
சிறந்த அணுகுமுறை!
உறவினரின் மகன், தன், 10 வயதில், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு, ஊரைவிட்டு ஓடிவிட்டான். காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, நாளிதழ், போஸ்டர் விளம்பரம் என, உறவினரும் அவனைத் தேடி கொண்டிருந்தனர்.
தொடர்ந்து, 10 ஆண்டுகள் விடாமல் தேடியதன் பலனாக, ஒரு வழியாக அவனை, வெளி மாநிலத்தில் கண்டுபிடித்தனர்.
வீட்டிற்கு அவனை அழைத்து வந்தவர், மண்டபத்தில் விழா ஒன்றை ஏற்பாடு செய்தார். அவருடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்து குடும்பத்தினர் என, அனைவருக்கும் அழைப்பு விடுத்து, 'கேக்' வெட்டி கொண்டாடி, விருந்தளித்தார்.
வந்திருந்த அனைவரையும் அவனுக்கு அறிமுகம் செய்து, அவனோடு புகைப்படமும் எடுத்துக்கொள்ள செய்தார்.
நிறைவாக, அனைவரிடமும், 'அவன் வீட்டை விட்டு ஓடிப்போன விஷயத்தை, இத்தோடு மறந்து விடுங்கள். அவனிடம் அதையே மீண்டும் மீண்டும் நினைவூட்டி, மன உளைச்சலைத் தரவேண்டாம். நடந்தது நடந்து விட்டது. அதை கெட்ட கனவாக நினைத்து, மறந்து விடுவோம்.
'இனி, நடப்பவை நல்லவையாக நடக்கட்டும். அவனுடைய சிறப்பான எதிர்கால வாழ்க்கைக்காக, மனதார வாழ்த்துங்கள்...' என்று, வேண்டுகோள் வைத்து, அட்சதையை வழங்கினார், உறவினர்.
ஒரு தந்தையாக, மகனின் மன நிலையைப் புரிந்து, சிறப்பான அணுகுமுறையை கையாண்ட உறவினரை எண்ணி மகிழ்ந்தோம். அவர் மகனை, வாழ்த்திவிட்டு வந்தோம்.
- வி.முருகன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
'காஜா' தொழிலில் அசத்தும், திருநங்கையர்
தோழியும், அவளது கணவரும் தையல் தொழில் செய்கின்றனர். அன்று, அவர்களது கடைக்கு போயிருந்தேன். அப்போது, திருநங்கை ஒருவர், சட்டை, ஜாக்கெட் என சிலவற்றை தோழியிடம் தந்து, குட்டி நோட் ஒன்றில், எதையோ எழுதி தந்துவிட்டு சென்றார்.
தோழியிடம் அது குறித்து கேட்டேன்.
'இந்த திருநங்கை, 'காஜா பட்டன்' செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் மட்டுமல்லாமல், மூன்று திருநங்கையர் சேர்ந்து கூட்டாக, இந்த தொழிலை செய்து வருகின்றனர்.
'ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஏரியாவுக்கு சென்று, அங்குள்ள டெய்லர் கடைகளில், ஜாக்கெட், சட்டை என துணிகளை சேகரித்து, காஜா பட்டன் வைப்பது, 'எம்மிங்' செய்வது, ஊக்கு வைப்பது, 'அயனிங்' செய்வது என, அனைத்து வேலைகளையும் செய்து, திரும்ப கடைக்கே கொண்டு வந்து தருகின்றனர்.
'அவர்கள் செய்து தரும் வேலைகளை, நோட்டில் எழுதி வைத்து, மாத இறுதியில் வந்து பணம் வாங்கி கொள்வர்.
'இப்படி அவர்களிடம் துணிகளை தருவதால், எங்களுக்கு நேரம் மிச்சமாகி, கூடுதலாக, இரண்டு, மூன்று ஆடைகளை தைக்க முடிகிறது. சிறு சிறு வேலைகளில் தான், அதிக நேரம் செலவாகும். அந்த வகையில், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....' என்றாள், தோழி.
திருநங்கையரின், வித்தியாசமான கூட்டு முயற்சியும், உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணமும், என்னை வெகுவாக கவர்ந்தது.
இந்த சமுதாயத்தில், பிழைப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது என்பதை, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டிய அந்த திருநங்கையரை மனதார வாழ்த்தினேன்.
- அ.மீனாட்சி, கன்னியாகுமரி.
கணவரின் நினைவாக நற்பணி!
பெங்களூருவில் பணிபுரியும் மகனைப் பார்க்க சென்றிருந்தேன்.
குடியிருப்புக்குள் நுழையும்போது, 70 வயதைக் கடந்த பெண்மணி ஒருவர், காம்பவுண்ட் சுவர் அருகே, பள்ளம் தோண்டி, மரக்கன்று நடுவதை கவனித்தேன்.
மகனிடம், இதுபற்றி விசாரித்தேன்.
'பாட்டியின் கணவர், அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். ஐந்தாண்டுகளுக்கு முன், நுரையீரல் புற்றுநோயால் காலமாகி விட்டார். அவரின் நினைவாக, ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில், தன் கைப்பட ஒரு மரக்கன்று நடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
'அதுமட்டுமன்றி, மாதந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம், ஒரு ஆண்டிற்கு, 12 ஆயிரம் மரக்கன்றுகளை, பல்வேறு குடியிருப்புகளுக்கும், பள்ளி, கல்லுாரி மற்றும் அறக்கட்டளைகளுக்கும், இலவசமாக வழங்கும் நற்பணியை செய்து வருகிறார்.
'இதற்காகவே, அவருக்கு சொந்தமான இடத்தில், ஒரு நர்சரி வைத்திருக்கிறார். இதுவரை, ஒரு லட்சம் மரக் கன்றுகள் வழங்கி இருக்கிறார்...' என்றான்.
காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிக்கப்படும். எனவே, கணவரின் நினைவு நாளில், சுத்தமான காற்றுக்கு வழிவகுக்கும் மரங்களை நட்டு வளர்க்கும் மகத்தான பொதுநலப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அந்த பாட்டியை, பாராட்டினேன்.
-வீ.குமாரி, சென்னை.