தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

வயது: 30, பெற்றோருக்கு ஒரே மகள். பட்ட மேற்படிப்பு படித்துள்ளேன். மாற்று திறனாளி ஒருவரை காதலித்தேன். ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர், அவர். அவரும் என் மீது உயிராக இருந்தார்.

'இன்றைய சூழலில், நன்றாக இருப்பவர்களாலேயே குடும்பத்துக்கு தேவையானதை சம்பாதித்து கொடுக்க முடியல... அப்படி இருக்கிறப்ப, அவரால், உன்னை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும்...' என்று, திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தனர், பெற்றோர்.

'காதலா, குடும்பமா' என்ற குழப்பம் வந்தபோதும், அவரையே மணப்பது என்று உறுதியாக இருந்தேன். பெற்றோரை எதிர்த்து, திருமணம் செய்து, தனியாக சென்று விட்டேன்.

கிடைத்த வேலையெல்லாம் செய்து, குடும்பம் நடத்தினோம். மகன் பிறந்தான். இப்போது, அவனுக்கு ஐந்து வயதாகிறது. கடுமையாக உழைக்க ஆரம்பித்தோம். போதிய வருமானம் கிடைத்த சூழலில், நோய்வாய்பட்டு இறந்து போனார், கணவர்.

நிர்க்கதியில் நின்ற என்னையும், மகனையும், என் பெற்றோர் தான் ஆறுதல் சொல்லி, தங்களுடன் அழைத்து வந்து காப்பாற்றி வருகின்றனர்.

குழந்தையை நன்கு வளர்க்க வேண்டும் என்பதற்காக, கம்பெனி ஒன்றில், 'சூப்பர்வைசர்' வேலையில் சேர்ந்தேன். இரண்டு ஆண்டுகளில், பணி உறுதி செய்யப்பட்டு, நிரந்தர பணியாளராக நியமிக்கப்பட்டேன்.

என்னைப் பற்றி அறிந்த, மனைவியை இழந்த மேலதிகாரி ஒருவர், திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லியும், வற்புறுத்துகிறார்.

குழந்தைக்காக வேண்டி அவரை ஏற்றுக்கொள்ளலாமா என்று மனம் தடுமாறுகிறது. என் பெற்றோரிடம் சொல்ல தயக்கமாக இருக்கிறது.

என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் தத்தளிக்கிறேன், அம்மா. எனக்கு ஒரு நல்ல வழி காட்டுவீர்களா?



— இப்படிக்கு,

அன்பு மகள்.


அன்பு மகளுக்கு —

மேலதிகாரியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டும் முன் கீழ்க்கண்ட விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்...

* மேலதிகாரிக்கு வயதென்ன, அவரது மனைவி தற்கொலை செய்து இறந்தாரா அல்லது நோய் வாய்ப்பட்டு இறந்தாரா... மேலதிகாரியும், அவரது மனைவியும் எத்தனை ஆண்டுகள் குடும்பம் நடத்தினர்; மேலதிகாரிக்கு குழந்தை இருக்கிறதா...

மேலதிகாரிக்கு தீவிரமான குடிப்பழக்கம் இருக்கிறதா... திருமண ஆசை காட்டி கம்பெனி பெண்களுடன் பழகுகிறாரா... தற்சமயம், எங்கு இருக்கிறார்; இப்போது அவருக்கு யார் சமைத்து போடுவது... அவரின் பெற்றோர் உயிருடன் இருக்கின்றனரா?

இது போன்ற அனைத்து தகவல்களையும் சேகரி. சேகரிக்கும் தகவல் 10ல், ஆறு நேர்மறையாக இருந்தால், தாராளமாக அவரை நீ, மறுமணம் செய்து கொள்ளலாம்

* உன்னை மேலதிகாரி மணந்து கொள்ள விரும்புவதை, உன் பெற்றோரிடம் கனிவாய் தெரிவி. பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டாய். ஏற்கனவே புண்பட்டிருக்கும் பெற்றோரை, மேலும் புண்படுத்தாதே.

உன் இரண்டாம் திருமணத்துக்கு அனுமதியும், ஆலோசனையும் கேட்பது அவர்களை கண்ணிய படுத்தும். உன் கணவர் மரணத்துக்கு பிறகு, பெற்றோர் தான் உன்னையும், குழந்தையையும் பராமரித்து வருகின்றனர். அவர்களது அனுமதி இல்லாமல் மறுமணம் செய்து கொள்ளாதே. அவர்கள் தரப்பில், மேலதிகாரி பற்றி விசாரிக்கட்டும்

* உன் மகன் அந்த மேலதிகாரியிடம் பேசும் மற்றும் பழகும் போதுசவுகரியமாக உணர்கிறானா... மேலதிகாரி மேம்போக்காக இல்லாது, அவனை மகனாக ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் கொண்டிருக்கிறாரா... மகன் மற்றும் மேலதிகாரியின் மன ஓட்டத்தை கவனி

* நீயும், அவரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 30 வயதான நான் எதற்கு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்பாய். நீயும், மேலதிகாரியும் புது வாழ்க்கை துவங்கப் போகிறீர்கள் அல்லவா

* மறுமணத்திற்கு பின், ஆணோ, பெண்ணோ ஒரு குழந்தை தான் பெற்று கொள்வேன்- என, நிபந்தனை விதி. நீ குழந்தை பெறும்போது, உன் மகனுக்கு வயது ஆறு அல்லது ஏழாகும். பிறக்கும் குழந்தையை உன் மகன் தங்கையாய், தம்பியாய் ஏற்றுக் கொள்வான். இரு குழந்தைகளை இணைத்து வளர்ப்பது, உங்களிருவருக்கும் மிக எளிதாக இருக்கும்

* இந்த மறுமணம் தற்காலிக ஏற்பாடு என, பாவிக்காமல், ஆயுட்கால ஏற்பாடாய் இதயத்தில் துாக்கிப் பிடி.

திருமணம் செய்வதற்கு முன், இறந்து போன கணவரிடம் மானசீகமாக அனுமதி கேள்.

— தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us