
''அம்மா, 'பேமிலி ட்ரீ'ன்னா என்னது மா? 'சார்ட்'ல அதை வரைஞ்சு எழுதிட்டு வரச் சொன்னாங்க, எங்க மிஸ்,'' என, வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்த, 6 வயது, விக்ரம் கேட்டதும், வீட்டில் அனைவரின் கவனமும் அங்கே திரும்பியது.
''அது ஒண்ணுமில்லை, விக்ரம். ஒரு மரத்துல எப்படி நிறைய கிளைகள் இருக்குமோ, அதே மாதிரி நம்ம குடும்பத்துல யாரெல்லாம் இருக்காங்க அப்படிங்கறதை, ஒரு மரம் மாதிரி படம் வரைஞ்சு, அதுல எல்லாரை பத்தியும் எழுதணும். அவ்வளவு தான் கண்ணா,'' என்றாள், வர்ஷா.
''ஹை சூப்பரா இருக்கு. இப்பவே எழுதிடலாம் மா.''
''முதல்ல, நீ இந்த வீட்டுப்பாடத்தை சீக்கிரம் எழுது. நான் அதுக்குள்ள, 'சார்ட்' எடுத்துட்டு வந்து, மரம் வரைஞ்சு வைக்கறேன். அப்புறம் அதுல எழுதலாம்,'' என, உள்ளே இருந்து வெள்ளை நிற, 'சார்ட்' பேப்பரையும், ஸ்கெட்ச் பென், கலர் பென்சில் எடுத்து வந்தாள். ஒரு பெரிய மரத்தையும், பல கிளைகளையும் வரைந்தாள், வர்ஷா.
குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய விபரங்கள் எழுதுவதற்காக ஒவ்வொரு கிளையிலும், இலை போல் பெரிதாக வரைந்தாள். அதைப் பார்க்கும் போதே, விக்ரமின் ஆவல் அதிகமானது.
முதலில் அவன் பெயர், படிக்கும் வகுப்பு எழுதினான், விக்ரம். அடுத்து அப்பா, அம்மா என, ஒவ்வொருவரைப் பற்றிய விபரங்களை கேட்டு எழுதினான்.
''அம்மா, அடுத்து தாத்தா பேர் எழுதணுமா? சபேசன், எழுதிட்டேன். தாத்தா இப்போ வேலையே எதுவும் பண்ணலையே, என்ன எழுதணும்?''
''டேய், செல்லப் பேராண்டி. இப்ப வேலைக்கு போகலேன்னா என்ன, இவ்வளவு ஆண்டு வேலை பண்ணியிருக்கேன்ல. 'ரிடையர்டு மேனேஜர்'ன்னு எழுது,'' என்றார், சபேசன்.
வர்ஷா, 'ஸ்பெல்லிங்' சொல்ல, எழுதி முடித்தான், விக்ரம்.
''அம்மா, பாட்டி பேரு, கல்யாணி, கரெக்ட்டா? பாட்டி என்ன வேலை பண்றாங்க, என்ன எழுதணும்?''
''ஹோம் மேக்கர்ன்னு எழுது, விக்ரம்.''
''ஹோம் மேக்கர்ன்னா என்னம்மா?''
''வீட்டுல எல்லாத்தையும் கவனிச்சுக்கறாங்க இல்ல. அதைத்தான், 'ஹோம் மேக்கர்'ன்னு சொல்றோம்.''
''பாட்டி, அம்மா மாதிரி நீயும், ஏன் வேலைக்குப் போகல? போயிருந்தா அதை எழுதியிருக்கலாமே, பாட்டி.''
'ஹோம் மேக்கர்'ன்னு எழுதுவதில், விக்ரமுக்கு அவ்வளவாக திருப்தியில்லை என்பதை, அவன் கேள்விகளிலேயே புரிந்து கொண்டாள், கல்யாணி. அவருக்கும் அது சங்கடமாகத்தான் இருந்தது. வாழ்க்கையில் இவ்வளவு ஆண்டுகளை கடந்து வந்த பிறகு, 70 வயதில், தன் பேரன் இப்படி ஒரு கேள்வியை கேட்பான் என, எதிர்பார்க்கவில்லை.
கடந்து வந்த காலங்களில் சந்தர்ப்ப சூழ்நிலையால், தன் அடையாளங்களை தொலைத்து கொண்டதை, இந்த குழந்தையிடம் என்னவென்று சொல்வது. மவுனமாக காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தார், கல்யாணி.
''அம்மா, 'ஹோம் மேக்கர்'க்கு பதிலா வேற ஏதாவது எழுதலாமா?''
''உங்க பாட்டிக்கு வீட்டு வேலையை விட்டா வேற என்ன தெரியும். 'ஹோம் மேக்கர்' தான் கரெக்ட்,'' என்றார், தாத்தா சபேசன்.
இதைச் சொல்லி முடிக்கும் போது, அவரது முகத்தில் ஒரு இளக்காரமும், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற கர்வமும் சேர்ந்து இழையோடியது. இது, மற்றவர்களுக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம். அவருடன், 40 ஆண்டுகளுக்கு மேலாக சம்சாரம் செய்து கொண்டிருக்கும், கல்யாணிக்கு புரியாமல் இல்லை.
