
பா - கே
நான்கு நாட்களுக்கு பின், அன்று தான் அலுவலகம் வந்திருந்தார், குப்பண்ணா.
'எங்கே போய்விட்டீர்... ஆளையே காணோம்...' என்றார், அன்வர் பாய்.
'மும்பையில் வசிக்கும், என் பால்ய சினேகிதன் ஒருவனின் பேரனுக்கு, ஆயுசு ஹோமம் செய்தான். கண்டிப்பாக வர வேண்டும் என்று, ரயில் டிக்கெட், 'புக்' செய்து அனுப்பினான். அதான் போயிட்டு வந்தேன்...' என்றார், குப்பண்ணா.
'மும்பையில் எங்கெல்லாம் போனீர். ஜுகு, 'பீச்'சில், 'வடாபாவ்' வாங்கி சாப்பிட்டீர்களா?' என்றார், நாராயணன்.
'எங்கும் போகவில்லை. போக வர பயண நேரமே அதிகமாயிற்றே! ஒருநாள், 'பங்ஷன்!' ஒருநாள் அவருடன் பழைய கதைகளை பேசியதில் நேரம் போய் விட்டது. ஆனால், அவரிடமிருந்து ஒரு சுவாரஸ்யமான மேட்டர் கிடைத்தது...' என்றவர், தொடர்ந்தார்:
விழா எல்லாம் முடிந்து, 15வது மாடியில் உள்ள அவர் வீட்டு பால்கனியில் அமர்ந்திருந்தோம். நான், மும்பை நகரின் அழகை ரசித்துக் கொண்டிருக்க, புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார், நண்பர். திடீரென, சத்தமாக சிரிக்க ஆரம்பித்தார்.
உள்ளிருந்து அவர் மனைவி எட்டிப் பார்த்து, 'மெதுவா சிரிச்சா என்னவாம்... சிரிப்பா அது, அண்டாவில் கல்லை போட்டு உருட்டின மாதிரி கர்ண கொடூரமான சத்தம். என்னவோ ஏதோவென்று ஓடி வர வேண்டியிருக்கிறது...' என்று அர்ச்சனை செய்தார்.
இதைக் கேட்டதும், நண்பரின் முகம், 'பியூஸ்' போன பல்பு போல் ஆனது. 'இந்த வீட்டில் சிரிக்கக் கூட உரிமை இல்லப்பா...' என்றார்.
அவரது சிரிப்புக்கு காரணம் கேட்டேன். கையில் வைத்திருந்த புத்தகத்தைக் காட்டி, 'இது மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஒருவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. அதில், இருந்த ஒரு சிறுகதை தான் என்னை சிரிக்க வைத்துவிட்டது...' என்றார். அக்கதையை தமிழில் எனக்கு கூறினார். அது:
கதையின் நாயகன், 70 வயதுடையவர். நாளிதழ் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். ஒரு செய்தியைப் படித்தவர், அதிர்ச்சி அடைந்தார். அந்த செய்தியை திரும்ப திரும்ப படிக்க ஆரம்பித்தார். அந்த செய்தியை அவரால் நம்ப முடியவில்லை.
அவர் வசித்த நகரத்தின் மற்றொரு மூலையில், ஒரு பெண், ஒரு நாயை திருமணம் செய்து கொண்டார் என்பது தான், அந்த செய்தி. அவரால், அதை ஜீரணிக்க முடியவில்லை.
ஒருவேளை, அச்சுப் பிழையாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. உடனே, சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகத்துக்கு போன் செய்து, விசாரித்தார். அது, உண்மையான தகவல் தான் என்று கூறிவிட்டனர்.
நேராக, மனைவியிடம் ஓடிவந்து, 'இப்படியெல்லாம் நடக்குமா?' என்று கேட்டார்.
சமையல் வேலையில், 'பிசி'யாக இருந்த அவர், 'உங்களுக்கு வேறு வேலை இல்லையா? யார் எவரைத் திருமணம் செய்து கொண்டால் உங்களுக்கென்ன?' என்று குரைத்தார்.
சிறிது நேரத்திற்கு பின், வீட்டு வேலை செய்ய, பணிப்பெண் வந்தார். அவரிடம் விஷயத்தை கூறி, 'இப்படியும் நடக்குமா?' என்றார், பெரியவர்.
'ஓ... அதுவா? அந்த கல்யாணம் எங்கள் தெருவில் தான் நடந்தது. நானும் போய் இருந்தேன். ஹும்... அவளுக்காவது ஒரு நல்ல நாய் கிடைத்தது. எனக்கும் கிடைச்சுச்சே, புருஷன் என்ற பேரிலே...' என்றாள், அந்த பணிப்பெண்.
