
உழைப்பால் முன்னேறும் இளைஞர்!
என் உறவினர் ஒருவர், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். பணி நிமித்தம், குடும்பத்தோடு வெளியூருக்கு இடம் பெயர்ந்தார்.
அங்கு சென்ற இரு மாதங்களிலேயே, கல்லுாரி முடித்த அவரது மகளுக்கு, உடன் பணிபுரியும் சக ஊழியர் மூலம், நல்ல வரன் அமைந்தது.
அங்கேயே திருமணத்தை நடத்த வேண்டிய சூழலில், திருமண ஏற்பாடுகளை செய்து முடிக்க, சில நாட்கள் உடனிருக்குமாறு, என்னை வீட்டிற்கு அழைத்தார்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட அவர்களது வீட்டு உரிமையாளர், ஓர் இளைஞரை வரவழைத்தார். அவரை, எங்களிடம் அறிமுகம் செய்து வைத்தவர், 'திருமணத்திற்கு மண்டபம் ஏற்பாடு செய்து தருவதிலிருந்து, சமையல், மங்கள வாத்தியம், மேடையலங்காரம், போட்டோ மற்றும் வீடியோகிராபர் என, சகல ஏற்பாடுகளையும் இவரிடம் ஒப்படைத்து விடலாம்.
'ஒவ்வொன்றுக்குமான, 'பில்'லை, முறையாக வாங்கிக் கொடுப்பதோடு, இந்த சேவைக்காக, நியாயமான கட்டணமே வசூலிப்பார்...' என்று கூறினார்.
அந்த இளைஞரிடம் உறவினர் பேசிய போது, 'நானும் வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி, இங்கே வந்தவன் தான், சார். முதலில், வீடு வீடா பேப்பர், வாட்டர் கேன் போடும் வேலை செய்தேன். 'பார்ட் டைம் ஆக்டிங்' டிரைவர் வேலைக்கும் போனேன்.
'அப்பத்தான், என் நண்பன் ஒருவன், திருமண ஏற்பாட்டாளர் வேலை செஞ்சு, கூடுதல் வருமானம் சம்பாதிக்கலாமேன்னு, 'ஐடியா' கொடுத்தான். அதை செயல்படுத்தி, இப்போ, மனநிறைவான வருமானத்துடன், என்னால் சிலர் வேலை வாய்ப்பு அடையற அளவுக்கு, முன்னேற்றப் பாதையில் போய்கிட்டிருக்கேன்...' என்று கூறினார்.
அந்த இளைஞரை பாராட்டி, அவரிடமே திருமண ஏற்பாட்டு பொறுப்பை ஒப்படைத்தோம்!
- வி.ஆதித்த நிமலன், கடலுார்.
பிரச்சனையை காதுகொடுத்து கேட்கலாமே!
நெருங்கிய தோழி ஒருத்தியை வீட்டிற்கு அழைத்திருந்தேன். ஒருநாள் மாலை, பள்ளி முடிந்ததும், குழந்தைகளுடன் என் வீட்டிற்கு வந்தாள். சாதாரண விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம்.
சிறிது நேரம் கழித்து, 'இன்னைக்கு, பள்ளியில் என்ன ஹாப்பி, என்ன சேட்...' என்று, தன் குழந்தைகளிடம் கேட்டாள்.
புரியாமல், 'என்னடி, ஹாப்பி, சேட்...' என்றேன்.
'சின்ன வயதிலிருந்தே, பள்ளி முடிந்து வந்ததும், அன்று பள்ளியில், மகிழ்ச்சியான விஷயம் என்ன; சோகமான விஷயம் என்ன என்று, கேட்பது வழக்கம்.
'ஆசிரியர் திட்டியது, பாராட்டியது, நண்பர்களுக்குள் சண்டை, இவள் ஸ்நாக்ஸை யாரோ எடுத்துக்கிட்டது, இவங்களுக்கு பிடிக்காதவர்களை டீச்சர்கிட்ட மாட்டிவிட்டதுன்னு, ஒன்று விடாமல் அன்றன்று நடந்த விஷயங்களை கூறுவர்.
