தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (19)

அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (19)

அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (19)


PUBLISHED ON : ஜன 30, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 30, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரையில் அத்தையை சிகிச்சைக்காக அழைத்து செல்ல இருந்த நிலையில், அவர் இறந்து போனதாக கூறிய விக்ரம், கர்ச்சீப்பால் கண்களையும், முகத்தையும் துடைத்துக் கொண்டான்; ஆராதனாவும் கண்கலங்கி இருந்தாள்.''என் மேல உயிரே வைத்திருந்த அந்த அழகான அத்தை போய் சேர்ந்துட்டாங்க. அவங்க அத்தை இல்ல, என்னோட இன்னொரு அம்மா. அவங்க கைய பிடிச்சுகிட்டு எத்தனை இடத்துக்கு போய் இருக்கேன்? அந்த கையோட சின்ன கதகதப்பு, சூடு இப்பவும் என்னால் உணர முடியுது.''அத்தை நடத்திக்கிட்டு வந்த, 'மெஸ்'சை அப்பா வித்துட்டார். கூடவே மளிகை கடை, மருந்து கடை எதுலயும், அப்பாவுக்கு பிடிப்பு இல்லை. ஏதோ நான் இருக்கேன்னு உயிரைக் கையில் பிடிச்சிட்டு வாழ்ந்துகிட்டு இருந்தார். ராத்திரியும், பகலும் அத்தையை நினைத்து அழுது புலம்பி கொண்டே இருப்பார்.''அவ மனசை பாழாக்கி, அவ உயிர் போக காரணமாயிருந்த படுபாவி நல்லா இருக்க மாட்டான், நான் பட்ட வேதனை அவனும் படணும். அவனும் என்னை மாதிரி தவிக்கணும்ன்னு எப்ப பாரு சொல்லிக்கிட்டே இருப்பார். அந்த வயசுல அத்தை வேதனைப்பட்டதுக்கும், அப்பா வருத்தப்பட்டதுக்கும் எனக்கு காரணம் தெளிவாகப் புரியவில்லை.''அத்தையை நினைச்சு உருகிக்கிட்டிருந்தார், அப்பா. அதை அனுபவிச்சா தானே வேதனை புரியும். நானும் ஏதோ ஸ்கூலுக்குப் போனேன், வந்தேன். அப்பாவால என்னை ரொம்ப கவனிக்க முடியல. அவர் நிலைமை மோசமாகிட்டே வந்தது. திடகாத்திரமாய் இருந்தவர், உருக்குலைஞ்சி போனார்.''ஒருநாள் ஸ்கூல்ல இருந்து வந்தேன். வீட்டு வாசலில் ஒரே கூட்டம். உள்ள போய் பார்த்தேன். அத்தை போனதுக்கப்புறம் எனக்கு ஆதரவாக இருந்த ஒரே சொந்தம், எங்கப்பா... நடு ஹாலில் கிடந்தார். மாலை போட்டிருந்தது. கடைசி ஒரு வாரம், அவர் ரொம்ப பேசக் கூட இல்லை எனக்கு உலகமே இருண்டு போச்சு.''அப்பாவோட நண்பர் சந்தானம் மட்டும் இல்லைன்னா, இன்னிக்கு நான் கிடையாது. என்னை அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போனார். அவர் பையன் ராஜேஷோட என்னையும் வளர்த்து படிக்க வைத்தார். அப்பா வருத்தப்பட்டு பேசினதும், அத்தை அழுது புலம்புனதும் திரும்பத் திரும்ப எனக்கு கேட்டுட்டே இருந்தது. பல நாட்கள் துாக்கமே வராது.''பெரியவன் ஆக ஆக, எனக்கு நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பிச்சது. நடந்த விஷயத்தை யெல்லாம் தெரிஞ்சிக் கிட்டேன். காதல் வாழவும் வைக்கும், உயிரையும் எடுக்கும்ன்னு அத்தை விஷயத்தில் நல்லா புரிஞ்சுகிட்டேன்.''எந்த தப்பும் பண்ணாம அவங்க வேலையை பார்த்துகிட்டு இருந்த அத்தைக்கு இப்படி ஒரு முடிவு வரணுமா? 'அவ மனச பாழாக்கிய அந்த பாவி நல்லா இருக்க மாட்டான். நான் பட்ட வேதனை அவனும் படணும். அவனும் என்ன மாதிரி தவிச்சு துடிக்கணும்'ன்னு, அப்பா சொல்லிச் சொல்லி அழுதது, கல்லுல செதுக்கின மாதிரி, என் மனசுல அழுத்தமா பதிஞ்சிடுச்சு.''