
மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: தமிழக சட்டசபையில், கருணாநிதிக்குப் பின், தான் நீண்ட கால உறுப்பினராக இருப்பதாக, அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளாரே...
முதல்வர் ஆக முடியாது; இப்படி புலம்புவதைத் தவிர, வேறு வழியில்லை அவருக்கு!
****
மொ.நல்லம்மாள், கோவை: அந்துமணியாரே... அஞ்சலகங்களில் உமது படத்தை கொடுத்து வைத்துள்ளீரா... அஞ்சல் அட்டையில் உமது படத்தை வரைந்து, எந்த அஞ்சலகத்திலிருந்து அனுப்பினாலும், உமக்கு கரெக்டா வந்து விடுகிறதே... இது எப்படி?
அஞ்சலகங்களில் என் படத்தை கொடுத்து வைப்பதில்லை. எனினும், வாசகர்கள், டில்லியிலிருந்து அஞ்சல் அட்டையில் அந்துமணி புகைப்படத்தை ஒட்டி அனுப்பினாலும், எனக்கு வந்து விடுகிறது. அஞ்சலகங்கள் அவ்வளவு திறமையாக செயல்படுகின்றன!
***
* டி.சுதாகர், ராமநாதபுரம்: அந்துமணி சார்... ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதில், உங்களுக்கு உடன்பாடு உள்ளதா?
உடன்பாடு உள்ளது. நேரம், பணம் மற்றும் பணி நேரம் அனைத்தும் மிச்சம்!
***
எம்.சம்சு, துாத்துக்குடி: 'அரசியலுக்கு வந்திருந்தால், நிம்மதி, செல்வம் உட்பட அனைத்தையும் இழந்திருப்பேன்...' என, நடிகர் ரஜினி கூறியிருக்கிறாரே...
நல்ல முடிவு தான்; இந்த ஞானம் பிறக்க, இவ்வளவு ஆண்டுகள் தேவைப் பட்டிருக்கிறது!
****
வி.சி.கிருஷ்ணரத்னம், செங்கல்பட்டு: 'பாசத்தை பொழியும் போது கனிமொழியாகவும், தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டி, பார்லி.,யில் பேசும் போது, கர்ஜனை மொழியாகவும் இருக்கிறார், தங்கை கனிமொழி...' என்று, கருணாநிதி நுாற்றாண்டு வினாடி - வினா இறுதிப் போட்டியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், புகழாரம் சூட்டியது பற்றி...
சிறந்த எம்.பி., சிறந்த தங்கை!
***
எ.எம்.எம்.ரிஸ்வான், சென்னை: 'ராமதாசுக்கு வேறு வேலை இல்லாததால், தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கெல்லாம் நான், பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது...' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கொந்தளிக்கிறாரே...
'கூட்டணிக்கு, ராமதாஸ் வேண்டாம்...' என, இப்போதே தெளிவுபடுத்தி விட்டார்!
***
* மு.விஜயராணி, ராமநாதபுரம்: துாய்மைப் பணியாளர் மகள் துர்கா, திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளாரே...
முன்னேறத் துடிக்கும் அத்தனைப் பெண்களுக்கும் நல்ல முன்னுதாரணம்!
***