தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கடமைகள் மறப்பதில்லை!

கடமைகள் மறப்பதில்லை!

கடமைகள் மறப்பதில்லை!


PUBLISHED ON : ஜன 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமையலறையில் இருந்த ஜெயந்திக்கு, 'அம்மா, அம்மா...' மகன் ஆதித்யா அழைத்தது, காதில் விழுந்ததும், எரிச்சலானாள்.

'தினமும் இந்த பையனுக்கு இதே வேலையா போச்சு. கல்யாணத்துக்கு முன் தான் எதுக்கெடுத்தாலும், என் முந்தானையையே புடிச்சிட்டிருந்தான்னு பார்த்தா, இப்பவும் அப்படி நம்மளை போட்டுப் படுத்துறானே...' என்று நொந்தபடியே, குரல் கேட்ட பாத்ரூமை நோக்கி நடந்தாள்.

''என்னப்பா ஆதி, எதுக்கு கூப்பிட்ட?''

''அம்மா, டவல மறந்து வெச்சுட்டேன். எடுத்துக் கொடு,'' என்றான், ஆதி.

''சரியாப் போச்சு. இந்த டவல, என்கிட்ட தான் கேட்கணுமா? அதான் உன் பொண்டாட்டி இருக்காளே, அவளை கூப்பிடறது,'' என்றாள்.

''இல்லம்மா, அவ, 'லேப்- டாப்'ல ஏதோ சீரியஸா வேலை பார்த்துட்டிருக்கா; கூப்பிட்டாலும் கேட்காது. அதான் உன்ன கூப்பிட்டேன்,'' என்றான்.

டவலை அவனிடம் எடுத்துக் கொடுத்து திரும்பினாள். படுக்கை அறையில் தலையணை மேல் ஒய்யாரமாக சாய்ந்து, மடிக்கணினியை பார்த்துக் கொண்டிருந்த மருமகள் ஜனனியின் மேல், அவள் பார்வை விழுந்தது.

'ஹூம்... மகாராணி, காலையிலேயே, 'லேப் - டாப்'பும் கையுமா உட்கார்ந்துட்டாங்க, நேரத்துக்கு சாப்பிட வந்துருவாங்க. போய் தயார் பண்ண வேண்டியது தான்...' என்று நொந்தபடியே சமையலறை சென்றாள், ஜெயந்தி.

நேற்று மாலை கோவிலில், தோழி வெண்ணிலா, தன் மருமகள் குறித்து சொன்னது, நினைவுக்கு வந்தது.

'என் மருமக, என் கால் கூட தரையில் பட விடறதில்ல; பம்பரம் போல சுத்திட்டே இருப்பா. எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்வா. சமையல் கைப்பக்குவம் அதுக்கும் மேல.

'நல்ல வேளை, என் பையன், உன் மகனைப் போல, வேலைக்கு போற பொண்ண கட்டிக்கல. இல்லைன்னா, நானும் உன்னை போல, தினமும் இப்படி புலம்பி இருப்பேன்...'

'ஆமா, அவ சொன்னதும் உண்மை தான். ஜனனி வந்து ரெண்டு மாசமாச்சு, இதுவரைக்கும் சமையல்கட்டு பக்கம் வந்து, ஒரு காபி கூட போட்டதில்ல. வீட்டு வேலை எதுவும் பண்ணறதில்ல.

'ஏன்... சாமி விளக்கு கூட ஏத்தினதில்ல. வேலைக்கு போற பொண்ணு வந்தா, ஆதிக்கு நல்லாயிருக்கும்ன்னு யோசிச்சேனே தவிர, எனக்கு எப்படி இருக்கும்ன்னு யோசிக்காம விட்டது எவ்வளவு பெரிய தப்பாப் போச்சு.

'காலையில எழுந்து, டிபன் சாப்பிட்டுட்டு, நான் கட்டி வைக்கிற, 'லஞ்ச் பாக்ஸ்' எடுத்து பைக்குள்ள போட்டுக்கிட்டு, 'டாடா' காட்டிட்டு போயிட்டே இருக்கா. ராத்திரி வந்த உடனே சாப்பிட்டுட்டு அறைக்குள்ள போயிடுறா. பையனைக் கேட்டா, 'அவ வேலை அப்படி'ன்னு சொல்றான்.

'ஊர்ல மத்தவங்கள்லாம் வேலைக்கு போகலையா? நான் பார்த்திருக்கேனே, எதிர் பிளாட் கீதா, காலையில எழுந்து சமையலையும், மத்த வேலையையும் முடிச்சுட்டுதானே வேலைக்குக் கிளம்புவா. இவளுக்கு மட்டும் என்ன அப்படிப்பட்ட வேலை...' என்று, ஜெயந்திக்கு கோபமாக வந்தது.

