PUBLISHED ON : ஜன 15, 2023

தை பிறந்தால் வழி பிறக்கும்
உழவன் கை உயர்ந்தால்
நாடு வளம் கொழிக்கும்!
தை... தை என, தை மகள் வந்தாள்தித்திக்கும் நங்கையாய் திருமகள் உதித்தாள்
பொழுதும் புலர்ந்தாச்சு
இனிய பொங்கலும் வந்தாச்சு
வசந்தமும் வந்தாச்சு
வாழ்வில் செழிப்பும் உண்டாச்சு!
உலகுக்கு உணவை அளிக்கும்
உழவனின் உள்ளம் பொங்க
சிந்தை துலங்கி உயர் எண்ணம் மிளிர
கனிவாய் மலர்வதே தைப் பொங்கல்!
காலை கதிரவனை வணங்கி, நன்றியோடு
ஆதாயம் எதிர்பாராத ஆதவனுக்கும்
ஓயாமல் உழைத்த காளைக்கும்
நன்றி படையல் இயற்கை எழிலோடு!
உழவன் வீட்டில் சர்க்கரைப் பொங்கல்
காளைக்கும் இங்கே மாட்டுப் பொங்கல்...
கரும்பாய் அனைவரின் நாவில் இனித்திட
குறும்பாய் சிறார்கள் மாட்டை விரட்டிட...
பொங்கலோ பொங்கல் ஒலித்திடும் திருநாளில்
ஜல்லிக்கட்டு காளையோ ஜனங்களை முட்டுது
காணும் பொங்கலும் கிட்ட நெருங்குது
கடைதனில் மக்கள் கூட்டமோ அலை மோதுது!
சுற்றமும், நட்பும் சூழ
உற்றார், உறவினர் வாழ்த்த
மத, இன, மொழி பேதமின்றி நல்லிணக்கமாய்
காண்போர் நெஞ்சம் பொங்கிடவே இனிய
காணும் பொங்கலில் உள்ளம் மகிழ்ந்திடுமே!
நம் எண்ணங்கள் வான் நோக்கி இருக்கட்டும்
உண்மைகள் நம்மைச் சூழ்ந்து இருக்கட்டும்
சிந்தை மகிழச் சீர் பெருகட்டும் நம் வீட்டினில்
ஆரோக்கிய செல்வம்
தழைக்கட்டும் நம் நாட்டினில்
பொங்கலோ பொங்கலென,
பொங்கட்டும் தமிழர் வாழ்வு
தங்கட்டும் செல்வங்கள்!
புனிதா சங்கர், சென்னை.