பழி வாங்கணும். ராமலிங்கத்தை சும்மா விடக் கூடாது. காதல் என்ற கத்தியை எடுத்து, அத்தையோட நெஞ்சுல குத்திக் கொலை பண்ணின அந்த ஆள விடக் கூடாது. அப்பா தவிச்ச மாதிரி, அவனும் அணு அணுவா வேதனைப் படணும்ன்னு, உறுதியான முடிவு எடுத்தேன்.''உங்க குடும்பம் மற்றும் உங்களைப் பற்றி எல்லா விபரத்தையும் என் நண்பன் ராஜேஷ் சேகரித்து கொடுத்தான். உங்க மூணு பேரையும் குறி வைத்து திட்டம் போட்டு காதலிச்சேன்.''மூணு பேரையும், 'லவ்' பண்றது நான்தான்னு, உங்க மூணு பேருக்கும் தெரிஞ்சிட கூடாதுன்னு, உங்க கூட, 'செல்பி' எடுக்கிறத தவிர்த்தேன். ரொம்ப அலைச்சல், தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டு இருக்கேன். இதை ராமலிங்கம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.''இனி உங்க முகத்துல முழிக்க அவருக்கு யோக்கியதை கிடையாது. அது மாதிரி, உங்களால் என்னை அவ்வளவு சுலபமா மறக்க முடியாது. வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கவும், உங்களுக்கு மனசு வராது. அவ்வளவு உண்மையா, அழுத்தமா உங்க மனசுல நான் காதல விதைச்சிட்டேன்னு எனக்கு தெரியும்; உங்களுக்கும் தெரியும்.''ஒரு கெட்டவனுக்கு நீங்க பொறந்ததுனால, இந்த தண்டனையிலே உங்களுக்கும் பங்கு உண்டு. ஐ யாம் ஸாரி,'' என்றான், விக்ரம்.ஆராதனாவால் எதுவும் பேச முடியவில்லை.''உங்க அத்தையோட முடிவுக்கு எங்க அப்பா தான் காரணம்ன்னா, அவரை தானே பழிவாங்கி இருக்கணும். எதுக்கு எங்களை பகடைக்காய் ஆக்கணும்?''''கசன் -- தேவயானி கதை உங்களுக்கு தெரிந்திருக்காது; மகாபாரத கதை. அசுரகுரு சுக்ராச்சாரியாரோட பொண்ணு தேவயானி. அமரகுரு பிரகஸ்பதியோட பிள்ளை கசன். செத்தவர்களை பிழைக்க வைக்கிற மந்திரம் சுக்ராச்சாரியாருக்கு தெரியும்.''அந்த மந்திரம் நமக்கு தெரியணும். நீ போய் அவர் பொண்ணு தேவயானியை காதலிக்கிற மாதிரி நடிச்சு அந்த மந்திரத்தை தெரிஞ்சுகிட்டு வான்னு, கசனை அனுப்புறாங்க. அவன் போறான். விழுந்து விழுந்து காதலிக்கிறான். மந்திரத்தை தெரிஞ்சுக்கிட்டு வந்தான்.''கசன், தேவயானியை காதலிச்சது ஒரு காரணம் தான். நோக்கம் மந்திரத்தை தெரிஞ்சுக்கிறது. என் நோக்கம் ராமலிங்கத்தை பழிவாங்குகிறது. அதுக்கு ஒரே வழி உங்களை காதலிச்சது,'' என்றான், விக்ரம்.அவர்கள் எதுவும் பேசவில்லை.''காதல்ங்கிறது எவ்வளவு புனிதமான விஷயம். அது பொள்ளாச்சி முத்துராமன் குடும்பத்தையும் அழிச்சது. ராமலிங்கம் குடும்பத்திலயும் சூறாவளியா வீசியிருக்கு. காதலிக்கிறது ஒருத்தரை, கல்யாணம் பண்ணிக்கிறது ஒருத்தரைங்கிறது உலகத்தில் நடக்கறது தான். பெரிய விஷயம் இல்லன்னு உங்கப்பாவே சொல்லி இருக்கார்.''நான் செஞ்சது நியாயம்னா, என்னை மன்னிச்சு மறந்திடுங்க. நான் செஞ்சது தப்புன்னா எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன்,'' என்றான், விக்ரம்.சிறிது நேரத்துக்கு பரிபூரண அமைதி நிலவியது. ஒரு பக்கமாக பார்த்து நின்றிருந்தாள். இப்போது அலைகளின் சத்தம் கொஞ்சமாக கேட்டது. எதுவும் பேசாமல் காரை நோக்கி நடந்தாள், ஆராதனா.ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து, காரில் புறப்பட்டான், விக்ரம்.

முற்றும்கோபு பாபு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us