'சரி, மகனுக்காக பொறுத்து தான் ஆக வேண்டும்...' என்று நினைத்துக் கொண்டாள்.

அன்று நள்ளிரவு, ஜெயந்திக்கு, திடீரென்று குளிர் ஜுரம். படுக்கையை விட்டு எழ முடியவில்லை. ஆதி கொடுத்த மருந்தை போட்டு, படுத்தது தான் தெரியும். அவள் கண் விழித்து பார்த்த போது, அவளுக்கருகில் நின்று கொண்டிருந்தாள், மருமகள் ஜனனி.

ஜெயந்தி எழுந்து உட்கார முயற்சித்தாள். உடல் இணங்க மறுத்தது.

அவளை துாக்கி உட்கார வைத்து, ''என்ன ஆன்ட்டி, இப்போ எப்படி இருக்கு?'' என்றாள், ஜனனி.

''கொஞ்சம் பரவாயில்லம்மா. உடம்பு தான் ரொம்ப வலிக்குது,'' என்றாள், ஜெயந்தி.

''இந்தாங்க ஆன்ட்டி, இந்த கஞ்சியை குடிச்சுட்டு, மருந்து சாப்பிடுங்க,'' என்று கூறி, கிண்ணத்தில் இருந்த கஞ்சியை எடுத்து கொடுத்தாள், ஜனனி.

அதை ஆச்சரியத்துடன் கையில் வாங்கி, மகன் எங்கே என்று தேடினாள்.

''அவர், அப்பவே ஏதோ முக்கியமான மீட்டிங்னு, ஆபீஸ் கிளம்பிட்டாரு, ஆன்ட்டி. நான், 'லீவு' போட்டுட்டு உங்கக் கூட இருக்கேன்னு சொல்லிட்டேன். நீங்க எழுந்த உடனே போன் பண்ண சொன்னாரு,'' என்றாள், ஜனனி.

உடனே, மகன் சாப்பிட்டானோ இல்லையோ என்று கவலை வந்தது. மேலும், வீடு, போட்டது போட்டபடி கிடக்குமே என்ற நினைப்பும், கண்முன் நிழலாடியது. என்ன செய்வது, உடம்பு திடீர்னு இப்படி ஆயிருச்சே, சரியான பிறகு எல்லாத்தையும் பார்த்துக்கலாம் என்று நினைத்தபடி, கஞ்சியை அருந்தி, மருந்து சாப்பிட்டதும், மீண்டும் அவளுக்கு கண்கள் சுழற்றி வந்தன.

மாலை எழுந்தபோது, பார்ப்பதெல்லாம் கனவா இல்லை நனவா என்று ஜெயந்திக்கு தோன்றியது.

வீடு பளிச்சென்று இருந்தது. பாத்திரங்கள் கழுவி, துணிகள் துவைத்து காயப் போடப்பட்டிருந்தன. பூஜையறையில் ஊதுபத்தி நறுமணத்துடன் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சமையலறையில் இருந்து ஏதோ சமைக்கும் வாசனையும் வந்தது.

மெதுவாக நடந்து போய் எட்டிப் பார்த்தாள். மருமகள் ஜனனி ஏதோ பாடலை முணுமுணுத்தபடி, சமைத்துக் கொண்டிருந்தாள். ஜெயந்திக்கு ஆச்சரியமும், சந்தோஷமும் தாங்கவில்லை.

'நம் மருமகளா இப்படி... எல்லாம் அதிசயமாக இருக்கிறதே...' என்று எண்ணியபடி, உள்ளே சென்றாள்.

''வாங்க ஆன்ட்டி... ஆதி வந்து சாப்பிட்டுட்டு, உங்களை அப்படியே கிளீனிக்குக்கு அழைச்சுட்டு போறேன்னாரு. அதான், 'டின்னர் ரெடி' பண்ணிட்டிருக்கேன். அவருக்கு பிடிச்ச சப்பாத்தி, சென்னா மசாலா செஞ்சு முடிச்சுட்டேன். அப்புறம், உங்க வாய்க்கு நல்லா இருக்குமேன்னு, 'வெஜ் சூப்' பண்ணிட்டு இருக்கேன்,'' என்ற மருமகளை, பார்த்து கொண்டிருந்தாள், ஜெயந்தி.

கிளீனிக்கில் மருத்துவரைப் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது, வரவேற்பறையில் மகனும், ஜனனியும் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

''என்ன... யாரோ திடீர்னு குடும்ப குத்துவிளக்கு போல மாறிட்டாங்க போல,'' என்று கிண்டலடித்தான், ஆதி.