'எல்லாவற்றையும் பொறுமையாக கேட்பேன். நல்ல விஷயங்களை, பாராட்டுவேன். தவறான விஷயங்களை நேரடியாக கண்டிக்காமல், அதை வேறு வகையில் புரிய வைப்பேன். மொத்தத்தில் என் முழு ஆதரவையும் அவர்களுக்கு கொடுப்பேன்.
'அதனால், வெளியே என்ன நடந்தாலும் என்னிடம் சொல்லி விடுவர். அவர்களுக்கு ஏதேனும் பிரச்னை எனில், முடிந்தவரை, சரி செய்வேன்.
'உதாரணத்துக்கு, நண்பர்களிடம் சண்டை எனில், அவர்களை சமாதானம் செய்து வைப்பேன். அவர்களே, அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சொல்லி புரிய வைப்பேன்...' என்றாள்.
இது, நல்ல யோசனையாக தோன்றியது. இதுபோல் அனைவரும் முயற்சிக்கலாம். குழந்தைகள் எதையும் நம்மிடம் மறைக்கும் சூழ்நிலையும் வராமல் இருக்கும்.
- மு.கவுந்தி, சென்னை.
அசத்தும் திருநங்கையர்!
நண்பரது ஊர் கோவில் திருவிழாவிற்கு போயிருந்தேன். அன்றைய நாளிதழ் வாங்குவதற்காக, செய்தித்தாள்கள் பிரிக்கும் இடத்திற்கு சென்றோம்.
அங்கு, இரு திருநங்கையர், செய்தித்தாள் கட்டுகளை பையில் எடுத்து வைத்து, டூ-வீலரில் புறப்பட்டனர்.
அதைக் கண்டு, ஏஜன்ட்டிடம் விசாரித்தேன்.
'அவர்கள், வீடு, வீடாக பேப்பர் வினியோகம் செய்பவர்கள். இரண்டு மாதத்திற்கு முன் என்னிடம் வேலை கேட்டு வந்தனர். ஏற்கனவே, என்னிடம் வேலை செய்யும் இளைஞர்கள் சரிவர வராததால், அவர்களுக்கு பதிலாக இவர்களை பணியில் சேர்த்துக் கொண்டேன்.
'அதிகாலையில், பணிக்கு வந்து விடுவர். 8:00 மணிக்குள், குறிப்பிட்ட ஏரியா முழுதும் செய்தித்தாளை பட்டுவாடா செய்து விடுகின்றனர். மழைக்காலத்தில் பேப்பரை துாக்கி வீசாமல், வாடிக்கையாளர்களை அழைத்து அவர்களது கையில் பேப்பரை தந்து விட்டு வருகின்றனர்.
'தாமதமாக எழும்பும் வீட்டாரிடம், வீட்டு கேட்டில், பி.வி.சி., 'பைப்' கட்ட சொல்லி, அதில் செய்தித்தாளை வைத்து விட்டு வருகின்றனர். இதனால், இப்போது எந்த புகாரும் வருவதில்லை.
'பேப்பர் வினியோகம் செய்து முடித்ததும், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கூட்டி பெருக்கும் வேலைக்கு செல்கின்றனர். மாலை வேளையில், தனியார், 'கிளினிக்' ஒன்றில் பெயர் எழுதி, டோக்கன் தரும் வேலையும் செய்கின்றனர். இதன் மூலம், ஒவ்வொருவரும் மாதம், 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர்...' என்றார்.
அதைக் கேட்டு வியந்து போனேன்!
இங்கு வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன. செய்வதற்கு தான் மனம் வேண்டும்!
- ப.சிதம்பரமணி, கோவை.
விசேஷ ஜீரண உருண்டை!
எங்கள் பாட்டி, பண்டிகை காலங்களில், விசேஷ ஜீரண உருண்டை செய்து தருவார்.
ஓமம் மற்றும் சீரகம் துாள் தலா ஒரு தேக்கரண்டி, அதனுடன், தேவையான அளவு வெல்லம் சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்து விடுவார்.
பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், பலகாரம், பட்சணம், தின்பண்டங்களை அதிகம் சாப்பிட்டு விட்டால், அதை ஆளுக்கு ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்ளச் சொல்வார். இது செரிமானத்தை துாண்டி, வயிற்றுப் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கும்.
பண்டிகைகள் மற்றும் விழாக்களின் போது, நாமும் இதைப் பின்பற்றலாமே!
ரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.