sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பிள்ளையார் சிரிக்கிறார்!

/

பிள்ளையார் சிரிக்கிறார்!

பிள்ளையார் சிரிக்கிறார்!

பிள்ளையார் சிரிக்கிறார்!


PUBLISHED ON : டிச 08, 2024

Google News

PUBLISHED ON : டிச 08, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஞாயிற்றுக்கிழமை காலை -

சர்ச்சுக்கு சென்று வெளியே வரும்போது, எதிரே திருச்சபை தலைவர் வரவே, அவருக்கு வணக்கம் சொன்னேன். ஆனால், அவர் என்னை பார்த்தும், பார்க்காதது மாதிரி சென்றார்.

அவருக்கு என் மீது கோபம். திருச்சபை சார்பாக, சில கட்டட வேலை நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கு வாங்கும், 'மெட்டிரியல் பில்'களில், என்னை, 'அட்ஜஸ்ட்' செய்ய சொன்னார். நான் அப்படி எதுவும் செய்யவில்லை. அதனால், கோபம்!

அப்போது, மொபைல் போன் ஒலித்தது. மேஸ்திரி சீனன் தான் அழைத்தார். சீனனைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவரும், என்னை மாதிரியே கை சுத்தம்; தொழில் சுத்தம். பத்து ஆண்டுகளாக, இருவரும் ஒன்றாக, கட்டட கட்டுமான பணிகளை செய்து வருகிறோம்.

போனை, 'ஆன்' செய்து, ''சொல்லுங்க மேஸ்திரி,'' என்றேன்.

''நம்ம ராமநாதன் ஐயா, காலையில் போன் பண்ணி, அவர் வீட்டை விற்க போறதா சொன்னார்.''

''ஏன் என்னாச்சு?''

''தெரியல, சார்... அவர் வீட்டுக்கு தான் போறேன். நீங்க வர்றீங்களா?''

''நீங்க போங்க; நான் இதோ வரேன்,'' என்று கூறி பைக்கை, 'ஸ்டாட்' செய்தேன். பைக் முன்னே செல்ல, என் நினைவுகள் பின்நோக்கி சென்றது...

சில ஆண்டுகளுக்கு முன், சீனன், அவருக்கு தெரிஞ்சவருக்கு வீடு கட்ட என்னை அழைத்து சென்றார். அது ஒரு சின்ன வீடு; வீட்டை சுற்றி நிறைய மரங்களும், பின் பக்கம் காலி இடமும் இருந்தது.

எங்களை வரவேற்று, 'தம்பி... சீனனை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும்; உங்களை பற்றி நிறைய சொல்லி இருக்கான். இந்த வீட்டில் நானும், என் மனைவியும் தான் இருக்கோம்.

'எங்க ஒரே பையன் வெளிநாட்டில் வேலை செய்கிறான். அவன் வந்தால் தங்கறதுக்கு வசதியா, பங்களா டைப்பில ஒரு வீடு கட்டணும்ன்னு, சீனன் கிட்ட சொன்னேன். அவன் உங்கள பத்தி சொன்னான்...' என்றார், ராமநாதன்.

அவர் சொன்ன மாதிரியே வீடு கட்டி கொடுத்தோம். அவருக்கு ரொம்ப சந்தோஷம். கிரஹபிரவேசத்திற்கு வந்திருந்த அனைவரும், வீட்டை பார்த்து பாராட்டினர்.

அன்றிலிருந்து எந்த ஒரு பண்டிகை வந்தாலும், எங்கள் வீட்டிற்கு அவர்களும், அவர்கள் வீட்டிற்கு நாங்களும் சென்று வர, அவர், எங்கள் குடும்ப நண்பராகி விட்டார், ராமநாதன்.

ராமநாதன் வீட்டுக்கு சென்றபோது, மேஸ்திரியும், அவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

என்னை பார்த்ததும், ''வாங்க ஜோசப்...'' என்றார், ராமநாதன்.

''ஏன் சார் வீட்டை விற்க போறீங்க?''

''என் பையனுக்கு நிரந்தர வேலையும், குடியுரிமையும் கிடைச்சிட்டதால, வெளிநாட்டிலேயே, 'செட்டில்' ஆயிட்டான். எங்களையும் அங்கேயே வர சொல்லிட்டான். நாங்களும், இரண்டு மாசத்துல போகப் போறோம்.