''என்னது, குடும்ப குத்துவிளக்கா... என்ன சொல்லறீங்க?'' என்றாள், ஜனனி.

''ஆமா, நான் தான் பார்த்தேனே... 'லீவு' அன்னிக்கு கூட எழுந்து ஒரு வேலையும் செய்ய மாட்ட. இன்னிக்கு என்னடான்னா, எல்லா வேலையையும் முடிச்சுட்டு, சூப்பரா டின்னர் வேற சமைச்சிருந்த.

''நான் செஞ்சு குடுன்னு கேட்கறப்பல்லாம் அப்புறமா செய்யிறேன்னு சொல்லுவ. நான் கூட இன்னிக்கு, 'ஆன்லைன்'ல தான் ஆர்டர் பண்ணணுமோன்னு நெனச்சேன். என்ன இந்த திடீர் மாற்றம்?''

''பின்ன, ஆன்ட்டிக்கு உடம்பு முடியலன்னா, நான் தானே இந்த வீட்டைப் பார்த்துக்கணும். இதுல என்ன இருக்கு?''

''ஏன்டி, அவங்க நல்லாயிருக்கும் போதே இதேபோல பண்ணினா, அவங்களுக்கும் உதவியா இருக்கும்ல... உடம்பு சரியில்லைன்னா தான் பண்ணணும்ன்னு எதாவது, 'ரூல்' இருக்கா என்ன?''

''சே சே... அப்படில்லாம் இல்லைங்க. எனக்கும் எல்லாம் பண்ணணும்ன்னு ஆசை தான். ஆனா, பயம்.''

''பயமா, என்ன சொல்ற?''

''ஆமா... எங்க வீட்டுக்கு, அண்ணி வந்த புதுசுல, சமையல்ல இருந்து, பூஜை வரைக்கும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாங்க. ஆனா, எங்கம்மா என்னமோ, அவங்க வந்த உடனே இவங்களோட அதிகாரமே போயிருச்சுன்னு, ரொம்ப, 'பீல்' பண்ணினாங்க. அதனால, ரெண்டு பேருக்கும் மனக்கசப்பு வந்தது தான் மிச்சம்.

''நான் இங்கு வந்த நாளிலிருந்து இதுவரைக்கும், எந்த வேலையும் செய்ய சொன்னதே இல்ல, ஆன்ட்டி. அதனால, எதுக்கு தேவையில்லாம அவங்களோட ரெகுலர் வேலையில் தலையிடணும்ன்னு, என் வேலைய மட்டும் பார்த்துகிட்டேன்.

''ஆனா, எப்பவும் நான் இந்த வீட்டுப் பொண்ணு தான். அதனால், இந்த வீட்டையும், அதில் இருக்கறவங்களயும் பார்த்துக்க வேண்டியது, என் கடமை. நான் மாறவெல்லாம் இல்ல, எப்பவும் இப்படித்தான். புரிஞ்சுதா ஆதி கண்ணா,'' என்று சொல்லி சிரித்தாள், ஜனனி.

அதைக் கேட்ட ஆதிக்கு புரிந்ததோடு மட்டுமில்லாமல், ஜெயந்திக்கும் தன் மருமகளைப் பற்றி நன்றாகவே புரிந்தது.

'அடடா... என் மருமகப் பொண்ணு, நான் கஷ்டப்படுவேனோன்னு நினைத்தல்லவா இவ்வாறு நடந்துக் கொண்டிருக்கிறாள். இது தெரியாமல் இவ்வளவு நாளும் அவளை மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தோமே...

'நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று, அவளிடமே நேரடியாக வெளிப்படுத்தாமல், அனைவரிடமும் அவளைப் பற்றி குறை கூறியது எவ்வளவு பெரிய தவறு.

'இந்த காலத்து பெண்கள் படித்து, வேலைக்குப் போனாலும், வீட்டுக் கடமைகளை என்றும் மறப்பதில்லை. நாம் தான் இந்தத் தலைமுறையின் எண்ண ஓட்டத்தை சரியாக கணிப்பதில்லை.

'அன்புடன் பேசிப் பழகி, அவர்களின் மனதைப் புரிந்து, மனமொத்து வாழவில்லை. இந்த குடும்ப பயணத்தை, இனி, நாம் அழகாக பயணிக்க வேண்டும்...' என்று நினைத்து கொண்டாள்.

மேலும், 'உடல் சரியானவுடன், முதல் வேலையாக, வேலைக்குப் போகும் மருமகள், என்னையும், வீட்டையும் அழகாக கவனித்துக் கொண்டதை, அனைவரிடமும் பெருமையாகக் கூற வேண்டும்...' என்று எண்ணிக் கொண்டாள், ஜெயந்தி.

பி. கவிதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us