/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஞானானந்தம் - என்றும் வெல்லும் தர்மம்!
/
ஞானானந்தம் - என்றும் வெல்லும் தர்மம்!
PUBLISHED ON : அக் 13, 2024

பாரதப் போரின் முதல் நாள், ஒருபுறம், துரியோதனன் அணியினரும், மறுபுறம் பாண்டவர் சேனைகளும் அணிவகுத்து நின்றனர். அப்போது, தான் அணிந்திருந்த போர் கவசங்களையும், ஆயுதங்களையும், தேரில் வைத்த மாவீரன் தர்மர், கீழே இறங்கி, நிராயுதபாணியாக கைகளைக் கூப்பியவாறு, கவுரவர் சேனையை நோக்கி நடந்தார்.
இதைப் பார்த்து, தேரிலிருந்து கீழே குதித்து, தர்மரை பின் தொடர்ந்தான், அர்ஜுனன். வேறுவழியின்றி மற்ற சகோதரர்களும், கண்ணனும் அவரை பின் தொடர்ந்தனர்.
ஒரு வேளை தமக்கே உரிய இயல்பின்படி, கருணை மேலிட்டு, போர் வேண்டாம் என, தர்மர் தீர்மானித்து விட்டாரோ என்ற சந்தேகம், அவர்களுக்கு வந்தது.
தர்மரிடம், 'அண்ணா... எங்களை விட்டு, இப்படி ஆயுதம் ஏதும் ஏந்தாமல் பகைவரை நோக்கிப் போகலாமா?' என்று கேட்டான், அர்ஜுனன்.
ஆனால், மோனத்தவத்தில் மூழ்கியிருந்தவர் போல், ஏதும் பேசாமல் தொடர்ந்து நடந்தார், தர்மர்.
எதிரணியில் இருந்தவர்கள், நிராயுதபாணியாக தர்மர், தங்களை நோக்கி வருவதை பார்த்து, 'அடடா, இந்த தர்மன் போருக்கு பயந்து போய் சமாதானம் பேச வருகிறான் பார்...' எனக்கூறி, பரிகாசமாக சிரித்தனர்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல், பீஷ்மர் இருந்த இடம் நோக்கி சென்றார், தர்மர்.
அவருடைய பாதங்களை தொட்டு வணங்கி, 'யாராலும் வெல்ல முடியாத மகாவீரரே, தங்களோடு போரிட நேர்ந்துள்ள துரதிர்ஷ்ட நிலையை பொறுத்து, எங்களை ஆசீர்வதியுங்கள்; போர் துவங்க அனுமதி தாருங்கள்...' என்று வேண்டுகோள் விடுத்தார், தர்மர்.
அவருடைய செயலால், நெகிழ்ந்து போன, பீஷ்மர், 'நான், கவுரவர்கள் பக்கம் நின்று போரிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஆனாலும், உனக்கு தோல்வி இல்லை...' என்று சொல்லி, தர்மரின் சிரம் தொட்டு ஆசி வழங்கினார்.
இதேபோல், துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் மற்றும் மாமன் சல்லியனையும் வணங்கி ஆசி பெற்றார், தர்மர்.
யுத்த பூமியாக இருந்தாலும், கால சூழ்நிலையில் நமக்கு வேண்டியவர்கள் எதிரியாக மாறிவிட்டாலும், ஒருவன் தன்னுடைய குருவையும், தம் வம்ச பெரியோரையும் நிந்திக்காமல் வணங்குவது, மனிதனின் புற ஒழுக்கச் அறச் செயல்களில் ஒன்று. அத்தகைய புற ஒழுக்க அறச்செயலில், எவன் ஒருவன் வழுவாமல் இருக்கிறானோ அவனை, வெற்றி திருமகள் அணைத்துக் கொள்வாள்.
பி. என். பி.,