''நாங்கள் போன பின், இந்த வீட்டை யார் பார்த்துக்கிறது. நீங்களும் வாடகை வீட்டுல தான் இருக்கீங்க... அதான், இந்த வீட்டை உங்களுக்கே வித்திடலாம்னு இருக்கேன்,'' என்றார்.

''இந்த வீட்டை வாங்கற அளவுக்கு என்கிட்ட ஏது பணம்,'' என்றதும், ''உங்களுக்கு அம்பத்துார்ல ஒரு கிரவுண்ட் இடம் இருக்கே... அதை வித்திடுங்க, சார்,'' என்றார், மேஸ்திரி.

''அப்பக் கூட பத்தாதே!'' என்றேன்.

இடையில் புகுந்து, ''உங்களால எவ்வளவு பணம், 'ரெடி' பண்ண முடியுமோ பண்ணுங்க. மீதி பணத்தை, ஓராண்டிலோ அல்லது இரண்டு ஆண்டுகளிலோ, கொஞ்சம் கொஞ்சமாக கொடுங்க,'' என்றார், ராமநாதன்.

நான் குழப்பத்துடன் அவர்களிடமிருந்து விடைபெற்று, வீட்டிற்கு சென்று என் மனைவியிடம் கூற, அவளுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்!

''அந்த வீட்டை நாம வாங்கிடலாங்க,'' என்றாள்.

''ஏன்டி நீயும் புரியாமல் பேசற... நம்ம இடத்தை வித்து, உன்னோட நகைகளை வித்தாலும் பத்தாதே,'' என்றேன்.

''எல்லாம் கர்த்தர் நமக்கு வழிகாட்டுவார். நீங்க இடத்தை விக்கிற வழிய பாருங்க,'' என்றாள்.

அதன்பின், ஒரே மாதத்தில் இடத்தையும், நகையையும் விற்று, பணத்தை ராமநாதனிடம் கொடுத்து, மீதிப் பணத்தை இரண்டு ஆண்டுகளில் தருவதாக பத்திரம் எழுதி, அவரிடம் கொடுத்தேன்.

அன்று, 'ரிஜிஸ்டர்' வேலை முடிந்து எல்லாரும், ஹோட்டலில் சாப்பிட சென்றோம். என்னை தனியாக அழைத்து, ''தம்பி, எனக்கு ஒரு உதவி செய்யணும்... நம்ம வீட்டு காம்பவுண்டில் ஒரு பிள்ளையார் சிலை இருக்கே...'' என்றார், ராமநாதன்.

''ஆமா சார்... தெரு முக்குன்னு பிள்ளையார் சிலை வைத்து, அதற்கு பூஜையும் பண்ணிட்டு வர்றீங்களே!''

''ஆமாப்பா, அந்த சிலையை மட்டும் எடுத்திடாதப்பா... வீட்டை விற்கிறதுக்கு முன்னாடியே உன்கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன். அப்ப சொன்னா, அது ஒரு, 'கண்டிஷன்' மாதிரி இருக்கும். இப்போ அது உன் வீடு; அதான் உதவியாய் கேட்கிறேன்,'' என்றதும், நெகிழ்ந்து போனேன்.

''கவலைப்படாதீங்க, சார்... எக்காரணத்தை கொண்டும் அந்த சிலையை எடுக்க மாட்டேன்,'' என்று உறுதியளித்தேன்.

''ரொம்ப நன்றிப்பா. அதோட, இன்னொரு உதவியும் செய்யணும்,'' என்று சொல்லி, ''இதுல பத்தாயிரம் ரூபாய் இருக்கு; பிள்ளையாருக்கு பூஜை செய்ய, பூசாரிக்கு மாசம் ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கணும். இதை வாங்கிகிட்டு அவருக்கு மாசா மாசம் கொடுத்துடுங்க,'' என்று கூறி, பணத்தை கொடுத்தார்.

அதை வாங்க மறுத்து, ''சார், அது இப்போ என் வீடு; அந்த பணத்தை நானே தந்துடுறேன்,'' என்றேன்.

பெயின்டிங் வேலை முடித்து, ஒரு நல்ல நாளில் புது வீட்டிற்கு குடி வந்தோம். வீட்டைச் சுற்றிப் பார்த்த என் மாமனார், ''ஏன் மாப்பிள்ளை... அந்த பிள்ளையார் சிலையை எடுக்க மாட்டாயா?'' என்று கேட்டார்.

