
ஏ.ஆர்.ரஹ்மானின் நவீன இசை தயாரிப்பு கூடம்!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை, மும்பை மற்றும் லண்டன் என, பல இடங்களில், சொந்தமாக ஸ்டூடியோக்களை வைத்திருக்கிறார். தற்போது, கும்மிடிபூண்டிக்கு அருகே உள்ள கவரப்பேட்டையில், 'யூ.எஸ்.டிரீம்' -என்ற பெயரில், நவீன இசை தயாரிப்பு கூடத்தை திறந்து உள்ளார்.
இதில், ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து நவீன இசை தொழில்நுட்பங்களும் உள்ளன. இசைத்துறையில் ஹாலிவுட்டுக்கு இணையாக இந்திய படங்களின் தரத்தை உயர்த்தவே, தான் இந்த முயற்சியில் இறங்கி இருப்பதாக கூறுகிறார், ஏ.ஆர்.ரஹ்மான்.
— சினிமா பொன்னையா
மீண்டும் தமிழில், கங்கனா ரணாவத்!
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான, தலைவி படத்தில் நடித்த, ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத், அதன்பிறகு, சந்திரமுகி - 2 படத்தில் நடித்தார். தற்போது, மீண்டும், தலைவி படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கும், லைட் என்ற படத்தில் நடிக்கப் போகிறார், கங்கனா.
'முதல் இரண்டு படங்களும் தோல்வி அடைந்த போதும், இந்த முறை வெற்றி பெற்று காட்டுவேன்...' என்கிறார், கங்கனா ரணாவத்.
எலீசா
எம்.பி.பி.எஸ்., படித்து, சினிமாவுக்கு வந்த நடிகையர்!
தற்போது, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், சாய் பல்லவி, ஜார்ஜியாவில் எம்.பி.பி.எஸ்., படித்தவர். ஆனால், படித்து முடித்தவுடன், நடிகை ஆகிவிட்டார். அதேபோன்று தான், இயக்குனர் ஷங்கரின் மகள், அதிதி ஷங்கரும் படித்து முடித்ததும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.
இதேபோல், தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோரும், எம்.பி.பி.எஸ்., படித்து விட்டு, சினிமாவில் நடித்து வருகின்றனர்.
எலீசா
ஹீரோவாகும் அனிருத்!
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, மூன்று மொழி படங்களுக்கும் இசை அமைத்து வரும், இசையமைப்பாளர், அனிருத், அவ்வப்போது சில படங்களின் பாடல் காட்சிகளிலும் தலைகாட்டி வருகிறார்.
தற்போது, அனிருத்துக்கு, 'ஹீரோ'வாக நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, இசை ஆல்பம் உருவாக்கி அதில், தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா உடன் இணைந்து நடனமாடப் போகிறார். அதற்கு கிடைக்கும், 'ரெஸ்பான்ஸ்'சை அடுத்து, 'ஹீரோ' ஆக சொல்லி நடிப்பதற்கும் தயாராகி வருகிறார், அனிருத்.
சி.பொ.,
நெகட்டிவ் ரோலில் நட்சத்திர தம்பதி!
கல்கி 2898 ஏடி என்ற படத்தை அடுத்து, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும், ஸ்பிரிட் என்ற படத்தில், இரண்டு வேடங்களில் நடிக்கிறார், பிரபாஸ். அவரது, 25வது படமாக இப்படம் தமிழ், ஹிந்தி உட்பட, எட்டு மொழிகளில் தயாராகிறது.
குறிப்பாக, இந்த படத்தில் பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான சைப் அலிகான், கரீனா கபூர் ஆகிய இருவரும் வில்லன் மற்றும் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
— சினிமா பொன்னையா
கருப்பு பூனை!
மெரினா நடிகருடன், இரண்டு படங்களில் நடித்த, தேசிய விருது நடிகை மீண்டும் அவருடன் நடிக்க கல்லெறிந்து வந்தார். ஆனால், நடிகர் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, சமீபத்தில் ஒருநாள், தன் பிறந்தநாள் பார்ட்டி என்று சொல்லி, ஸ்டார் ஹோட்டலில் நடிகருக்கு சோமபானம் விருந்து கொடுத்திருக்கிறார், அம்மணி.
விடிய விடிய சரக்கு அடித்த நடிகர், வீட்டிற்கு கிளம்பும் போது, மீண்டும், 'டூயட்' பாடுவது குறித்து ஒரு பிட்டு போட்டு உள்ளார், அம்மணி. ஆனால் நடிகரோ, 'சரக்கடிக்க அழைத்தால் எப்போது வேண்டுமானாலும் வருவதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால், மீண்டும் சேர்ந்து நடிப்பதற்கு மட்டும் ஆசைப்படக் கூடாது. அப்படி ஆசைப்பட்டால் நட்பை முறிச்சிக்குவேன்...' என்று, 'கட் அன்ட் ரைட்' ஆக சொல்லிவிட்டு, அம்மணிக்கு, 'கல்தா' கொடுத்து விட்டார், மெரினா நடிகர்.
சினி துளிகள்!
* திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகு, 'ஹீரோயின்' வாய்ப்புகள் கிடைக்காததால், தெலுங்கு சினிமாவில், 'கேரக்டர் ரோல்'களில் நடிக்க துவங்கியுள்ளார், காஜல் அகர்வால்.
* தன் அபிமான ஹீரோகள் நடிக்கும் படங்களை தியேட்டருக்கு சென்று பார்த்துவிட்டு, படம் குறித்த கருத்துக்களை அவர்களிடத்தில் சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார், கீர்த்தி சுரேஷ்
அவ்ளோதான்!