் வரும்.
* கம்ப்யூட்டருக்கு முன், இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக உட்காராதீர்கள், ஆபத்து.
* தலைக்கு, டை அடிக்கிறீர்களா? தோலில் அலர்ஜி ஏற்படுத்தி, சொரியாசிஸ் நோயாளி போல ஆகிவிடுவீர்கள்.
* 'நான் - ஸ்டிக்' பாத்திரமா உபயோகப் படுத்துகிறீர்கள்? ஜாக்கிரதை. மேல் பூச்சு துளி தேய்ந்தாலும், 'பாய்சன்!'
* சமைத்ததை, 'பிரிஜ்'ஜில் வைத்தால், அத்தனையும் உடம்புக்கு கெடுதல்.
இப்படியாக, நாம் எந்தப் பொருளையாவது விரும்பி சவுகரியமாக இருக்கிறதே என்று நினைத்து வாங்கி பயன்படுத்தும் போது, உச்சந் தலையில் எண்ணெய் காய்ச்சி ஊற்றுகிற மாதிரி எதையாவது சொல்லி, பயமுறுத்துவதையே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறது, ஒரு கும்பல்.
எந்த ஒரு முன்னேற்றமான விஷயம் மார்க்கெட்டுக்கு வந்தாலும், கூடவே, அதற்கு எதிர் பிரசாரம் தொடர்ந்து விடுகிறது.
'குரோசின்' மாத்திரைக்கு கூட, இப்படி ஒரு பழி வந்தது. குரோசினா... ஜாக்கிரதை! கேன்சர் வரும் வாய்ப்பு உண்டு.
கொசு விரட்டியாக ஒரு புகையோ, எண்ணெயோ கண்டுபிடிக்கப்பட்டு, மார்க்கெட்டுக்கு வந்து, நம் வீட்டு வாசப்படியை அடைந்து உள்ளே நுழையும் முன், 'கொசுவர்த்தியால், கொசுக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அதைப் பயன்படுத்தும் பயனாளிகளுக்குத்தான், ஆஸ்துமா, மூச்சடைப்பு மற்றும் சுவாச சம்பந்தமான, இன்னும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திடாத பல நோய்கள் வருகின்றன...' என, எச்சரிக்கை வெளியிட்டு விடுகின்றனர்.
நண்பன் ஒருவனிடம், இது பற்றி விவாதித்தேன்.
'எச்சரிக்கைகாரர்கள் அவர்களது, தொழிலை செய்கின்றனர். சில சமயம் வியாபாரப் போட்டியில் இப்படியெல்லாம் தயாரிப்பாளர்களே கூட செய்வதுண்டு. அதைக் கண்டு நுகர்வோர்கள் மிரளக் கூடாது.
'மேலும், சாப்பிடுகிற பொருட்களில் பயமுறுத்துபவர்களின் பங்கு இன்னும் அதிகம். 'அந்த எண்ணெயை உபயோகப்படுத்துகிறீர்களா? அய்யய்யோ! எப்பேர் பட்ட எண்ணெயானாலும் கொழுப்பு பெருகி, இதயத்தை அடைத்து, க்ளோசாகி விடுவீர்கள். ஆலிவ் எண்ணெய் வேண்டுமானால் பயன்படுத்தலாம்...' என்று பதில் வரும்.
'ஆகவே, சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி, நம் உடலில் எதிர்ப்பு சக்தி ஊறிவிடும். கவலைப்பட வேண்டாம்...' எனக் கூறி முடித்தான், நண்பன்.
மொத்தத்தில் பார்த்தால் மனிதனின் சராசரி ஆயுள், பழங்காலத்தை விட, இப்போது அதிகமாகி உள்ளது. 80 வயதை கடந்த பெரியவர்கள் கும்பலாக, ஜோக் அடித்துக் கொண்டு, கலகலப்பாக காலை நேரத்தில், 'வாக்கிங்' போகின்றனர்.
நானும், அவ்வப்போது, அவர்களின் எண்ணிக்கையை பார்ப்பேன். யாராவது, 'டிக்கெட்' எடுத்துவிட்டாரா என்று. ஆனால், நாளுக்கு நாள், 8-0களின் எண்ணிக்கை பெருகுகிறதே தவிர, குறையவில்லை. பயமுறுத்தல்களின், 'பாச்சா' இவர்களிடம் பலிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
- இது எப்படி இருக்கிறது?