''அந்த சிலை இருந்தால் என்ன மாமா... அதுதான், கேட்டுக்கு இரு பக்கமும் கர்த்தர், மாதா சிலை வெச்சுருக்கோமே...'' என்றேன்.

'நாளைக்கு இந்த சிலையால பிரச்னை வரப் போகுது...' என்று புலம்பியபடி போனார், மாமனார்.

அவர் கூறியபடி, அந்த வார ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு சென்ற போது, திருச்சபை அலுவலகத்திலிருந்து அழைப்பதாக கூறினர்.

அலுவலத்தில் தலைவரும், செயலாளரும், இன்னும் சிலரும் இருந்தனர். ஏற்கனவே, என் மீது கோபமாக இருந்த திருச்சபை தலைவர், ''ஜோசப்... உங்க வீட்டு காம்பவுண்டில் விநாயகர் சிலை இருக்காமே... ஏன் அந்த சிலையை வச்சுருக்கீங்க? சிலையை இன்னும் பத்து நாளைக்குள்ள எடுக்கலைன்னா, திருச்சபையில உங்களுக்கு எந்த வேலையும் கொடுக்க மாட்டோம். ஏற்கனவே, செய்யற வேலையையும் நிறுத்திடுவோம்,'' என்றார்.

''அந்த வீட்டை விற்ற பெரியவர், அந்த சிலையை எடுக்க வேண்டாம்ன்னு கேட்டுக்கிட்டார். நானும் எடுக்க மாட்டேன்னு, வாக்கு கொடுத்துட்டேன். அதனால, சிலையை எடுக்க மாட்டேன்,'' என்று சொல்லி விட்டு வெளியேறி விட்டேன்.

வீட்டிற்கு வந்ததும், இவை அனைத்திற்கும் காரணமாக இருந்த பிள்ளையார் சிலையை உற்று பார்த்தேன். அவர் என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.

'என்ன பிள்ளையாரே, என் கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா...' என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டு, மேஸ்திரி வேலை செய்யும் இடத்திற்கு சென்று, அவரிடம் என் குமுறலை கொட்டினேன்.

''விடுங்க... ஒரு வேலை போனால், பத்து வேலை வரும்,'' என்று சொல்லி, ''கல்வி தந்தை எம்.எஸ்.வி., தெரியுமா?'' என்று கேட்டார்.

''தெரியுமே; ஊர் ஊரா காலேஜ் கட்டிட்டு இருக்காரே... அவர் தானே?''

''ஆமாம்; அவர் பிரமாண்டமாக ஒரு கல்யாண மண்டபம் கட்ட போறாராம். ஏற்கனவே, அவர்கிட்ட இருந்த இன்ஜினியர், கட்டடம் கட்டறதில் ஊழல் பண்ணதால, அவரை நிறுத்திட்டாங்க. அதோட, ரெண்டு, மூணு பேர் பிளான் போட்டு கொடுத்திருக்காங்க. அது அவருக்கு பிடிக்கலையாம். நீங்க, ரப்பா ரெண்டு 3டி டிசைன் போட்டு கொடுங்க. கண்டிப்பா, சக்சஸ் ஆகும்,'' என்றார்.

''இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?''

''அவரது கார் டிரைவரோட மச்சனன், எனக்கு பழக்கம். அவன் தான் சொன்னான். அவன்கிட்ட உங்கள பத்தி சொன்னேன். 'அப்பாயின்மென்ட்' வாங்கி தர்றதா சொல்லி இருக்கான். மண்டப அளவும், இடமும் உங்களுக்கு, 'வாட்ஸ்-அப்' பண்ணியிருக்கேன்,'' என்றார்.

ஒருவாரம் முழுதும் செலவிட்டு, பிளானும், 3டி டிசைனும் தயார் செய்து, அவர் ஆபீசுக்கு சென்றேன்.

பெரிய பெரிய சாமி படங்கள் சுவரில் தொங்க, அதன் கீழ் அமர்ந்து இருந்தார், எம்.எஸ்.வி.,

அவருக்கு வணக்கம் சொல்ல, ''கல்யாண மண்டபத்திற்கு டிசைன் கொண்டு வந்திருக்கிறார்,'' என்று என்னை அறிமுகப்படுத்தினார், அவரது பி.ஏ.,.

நான் கொண்டு வந்த பிளானையும், 3டி டிசைன் போட்ட, 'பென் டிரை'வையும், கவரோடு கொடுத்தேன். அதை வாங்கியவர், ''உங்க பேரு?'' எனக் கேட்டார்.

