PUBLISHED ON : ஜூலை 28, 2019

நேரத்தை, மணி, நிமிடம், நொடி என்று பிரிப்போம். 'வாழ்வில் ஒவ்வொரு நொடியையும் வீணாக்காதீர்...' என்று மகான்களும், அறிஞர்களும் சொல்கின்றனர். இதற்கு முக்கியத்துவம் தரும், தன் அன்றைய கடமையை, அந்த நிமிடமே நிறைவேற்றும் அம்பாள், கர்நாடக மாநிலம், மைசூரு அருகே, கஞ்சாமில் அருள்புரிகிறாள். இவளது பெயரே, நிமிஷாம்பாள்!
முக்தராஜன் எனும், அம்பாள் பக்தன், இப்பகுதியை ஆட்சி செய்தான். ஜானு சுமண்டலன் என்னும் அசுரன், முக்தராஜனையும், நாட்டு மக்களையும் துன்புறுத்தினான். அவனை, அரசனால் அடக்க முடியவில்லை.
மக்களுக்கு பாதுகாப்பு வேண்டி, தன் இஷ்ட தெய்வமான, பராசக்தியை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான், அரசன். அவனின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அசுரனை அழிக்க புறப்பட்டாள், பராசக்தி.
அசுரனின் முன் நின்று, கண்களை இமைத்தாள்; நிமிஷ நேரத்தில் சாம்பலானான், அசுரன்.
தனக்கு அருள் செய்த அம்பிகைக்கு, கோவில் எழுப்பிய அரசன், 'நிமிஷாம்பாள்' என, பெயரிட்டான்.
'கண நேரத்தில் வரம் அளிப்பவள்' என்பது, இதன் பொருள்.
நிமிஷம் என்ற பொருள்படும் படியான சொல், லலிதா சகஸ்ர நாமத்தில் வருகிறது. இதன், 281வது நாமாவளியில், ஒன்னுமேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவல்லே நம... என்று அம்பாள் போற்றப்படுகிறாள்.
நிமிஷ நேரத்தில் கோரிக்கைகளை அம்பாள், நிறைவேற்றுபவள் என்பது, இதிலிருந்து தெளிவாகிறது.
வைகாசி வளர்பிறை, தசமி திதியன்று, நிமிஷாம்பாள் அவதரித்தாள். அன்று, 108 கலசாபிஷேகம், துர்கா ஹோமத்துடன், நிமிஷாம்பாள் ஜெயந்தி நடக்கிறது.
'கிருஷ்ண சிலா' எனும், கருப்பு நிற சிலையாக இருக்கும் அம்பாளின் கைகளில், சூலம், உடுக்கை உள்ளது. தலை மீதுள்ள குடை, தர்மச் சக்கரமாக கருதப்படுகிறது. தினமும், மூன்று கால பூஜை நடக்கிறது.
விநாயகர், சிவன், பார்வதி, சூரியன், விஷ்ணு மற்றும் அனுமன் சன்னிதிகள் உள்ளன.
கிழக்கு நோக்கி இருக்க வேண்டிய சூரியன், இங்கு, மேற்கு நோக்கி உள்ளது விசேஷம்.
அர்ச்சகர்கள் நின்று பூஜை செய்வதில்லை; அமர்ந்தே நடத்துவர். கோவில் முன், காவிரி நதி ஓடுகிறது.
ஆடிப்பெருக்கன்று, நியாயமான கோரிக்கையை வைத்து, நிமிஷத்தில் நன்மை பெற்று வரலாம்.
காலை, 6:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை, கோவில் திறந்திருக்கும்.
மைசூருவில் இருந்து, 18 கி.மீ., துாரத்தில் உள்ளது, கஞ்சாம். தொடர்புக்கு: 08236 252640.
தி. செல்லப்பா
