
அலிபாத்து ஷபின், கல்லிடைக்குறிச்சி: 'இந்த காலத்தில் யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; உதயநிதிக்கு நான் அறிவுரை கூற ஒன்றும் இல்லை...' என, கனிமொழி எம்.பி., கூறி உள்ளாரே...
அறிவுரை கூறினால் ஏற்றுக் கொள்ள மறுக்கும் வயது என்ற காரணமாக இருக்குமோ!
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி: 'இரண்டு தொழிலதிபர்களுக்காக மட்டும் தான், பா.ஜ., அரசு இயங்குகிறது...' என, காங்., ராகுல் கூறி இருக்கிறாரே...
பிர்லாவையும், தற்போதைய முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானியையும் வளர்த்தது, காங்கிரஸ் தான்!
இல்லை என்று, சொல்லச் சொல்லுங்களேன், பார்ப்போம்!
கே.சக்ரபாணி, சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், பாரத பிரதமரை சந்தித்து பேசும்போது, எந்த மொழியில் பேசியிருப்பார்; தமிழா, ஆங்கிலமா அல்லது ஹிந்தியா?
பிரதமருக்கு தமிழ் தெரியாது; முதல்வருக்கு ஹிந்தி தெரியாதே... அதனால், ஆங்கிலத்தில் பேசி இருப்பர்!
* என்.ஜாக்ரினா, மதுரை:'செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை, வேறு மாநிலத்துக்கு மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என, பா.ம.க., ராமதாஸ் கூறியிருப்பது பற்றி?
சரியாகத் தான் சொல்லி இருக்கிறார்!
ரா.காசிநாதன், விருதுநகர்:விடுமுறை இல்லாமல், 365 நாட்களும் நம் நாளிதழ் வெளிவருகிறதே! எப்படி சாத்தியம்?
முதலாளிகளாகிய நீங்கள் இருக்கும் போது, எங்களுக்கு எதுவுமே சாத்தியம் தான்!
ஜெ.ரவிக்குமார், காங்கேயம்:நீங்கள், 'தினமலர்' நாளிதழில் முதன்முதலாக எழுதியது எது?
பத்தாம் வகுப்பு படிக்கும் போது, வகுப்பு முடிந்ததும், 'தினமலர்' அலுவலகம் வந்து, யு.என்.ஐ., மற்றும் பி.டி.ஐ., ஆங்கில செய்தி ஏஜென்சிகளிடமிருந்து, டெலிபிரின்டரில் வரும் செய்திகளை, தமிழில் மொழிமாற்றம் செய்வேன்; செய்தி ஆசிரியர் ஒருவர் சொல்லிக் கொடுத்தார்!
எஸ்.மகேசன், மதுரை:எட்டாம் வகுப்பு படிக்கும் போது, கார் ஓட்டியதாக, செப்., 29, 'வாரமலர்' இதழில் பதில் எழுதியுள்ளீர்கள்... 14 வயதில் ஏது லைசென்ஸ்?
லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதற்காக, முருங்கைக் குச்சியால், பின்னங்காலில் இரண்டு அடி கொடுத்தார், என் தந்தை.
அதன் பிறகு, லைசென்ஸ் வாங்கிய பிறகே, காரைத் தொட்டேன்!
* மொ.நல்லம்மாள், கோவை:திருவனந்தபுரத்தில், அந்த அரசுக்கு எதிராக, 'தினமலர்' நாளிதழ் போராடியதாகக் கூறி இருந்தீர்கள். அப்போது, 'தினமலர்' நாளிதழின் விற்பனை எப்படி இருந்தது?
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமோகமாக இருந்தது!