''ஜோசப் ராஜ்,'' என்றேன். உடனே அவர் முகம் மாறியது.

''விசிட்டிங் கார்டை கொடுத்துட்டு போங்க; சொல்லி அனுப்புறேன்,'' என்றார். அவரிடம் விடைப்பெற்று வெளியே வந்தேன்.

கதவு திறந்து மூடும் சந்தர்ப்பத்தில், ''ஏன்யா, முதன் முதலா கல்யாண மண்டபம் கட்ட போறோம். கிறிஸ்டியன் போட்ட பிளான் எப்படி சரியாக இருக்கும்... விசாரிச்சு அனுப்ப மாட்டியா,'' என்று அவர், பி.ஏ.,வை திட்டுவது கேட்டது.

எனக்கு வாழ்க்கையே வெறுத்து போனது. ஏன் எல்லாருக்கும் மதம் என்ற மதம் பிடிச்சிருக்கு என்று நினைத்தபடியே வெளியே வந்து, மேஸ்திரிக்கு போன் செய்து, நடந்ததை சொன்னேன்.

விநாயகர் சதுர்த்தி அன்று காலை -

ஒரு கல்யாணத்திற்கு சென்று கொண்டிருந்தார், எம்.எஸ்.வி., வழியில், ஒரு இடத்தில் போக்குவரத்து நெரிசல் இருக்கவே, எதிரே வந்து கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி, விசாரித்தார், டிரைவர்.

''பிள்ளையார் சிலை கொண்டு வந்த லாரி திடீரென, 'பிரேக் டவுண்' ஆயிடுச்சு. எப்படியும், 'கிளியர்' ஆக, இரண்டு மணி நேரம் ஆகும். நீங்க இந்த சந்து வழியாக போனா ஒரு பெரிய தெரு வரும். கொஞ்ச துாரத்துல மெயின் ரோடு வந்துடும். தெரு கொஞ்சம் மேடு பள்ளமா இருக்கும் பார்த்து மெதுவா போங்க,'' என்றார்.

வெளியே பார்த்துக்கொண்டே வந்தவர், திடீரென, ''டிரைவர், காரை கொஞ்சம் நிறுத்து,'' என்றார், எம்.எஸ்.வி.,

''ஏன் சார், என்ன ஆச்சு?''

''அந்த வீட்டை பார்த்தியா... கேட்டுல கர்த்தர் சிலையும், மாதா சிலையும் இருக்கு; அதேநேரம், காம்பவுண்ட்ல பிள்ளையார் சிலையும் இருக்கு; அதுக்கு பூஜையும் நடக்குதே,'' என்று ஆச்சரியப்பட்டவர், பூஜை செய்து கொண்டு இருந்தவரை அழைத்து, அதுபற்றி விசாரித்தார்.

''இது, இன்ஜினியர் ஜோசப் ராஜ் வீடு,'' என்றதும், ''ஜோசப் ராஜ்... எங்கோ கேள்விப்பட்ட பேரா இருக்கே,'' என்றார்,எம்.எஸ்.வி.,

''நம்ம கல்யாண மண்டபம் கட்ட பிளான் கொடுத்தாரே... அவராத் தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்,'' என்றார், டிரைவர்.

பூசாரி தொடர்ந்தார்...

''கிறிஸ்டியன் வீட்டுல பிள்ளையார் சிலை எப்படின்னு தானே யோசிக்கிறீங்க?'' என்று கேட்டவர், நடந்ததை சொல்லி, ''ராமநாதன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, சர்ச்சில் இருந்து எவ்வளோ பிரச்னை வந்தும், அவர் சிலைய எடுக்கல. அதுமட்டுமல்ல, பிள்ளையாருக்கு பூஜை செய்ய மாசம் மாசம், அவர் தான் எனக்கு சம்பளம் தர்றார். ஆனா, பாவம் கொஞ்சம் கஷ்டப்படுறார்,'' என்றார், பூசாரி.

''ஏன், என்னாச்சு?''

திருச்சபையில் நடந்த சம்பவத்தையும், வேலை கொடுக்காததையும் கூறினார்.

இதை கேட்டவர், அங்கிருந்த பிள்ளையாரை பார்த்து, 'இதெல்லாம் உன்னுடைய, திருவிளையாடல் தானா... இந்த விஷயம் எல்லாம் எனக்கு தெரிவிக்கத்தான் வரவச்சியா?' என்று மனதில் நினைத்துக் கொண்டார், எம்.எஸ்.வி.,

மறுநாள் மாலை -

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, மொபைல் போன் ஒலிக்க, எடுத்து காதில் வைத்தேன்.

