தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/லட்சிய தாய் ராணியம்மா!

லட்சிய தாய் ராணியம்மா!

லட்சிய தாய் ராணியம்மா!


PUBLISHED ON : ஜன 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழின் இணைப்பாக வாரமலர், ஆன்மிகமலர், சிறுவர்மலர் வருவது போல மாணவர்களுக்காகவே, 'பட்டம்' சிறப்பிதழ் வருவதும், அனைவரும் அறிந்ததே.

'பட்டம்' மாணவர் பதிப்பின் சார்பாக, மாவட்டம் தோறும் சிறந்த பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, லட்சிய ஆசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் நடந்த லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழாவில், திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீ ஆர்.எம். ஜெயின் பள்ளியைச் சேர்ந்த, ஐடா என்ற தமிழ் ஆசிரியைக்கு விருது வழங்கப்பட்டது.

விருது பெறும் போது, 'இந்தப் பெருமைக்கு முக்கிய காரணமான என் தாயார் உடனிருந்தால் இன்னும் சந்தோஷப்படுவேன்...' என்றார்.

'நிச்சயமாக, அது எங்களுக்கும் சந்தோஷம் தரும் நிகழ்வு தான்...' என்ற விழாக்குழுவினர், ஐடாவின் தாயார் ராணி அம்மாவை, ஆசிரியையும், மகளுமான அவரின் பக்கத்தில் நிறுத்தினர்.

அப்போது, 'சமூகத்திற்கு நல்லதொரு ஆசிரியரை தந்த உங்களுக்கு, எங்கள் வாழ்த்துக்கள்...' என்ற போது, அவசரமாக, 'மைக்'கை வாங்கிய ஐடா, 'ஒரு ஆசிரியரை அல்ல, ஆறு ஆசிரியரை என் அம்மா வழங்கியுள்ளார்...' என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.

'கொஞ்சம் விபரமாக சொல்ல முடியுமா...' என்றோம்.

ஐடா கூற ஆரம்பித்தார்:

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையைச் சேர்ந்த மீனவர் தான், எங்கள் அப்பா அந்தோணிசாமி-. அவரது மனைவியாகிய எங்கள் அம்மாவிற்கு தேன்மொழி, ரதி, ஐடா, டிசிலா, கோல்டு, பெக்சஸ்டஸ் என, ஆறு பெண் குழந்தைகள்.

அம்மா ராணி, பள்ளிப் படிப்பை முடிக்காதவர். கொஞ்சம் படித்திருந்தால் கடலை மட்டுமே நம்பி வாழும் கணவருக்கு ஏதோ ஒருவகையில் உதவி இருக்கலாமே என, எண்ணினார்.

சரி நடந்தது நடந்து விட்டது. நமக்கு பிறந்த பெண் குழந்தைகளையாவது எப்பாடுபட்டாவது நன்றாக படிக்க வைக்க வேண்டும். அவர்கள் சொந்தக்காலில் நிற்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தரவேண்டும் என, வைராக்கியம் கொண்டார். இதற்காக நிறைய கஷ்டப்பட்டார்.

'பொம்பளப் பிள்ளைகள பீடி சுத்த அனுப்பினா, வருமானமாவது உனக்கும், குடும்பத்திற்கும் வருமே...' என, உறவினர்களும், நண்பர்களும் கூறினர்.

அப்போது, 'நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. என் பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது. படிக்க வச்சு எல்லாரையும் டீச்சர் ஆக்குவேன்...' என்றார்; அதன்படியே ஆக்கிவிட்டார்.

நாங்கள் ஆறு பேரும், அம்மாவின் லட்சியம் அறிந்து அதற்கேற்ப படித்தோம். பள்ளிப் படிப்பை, திருநெல்வேலியிலுள்ள இடிந்தகரையிலும், கல்லுாரி படிப்பை, நாகர்கோவிலிலும், பின், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை அதற்கான இடங்களிலும் படித்து முடித்தோம்.

எவ்வித சிபாரிசுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களாக இருக்கிறோம்.

அம்மா நினைத்தபடி சொந்தக் காலில் நிற்பது மட்டுமின்றி, நாடும், ஏடும் போற்றும்படியாக, இப்போது உங்கள் முன் நல்லாசிரியராக, லட்சிய ஆசிரியராக கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

அப்பா இப்போது உயிருடன் இல்லை. அம்மாவிற்கு வயது, 73 ஆகிவிட்டது. 'இப்போதாவது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் அம்மா...' என்று சொல்கிறோம். 'என் பேரப் பிள்ளைகளின் கல்விக்கனவுகளை நிறைவேற்ற வேண்டாமா...' என்று, இப்போது, அவர்களை தயார் செய்து வருகிறார்.

இவ்வாறு, லட்சிய ஆசிரியர் ஐடா சொல்லி முடித்த போது, அரங்கில் உள்ளோர் எழுந்து நின்று, கைதட்டி, லட்சிய தாயான, ராணி அம்மாவை, பாராட்டி மகிழ்ந்தனர்.

எம். ராகவேந்தர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us