திருமணமாகி வந்தது முதல், கல்யாணியின் ஒவ்வொரு கனவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தவர், சபேசன் தான். அவரைப் பொறுத்தவரை, தன்னைவிட தன் மனைவி எந்த விதத்திலும் உயர்வாக இருந்து விடக் கூடாது. அவளை யாரும் பாராட்டி விடக் கூடாது. அவள் எதிலும் நல்ல பெயர் வாங்கி விடக் கூடாது.
தன்னால் மட்டும் தான் எல்லாம் முடியும். தனக்குக் கீழ் தான், தன் மனைவி என்ற குணம், அவர் ரத்தத்தோடு ஊறிப் போயிருந்தது. அதை மாற்ற கல்யாணியால் இயலவில்லை. அவளது எழுத்துத் திறமை, அழகாகப் பாடும் குரல் வளம் என, அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்தவர், சபேசன்.
கல்யாணி நன்றாக கதை எழுதுவார் என்பது, இன்று வரை அவர் பெற்ற வாரிசுகளுக்குக் கூடத் தெரியாது. காலத்தின் ஓட்டத்தில், கல்யாணி, மூட்டைகட்டி வைத்த, தன் திறமைகளை எல்லாம் மறந்து போயிருந்தார். ஆனால், இன்று ஏனோ பேரன் கேட்ட கேள்விக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என, அவர் மனம் குறுகுறுத்தது.
''அம்மா, 'ஹோம் மேக்கர்'ன்னு போடறதுக்கு பதிலா, 'சிங்கர்'ன்னு போடட்டுமா? தினமும் பாட்டி தானே பாட்டு பாடி, என்னை துாங்க வைக்கறாங்க. அப்புறம் கதை கூட நல்லா சொல்றாங்க. 'ஸ்டோரி டெல்லர்'ன்னும் போடலாம், இல்ல,'' என, ஆர்வம் பொங்க கேட்டான், விக்ரம்.
வர்ஷா பதில் சொல்வதற்கு முன், சபேசனும், கணவன் அஜய்யும் போட்டி போட்டு, அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
''டேய், விக்ரம், குழந்தையை துாங்க வைக்கறதுக்காகப் பாட்டு பாடறது, கதை சொல்றதெல்லாம் எல்லார் வீட்டுலேயும் பண்ணுவாங்க. நான் கூட, உனக்காக நிறைய தடவை பாட்டு பாடியிருக்கேன். அதையெல்லாம் எழுதுவாங்களா?'' என்றார், சபேசன்.
''ஆமா, விக்ரம், தாத்தா சொல்றது சரி. இதெல்லாம் எல்லாரும் பண்றது தான். அதையெல்லாம் எழுத வேண்டாம். எல்லாத்துக்கும் சேர்த்து, 'ஹோம் மேக்கர்'ன்னு போடு. சரியா இருக்கும். எதுக்கு இவ்ளோ கேள்வி கேட்கற? சீக்கிரம் எழுதி முடி,'' என்றான், அஜய்.
முட்டிக்கொண்டு வந்த அழுகையுடன், அனைத்தையும் கவனித்து கொண்டிருந்தார், கல்யாணி. அவரால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.
''விக்ரம் கண்ணா, 'சிங்கர், ஸ்டோரி டெல்லர்'ன்னு, போட வேண்டாம். 'ரைட்டர்'ன்னு எழுது. உனக்கு நான் சொல்ற கதையெல்லாம் நானே எழுதின கதைகள் தான். அதனால, 'ரைட்டர்'ன்னு போடு.''
இனம் புரியாத ஒரு நிறைவு கிடைத்தது, கல்யாணிக்கு. இவ்வளவு ஆண்டுகளாக அடையாளத்தை தொலைத்து, வெறும் குடும்பப் பொறுப்புகளை சுமப்பது மட்டும் தான் தெரியும் என, முத்திரை குத்தி வைத்திருந்தார், சபேசன்.
அதை உடைத்து, தனக்கான அடையாளம் இது தான் என, தன் பேரனின் எழுத்தின் மூலம் புதுப்பித்த ஈடில்லா சந்தோஷம், அவர் முகத்தில் மின்னியது. கூடவே, கண்களிலும் கண்ணீர் கோர்த்து நின்றது. குனிந்து தன் வேலைகளைத் தொடர ஆரம்பித்தார். ஆனால், கல்யாணியை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர், சபேசனும், அஜயும்.
வர்ஷாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு நேரம் குழம்பிக் கொண்டிருந்த விக்ரம், சந்தோஷமாக எழுதி முடித்துவிட்டு, எழுந்து ஓடிவந்து, கல்யாணியின் கால்களைக் கட்டிக் கொண்டான்.
''நீங்க, 'ரைட்டரா' பாட்டி! நீங்க, எனக்கு சொன்ன கதை எல்லாம் நீங்களே எழுதியதா? இவ்ளோ நாள் ஏன், இதெல்லாம் சொல்லவே இல்லை. நான் நாளைக்கு என் நண்பர்களிடம் எல்லாம் சொல்லப் போறேன்.