''சார்... நான், எம்.எஸ்.வி., ஆபிசில் இருந்து பேசறேன். நீங்க கொஞ்சம் ஆபீஸ் வர முடியுமா?''

''எதுக்கு அந்த பிளானை திரும்பி வாங்கவா... எனக்கு அது தேவையில்லை. அதை துாக்கி குப்பையில போடுங்க,'' என்றேன் கோபமாக!

அப்போது, இடைமறித்த ஒரு குரல், ''நான், எம்.எஸ்.வி., பேசறேன்; நீங்க உடனே கொஞ்சம் ஆபீசுக்கு வந்துட்டு போங்க,'' என்று, தன்மையுடன் பேசினார்.

''வரேன் சார்,'' என்று சொல்லி, யோசனையுடன் அவர் ஆபீசுக்கு சென்றேன். என்னைப் பார்த்ததும், அவரே எழுந்து வந்து வரவேற்றார்.

''உங்களை பற்றி விசாரித்தேன்; நீங்க எவ்வளவு நேர்மையானவர்ன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அது மட்டுமல்ல, நீங்க கல்யாண மண்டபத்திற்கு போட்டு கொடுத்த, 3டி பிளானை பார்த்தேன். நான் நினைச்சத விட அற்புதமாக இருக்கு...

''நல்ல வேளை, ஒரு திறமையான, நேர்மையான இன்ஜினியரை இழக்க இருந்தேன். இதற்கு எல்லாம் உங்க வீட்டு பிள்ளையாருக்கு தான் நன்றி சொல்லணும்,'' என்று கூறி, ஒரு கவரை எடுத்து கொடுத்தார்.

''இதில், 25 லட்சம் ரூபாய்க்கான, 'செக்' இருக்கு; இது உங்க, 'அட்வான்ஸ்!' ஒரு நல்ல நாள் பார்த்து, மண்டப வேலையை ஆரம்பிக்கலாம். இந்த மண்டபம் மட்டுமல்ல, இனிமேல் நான் கட்ட போற காலேஜ், வீடு எல்லாத்துக்கும் நீங்கள் தான், என் ஆஸ்தான இன்ஜினியர்,'' என்று சொல்லி, அனுப்பி வைத்தார்.

இந்த நல்ல விஷயத்தை மேஸ்திரிக்கும், என் மனைவிக்கும் சொல்ல மொபைலை எடுக்கும் போது, எதிர்முனையில், என் மனைவியே போன் செய்தாள்.

''ஏங்க... கர்த்தர் கண்ணை திறந்துட்டார். நம்ம திருச்சபை தலைவர் மற்றும் செயலாளர் செய்த ஊழல் தெரிஞ்சு, அவங்கள பதவியில் இருந்து நீக்கிட்டாங்க. உங்கள சர்ச்சுக்கு வரச்சொல்லி இருக்காங்க...'' என்று சொல்ல, நான் இங்கு நடந்த விஷயத்தை சொல்லவும், அவள் மிகவும் சந்தோஷப்பட்டாள்.

மேஸ்திரிக்கும் விஷயத்தை சொல்லிவிட்டு, வீட்டிற்கு வந்து பிள்ளையார் முன் நின்று, முதல் முறையாக இருகரம் கூப்பி, கண்ணீர் மல்க வணங்கினேன். அப்போதும், அவர் சிரித்துக் கொண்டு தான் இருந்தார்!

ஜி. பரந்தாமன்

வயது: 58, படிப்பு: 10ம் வகுப்பு. பணி: ஓவியர் - சைன் போர்டு ஆர்டிஸ்ட். இவர் எழுதிய முதல் சிறுகதை இது.சிறந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகை ஓவியராவது இவரது லட்சியம்.கதைக்கரு பிறந்த விதம்: 10 ஆண்டுகளுக்கு முன், தெரு முக்கில் இருந்த வீடு ஒன்றில், பிள்ளையார் படம் வரைந்த போது, அந்த வீட்டு உரிமையாளர் ஹிந்து என்பதும், அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்ற விஷயம் தெரிந்தது. அப்போது தான், ஒரு கிறிஸ்துவர் வீட்டில், பிள்ளையார் இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தேன். அதன் விளைவே இக்கதை!






      Dinamalar
      Follow us