/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (19)
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (19)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (19)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (19)
PUBLISHED ON : டிச 08, 2024

சரோஜாதேவியின் வளர்ப்பு மகள் புவனேஸ்வரி, தன் மகன் கவுதமை, பூரண் பிரதிக்ஞா பள்ளியில் சேர்க்க சென்றபோது, சரோஜாதேவியை அழைத்து வரும்படி கூறியுள்ளார், சுவாமிகள்.
'சரோஜாதேவி இப்ப எங்கேயும் போறதில்லை...' என்று சொல்லியிருக்கிறாள், புவனேஸ்வரி.
'நான் அழைச்சேன்னு சொல்லி, கூப்பிட்டு வா...' என்று கூறியுள்ளார், சுவாமிகள்.
ஒருநாள் மாலை, அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.
அவரைப் பார்த்ததுமே எனக்கு அழுகை வந்தது.
அழுகையை நிறுத்தியதும், 'ஹர்ஷா போயிட்டார்... நீங்க எவ்வளவு துக்கப்பட்டிருப்பீங்கன்னு ஒரு கணம் நினைச்சுப் பாருங்க... அதேநேரம், அவருக்கு பதில், நீங்க இறந்திருந்தால், ஹர்ஷா எவ்வளவு துன்பப்பட்டிருப்பார் என்பதையும் யோசித்து பாருங்க.
'அவர், இத்தனை துக்கத்தை அனுபவிக்க வேண்டுமா? அவருக்கு பதில், அவரது துக்கத்தை, இப்ப நீங்க அனுபவிக்கிறீங்க என்பதை மனதில் வையுங்கள்...' என்றார், சுவாமிகள்.
அவர் கூறியது, சரியென பட்டது. அன்றிலிருந்து, என் துக்கத்தை ஆற்றிக் கொள்ள சுவாமிஜியை பார்த்து பேசி வரத் துவங்கினேன்.
ஒருநாள், 'நீங்க மறுபடியும் உங்களது வழக்கமான வேலைகளில் ஈடுபடுங்கள். வேலையில் மூழ்கும் போது, உங்களது கவலைகளின் சுமை குறைந்து, அமைதி கிடைக்கும். உங்க கணவர் ஹர்ஷா பெயரில், ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்யுங்க...' என்று யோசனை கூறினார், சுவாமிஜி.
ஹர்ஷாவிற்கு ரொம்ப பிடித்தது, கல்வித்துறை!
அது தொடர்பாக, ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.
பூரண் பிரதிக்ஞா பள்ளியில் அப்போது பள்ளிக் கட்டடம் கட்டிக் கொண்டிருந்தனர். அங்கு, ஒரு கம்ப்யூட்டர் ஹால் கட்ட வேண்டும் என்பது, சுவாமிகளின் விருப்பம்.
'ஸ்ரீஹர்ஷா பெயரில் நானே ஒரு கம்ப்யூட்டர் ஹால் கட்டித் தருகிறேன்...' என்றேன்.
'நிறைய செலவாகுமேம்மா...' என்றார், சுவாமிகள்.
'பரவாயில்லை... என் நகைகளை விற்றாவது பணம் தருகிறேன்...' என்றேன்.
'பெண் பிள்ளைகளுக்காக உறவினர் கொடுத்த நகைகளை விற்பது சரியல்ல; வேண்டாம். கடவுள் ஏதாவது வேறு வழி பண்ணுவார்...' என்றார்.
'இல்ல... இல்ல... கம்ப்யூட்டர் ஹாலே கட்டுவோம்...' என்றேன்.
கையிலிருக்கும் பணத்தை வைத்து, முதலில் வேலையைத் துவங்க தீர்மானித்தேன்.
பேராசிரியர், யு.என்.ஆர்.ராவ் தான், கம்ப்யூட்டர் ஹாலை வடிவமைத்தார். கட்டடம் கட்ட துவங்கினோம். ஒரு கட்டத்தில் பணம் போதவில்லை. என்ன செய்வது என்று ஒரே யோசனை!
கடைசியில், 'ஏதாவது செய்து, பணம் பெற்று முடித்து விடுங்கள்; பின், நான் அதைக் கொடுத்து விடுகிறேன்...' என்று கேட்டுக் கொண்டேன்.
கட்டட வேலைகள் பூர்த்தியானது.
திறப்பு விழாவுக்கு ஹர்ஷாவின் நண்பர்கள், உறவினர்கள் எல்லாரையும் அழைத்தேன். எல்லாருக்கும் இது மிகவும் பிடித்திருந்தது; மகிழ்ச்சியாகவும் இருந்தது.
எனக்கும் மனதில் ஏதோ ஒரு அமைதி, சமாதானம் வந்தது போல் இருந்தது.
அப்படியே, பெங்களூரு யுனிவர்சிட்டியில், ஹர்ஷாவின் பெயரில் ஒரு, 'ஸ்காலர்ஷிப்' துவங்கினேன். அதில், முதலில், சினிமாத் துறையினருக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றேன்.
நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை.
என்னுடைய இன்றைய வாழ்க்கை, சினிமா தந்தது. சினிமாவுக்கென்று நான் எதுவும் செய்ததில்லை. சினிமாத்துறையும் சரிவர இல்லை. எதுவும் அங்கே நிரந்தரம் இல்லை. திடீரென்று, ஒருவர் உச்சத்துக்கு போவார்; திடீரென்று கீழே விழுவார்.
எப்படி மேலே போயினர், எப்படி கீழே வந்தனர் என்று, எதுவும் சொல்ல முடியாது. நடிகர் - நடிகையர் மட்டுமின்றி, ஏராளமான தொழிலாளர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள், டெக்னீஷியன்கள், திரைக்குப் பின் உழைப்பவர்கள் என, எல்லாருமே தங்கள் வாரிசுகளின் கல்விக்காக எவ்வளவோ கஷ்டப்படுகின்றனர்.
இவர்களுக்கு, என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது; இப்போதும், அந்த ஆசை இருக்கிறது.
'கவுதமின் ஸ்கூலுக்கு மட்டும் கம்ப்யூட்டர் ஹால் கட்டிக் கொடுத்தீர்கள்... எங்கள் ஸ்கூலுக்கு ஒன்றும் செய்யவில்லையே...' என்று கேட்டாள், இன்னொரு பேத்தி இந்து.
அவள் படித்தது, க்யூனி கான்வென்ட்டில்!
அதனால், க்யூனி கான்வென்ட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கென்று ஓர் அறையைக் கட்டித் தந்தேன். இதுமட்டுமின்றி, சென்னை கண் மருத்துவமனை ஒன்றில், ஒவ்வொரு ஆண்டும், ஹர்ஷாவின் பிறந்த நாளான, நவ., ௯ம் தேதியன்று நடைபெறும் கண் ஆபரேஷன்களுக்கான மொத்த செலவை ஏற்றுக் கொண்டேன்.
கோவில்களுக்கும், ஆதரவற்ற இல்லங்களுக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். ஆனாலும், என் துக்கம் குறையவில்லை; மனம் அமைதி அடையவில்லை. எவ்வளவு தான் கோவில்களை தரிசனம் செய்தாலும், மனதின் பாரம் குறையவில்லை; தனிமை என்னை வாட்டியது!
கம்ப்யூட்டர் ஹால் கட்டுவதற்காக செலவான பணத்தில், நான் கொடுக்க வேண்டிய பங்கை கொடுத்தே ஆகவேண்டும் அல்லவா?
இந்நிலையில் தான், 'வரும் படங்களையெல்லாம் ஏன் வேண்டாம் என்கிறாய்? மறுபடியும் நடிக்க ஆரம்பி; படங்களை ஒப்புக்கொள். உனக்கும் நிம்மதி கிடைக்கும்; பணமும் கிடைக்கும்...' என்றனர், சிநேகிதிகள்.
சுவாமிஜியும், 'உன் கடமையைச் செய்து கொண்டிரு...' என்று தானே சொல்கிறார் என நினைத்து, மீண்டும் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள ஆரம்பித்தேன். வந்த பணத்தை எல்லாம், தான, தர்மம் செய்தேன்.
ஒருநாள் படப்பிடிப்பு சமயத்தில், உடன் நடிக்கும் நடிகை ஒருவர், 'உங்க மனதிற்கு அமைதி கிடைக்கணும் என்றால், யோகா செய்யுங்க...' என்றார்.
மறுநாள், யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன்.
அங்கே, எனக்கு பிரத்யேகமாய் ஒரு யோகா டீச்சர் இருந்தார்; அவரைப் பார்த்தவுடன் அழுது விட்டேன்.
'உங்களுக்கு என்ன பிரச்னை?' என்று கேட்டார்.
'எனக்கு இந்த துயரமும், துக்கமும் போக மாட்டேன் என்கிறது. இந்த மன பாரமும், தனிமையும் என்னை விட்டுப் போக வேண்டும். முதலில், என்னுடைய இந்த அழுகையை நிறுத்துங்கள்...' என்றேன்.
என்னை சமாதானப்படுத்தி, யோகா கற்பிக்கத் துவங்கினார்.
ஆரம்பத்தில் எனக்கு எதுவும் பிடிபடவில்லை; கொஞ்ச நாள் ஆனதும் ஒரு பிடிமானம் கிடைத்தது. ஆறு மாதத்திற்கு பின், தியானத்தின் மகத்துவம் தெரிந்தது.
துக்கம் என்பது தானாகப் போகும் ஒன்றல்ல; அது பாட்டுக்கு காற்றோடு கலந்து போய் விடாது. அதன் தீவிரம் அதிகமாய் இருந்தால், நாம் தான் சிரமப்பட்டு அப்புறப்படுத்த வேண்டும். என் மன துக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்ற முடிவு செய்தேன்!
தொடரும்.
நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்
எஸ். விஜயன்