'அந்த பெண்ணை உனக்கு தெரியுமா. எதற்காக, அவள் ஒரு நாயை திருமணம் செய்து கொண்டாள். உனக்கு அதுபற்றி ஏதாவது தெரியுமா?' ஆவல் தாங்காமல் ஆச்சரியத்துடன் கேட்டார், பெரியவர்.
'நானும், அவளிடம் கேட்டேனுங்க... ஏன்டி போயும் போயும் ஒரு நாயை திருமணம் செய்து கொண்டாயே...' என்றேன்.
அதற்கு அவள் கூறியது:
* எந்த நாயும் அர்த்த ராத்திரிக்கு பின் குடித்துவிட்டு வந்து கதவைத் தட்டி, இம்சிப்பதில்லை
* ஒருவர் மீது பாசம் வைத்துவிட்டால், அந்த பாசம் எப்போதும் குறைவதில்லை
* பாசமிக்க நபரை ஒரு நாளைக்கு எத்தனை முறை பார்த்தாலும், அதன் அன்பையும், நட்பையும் வெளிக்காட்டும் விதமாக, வாலை ஆட்டும்
* சாப்பிடுவதற்கு என்ன போட்டாலும், 'நேற்று தானே இதை போட்டாய். இன்றும் இதையே போடுகிறாயே...' என, கேட்காமல் சாப்பிடுகிறது.
- இப்படி பல காரணங்களை என் தோழி அடுக்கிக் கொண்டே போனாள், என்று கூறினாள், அந்த பணிப்பெண்.
கடந்த ஆண்டில், வெவ்வேறு மொழிகளில் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட சிறுகதைகளில், இந்த கதை முதலிடத்தில் உள்ளதாம்.
- என்று கூறி முடித்தார், குப்பண்ணா.
கதையைக் கேட்டு, சத்தமாக சிரித்தார், லென்ஸ் மாமா.
'வெளிநாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. அதுமட்டுமில்லாமல், 'கணவர் விற்பனைக்கு' என்று, அறிவிப்பு பலகையை தன் வீட்டின் முன் தொங்கவிட்டு, கணவரை, விலை பேசும் மனைவியரும் அங்கு நிறைய பேர் உள்ளனர்...' என்றார், மாமா.
'இது ஒரு கற்பனை கதையாக இருந்தாலும், கதையில் சொல்லப்படாத அர்த்தம்... வீட்டில், மனைவியர் எதிர்பார்க்கும் விதத்தில், கணவர்கள் நடந்து கொள்வதில்லை; பரஸ்பர புரிதல் இல்லாமல், 'நான் புருஷன், நான் சொல்வதைத் தான் மனைவி ஏற்றுக் கொள்ள வேண்டும்...' என்ற அகம்பாவ பேச்சாலும், பல மனைவியர், ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், மனதளவில் பிரிந்து வாழ்வதைத் தான் காட்டுகிறது...' என்று நினைத்துக் கொண்டேன், நான்.
ப
தன் ஆட்சி காலத்தில், மரண தண்டனையை ரத்து செய்தார், அமெரிக்க முன்னாள் அதிபர், ஆபிரகாம் லிங்கன்.
'மரண தண்டனை இல்லையென்றால், நாட்டில் குற்றங்களும், குழப்பங்களும் அதிகமாகும்...' என்று கருத்து கூறினர், பலர்.
இருப்பினும், 'ஒரு மனிதனின் உயிரை எடுப்பதற்கு இன்னொரு மனிதனுக்கு உரிமையில்லை...' என்று கூறி, மரண தண்டனையை ரத்து செய்தார், ஆபிரகாம் லிங்கன்.
அப்போது, இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. போர்களத்திற்கு சென்றார், ஆபிரகாம் லிங்கன்.
அங்கு, தான் அணிந்திருந்த செயினின் டாலரை முத்தமிட்டபடி இறந்து கிடந்தான், ஒரு போர் வீரன். அந்த, டாலரில் இருப்பது அவரது மனைவி அல்லது மகளாக இருக்குமோ என்று பார்க்க, அதில் இருந்தது, ஆபிரகாம் லிங்கனின் படம்.
இறந்த போர் வீரன், ஒரு மரண தண்டனை கைதி. போரின் போது, அமெரிக்க படையில் சேர்ந்து வீர மரணம் அடைந்திருந்தான். ஒரு மரண தண்டனை கைதியாக இறக்க வேண்டியவனை, போர் வீரனாய் இறக்கச் செய்தது, ஆபிரகாம் லிங்கனின் பெருந்தன்மை.
அவமானத்தால் உயிரை இழக்க வேண்டியவனுக்குக் கூட, ஒரு வெகுமானத்தைப் பெற்றுத் தருபவனே தலைவன் என்பதை நிரூபித்தார், ஆபிரகாம் லிங்கன்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.