''எங்க பாட்டி, 'ரைட்டர்'ன்னு பெருமையா சொல்வேன். ஏன், பாட்டி நீங்க எழுதின கதையெல்லாம் புத்தகமா போடல? போட்டிருந்தா, ஹாரி பாட்டர் மாதிரி ரொம்ப, 'பேமஸ்' ஆகியிருக்கும். நான் பெரியவன் ஆனதும், உங்க கதையெல்லாம், 'புக்'ல போடறேன்,'' என்றான், விக்ரம்.
பேரனை வாஞ்சையோடு கட்டிக் கொண்டு, பூரித்து போனார், கல்யாணி. தன் அடையாளத்தை, பேரன், அவன் நண்பர்களிடம் சொல்லிப் பெருமைப் படுவதாக சொன்னது அவருக்கு மிகப்பெரிய விருதாகத் தோன்றியது.
நிமிர்ந்து கணவரை ஆழமாகப் பார்த்தார். குற்ற உணர்வோடு தலையைக் குனிந்து கொண்டார், சபேசன்.
''அம்மா, நீங்க எழுத்தாளரா? கதை எல்லாம் எழுதுவீங்களா? இவ்ளோ நாளா எங்ககிட்ட கூட, சொன்னதில்லை. இப்போ பேரன்கிட்ட மட்டும் சொல்றீங்க. ஏன், இவ்வளவு நாளா எதுவும் எழுதல? எனக்கு, அக்காவுக்கு சொன்ன கதையெல்லாம் நீங்க எழுதினதுன்னு ஏன் சொல்லல?'' என்றான், அஜய்.
சபேசனுக்கு மனம் பரபரத்தது. தான், கல்யாணியை அடக்கி வைத்ததை, குடும்ப உறுப்பினர்கள் முன் அவள் போட்டு உடைத்து விடுவாளோ என்ற பயம் எட்டிப் பார்த்தது. தன்னைப் பற்றி தவறான எண்ணம் அவர்களுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று கலங்கினார், சபேசன்.
''சொல்லக் கூடிய சந்தர்ப்பம் அமையல, அவ்வளவு தான், அஜய். வீட்டு வேலைகளே சரியா இருக்கு. எழுதறதுக்கு நேரமில்லை. நீங்க எல்லாம் குழந்தைகளா இருக்கும் போதே எல்லாத்தையும் விட்டுட்டேன்.
''உங்களை வளர்த்து ஆளாக்கறது, வீட்டுப் பொறுப்புகள்ன்னு அப்படியே காலம் ஓடிருச்சு. அதனால, அதை யார்கிட்டேயும் சொல்லணும்ன்னு எனக்கு தோணல. அவ்வளவு தான்,'' என, வெகு இயல்பாக கூறினார், கல்யாணி.
இரவு உணவு தயாரிப் பதற்காக சமையல் அறைக்கு போனார், கல்யாணி. ஆனால், அவர் மனதில் என்றும் இல்லாத ஒரு பெரிய நிறைவும், பெருமையும் தனக்கான அடையாளத்தை வெளிப்படுத்திய மகிழ்ச்சியும் இருந்தது.
அம்மாவுக்கு பிடித்தது, அவரின் தனித்தன்மை ஆகியவற்றையெல்லாம் இவ்வளவு ஆண்டுகள் தெரிந்து கொள்ளாமல் இருந்ததை நினைத்து வெட்கப்பட்டான், அஜய்.
மனைவியை இவ்வளவு காலம் அடக்கி வைத்ததை எண்ணி, முதல் முறையாக வருத்தப்பட்டார், சபேசன்.
கல்யாணி அவரைக் காட்டிக் கொடுக்காமல், அந்த சூழ்நிலையை வெகு இயல்பாக கையாண்டது, அவரை கூனி குறுகச் செய்தது. அடையாளம் தொலைத்த தன் மனைவியின் வலியை உணர்ந்த தருணம், சபேசனின் கண்கள் குளமாகின.
ஸ்ரீவித்யா பசுபதி
வயது: 50,
படிப்பு: எம்.ஏ., பி.எட்., - எம்.ஏ., (தமிழ்) சைவ சித்தாந்தம் - டிப்ளமோ.
சொந்த ஊர்: கோவை.
இதுவரை, இவர் எழுதிய சிறுகதை தொகுப்பு, கவிதை தொகுப்பு மற்றும் குறுநாவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. நம்பிக்கை நாயகி, புதுமைப்பித்தன் விருது மற்றும் தமிழினியாள் விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். லட்சியம்:துவண்டு இருக்கும் மனங்களை ஆறுதல்படுத்தும் வகையில், தன் படைப்புகள் இருக்க வேண்டும் என்பது, இவரது லட்சியம்.
கதைக்கரு பிறந்த விதம்: தனக்கான அடையாளத்தைத் தொலைத்து ஏங்கும் பல பெண்களை பார்த்ததன் விளைவாக உதித்தது. கதையை வாசிக்கும் ஒரு சிலரேனும், தங்கள் தனித்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்கிறார்.