PUBLISHED ON : நவ 08, 2020

அம்புலிமாமா சங்கர்' என, அன்போடு அழைக்கப்படும், சிவசங்கரன், உடுமலைப்பேட்டை, தாராபுரம் அருகே உள்ள, காரத்தொழுவு கிராமத்தில், ஜூலை 19, 1924ல், கே.எஸ்.ஏ.அனந்த சந்திரசேகர சிவா - விஜயலட்சுமி தம்பதியருக்கு, மூன்றாவது மகனாகப் பிறந்தார்.
கிராமத்திலிருந்து, 1934ல், சென்னையில் காலடி வைத்தார். பிராட்வேயில் உள்ள கார்பரேஷன் பள்ளியில், 5ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார், சங்கர்.
இவரது கையெழுத்து மிக அழகாக இருக்கும். அதனால், ஒவ்வொரு நாளும், பொன்மொழி ஒன்றை, பள்ளி கரும்பலகையில் எழுதச்சொல்வாராம், தலைமை ஆசிரியர்.
மாங்காடு, எல்லப்ப செட்டியார் மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் 8ம் வகுப்பு வரை படித்தார். அப்போது, 'வாரதா ஸ்கீம்' என்று, ஒரு வகுப்பு உண்டு. அதில், மர வேலை, மண் சிலைகள் செய்வது மற்றும் 'ஆக் ஷா பிளேடு' கொண்டு சிற்பங்களை வடிவமைப்பது பற்றி விளக்கப்படும்.
இந்த மூன்றில், கடைசியாக சொன்ன வேலை, இவருக்கு மிகவும் பிடித்தது. பிளேடால் எழுத்துக்களை பல கோணங்களில் வெட்டுதல், இவருக்கு கை வந்த கலையாக வந்ததை கண்டு, ஆசிரியர்கள் பாராட்டினர்.
பின்பு, 11ம் வகுப்பு வரை, சென்னை, முத்தியால்பேட்டை பள்ளியில் படித்தார். அதே பள்ளியில் தான், விஜயா - வாகினி நிர்வாகி, நாகிரெட்டியும் படித்துள்ளார்.
இப்பள்ளியின் ஓவிய ஆசிரியர், இவரின் படம் வரையும் திறனைக் கண்டு, 'ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் மற்றும் கிராப்ட்ஸ் கல்லுாரியில் சேர். ஓவிய கலையில், உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது...' என்று, கூறியுள்ளார்.
ஓவிய ஆசிரியர் சொன்னதை, வேத வாக்காக எடுத்து, ஓவிய கல்லுாரியில் சேர்ந்தார். இவரது திறமையால், ஐந்து ஆண்டு படிப்பை, நான்கே ஆண்டில் முடித்தார்.
ஓவியக் கல்லுாரியில் படித்து முடித்ததும், 'கலைமகள்' பத்திரிகையில் வேலை கிடைத்தது. அப்போது, 'கலைமகள், மஞ்சரி டைஜஸ்ட்' மற்றும் 'கண்ணன்' என்ற குழந்தை பத்திரிகை என, மூன்றிலும், இவருக்கு படம் வரைய வாய்ப்பு கிடைத்தது. அதனால், அனைத்து வகையான ஓவியங்களையும் மிக அழகாக வரைந்து, சாதனை படைக்க ஆரம்பித்தார், சங்கர்.
படம் வரைவது மட்டுமின்றி, புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் ஏற்பட்டது. 'ரோலிபிளக்ஸ்' எனும் கேமராவை வாங்கி, படம் எடுக்க ஆரம்பித்தார். நடிகர்கள், எம்.கே.ராதாவின் மகன், ஜி.வரலட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன்,
டி.ஆர்.மகாலிங்கம், அஞ்சலி, டி.ஆர்.ராமச்சந்திரன், சாரங்கபாணி போன்றோரை, 'கண்ணன்' பத்திரிகை இதழுக்கு புகைப்படம் எடுத்து அனைவரிடமும் பாராட்டு பெற்றார்.
ஞாயிற்று கிழமைகளில், அடையாரில் உள்ள அருண்டேல் நுாலகத்திற்கு, மதியம் சாப்பிட, தயிர் சாதத்துடன் சென்று விடுவார். அங்கு, பல வெளிநாட்டுப் புத்தகங்கள், 'வழுவழு' தாளில் அச்சிடப்பட்டிருக்கும். அதில் இருந்து மெல்லிய பேப்பரில், 'டிரேஸ்' செய்து, ஓவியத்தில் வித்தியாசமாக வரையவும், வண்ணம் தீட்டவும், தன்னைத் தானே பட்டைத் தீட்டிக்கொண்டார்.
இவரது அபார ஓவியத்திறனைக் கண்ட நுாலகத்தின் அதிகாரி, இவருக்கு தனியே ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுத்தார். ரவிவர்மா ஓவியங்கள், இவருக்கு மிகவும் பிடிக்கும்.
வெங்கடாசாரி என்பவர், அப்போது ஒரு விளம்பர கம்பெனியை நடத்தி வந்தார். 'கலைமகள்' இதழ் அலுவலகத்தில், சங்கரை சந்தித்த அவர், 'நாகிரெட்டி சக்ரபாணி நடத்தும், 'அம்புலிமாமா' பத்திரிகையில் படம் வரைய, ஓவியர் தேவை. வா, அவர்களை பார்த்து வரலாம்...' என்று, அழைத்துச் சென்றார்.
அப்போது, 'உங்களது, ஓவியங்கள் மிக அழகாக உள்ளன. பத்திரிகையில் வேலை பார்க்கிறீர்கள்... உங்களது சம்பளம் எவ்வளவு...' என்று கேட்டுள்ளனர்.
'நான் சம்பளமாக வாங்குவது, 150 ரூபாய். குடும்பம் நடத்த இப்பணம் போதாததால், ஓய்வு நேரங்களில், மற்ற பத்திரிகைகளுக்கும் ஓவியம் வரைந்து, அதன் மூலம் கூடுதலாக, 150 ரூபாய் சம்பாதிக்கிறேன். மாதச் சம்பளம், 350 ரூபாய் தர ஒப்புகொண்டால் தான், என்னால், 'சந்தமாமா'வில் சேர முடியும்...' என்று சொல்லி விட்டார், சங்கர்.
அவர்களும் ஒப்புக்கொண்டனர்.
'சந்தமாமா' இதழில், 1952ல் ஆரம்பித்து, தொடர்ந்து அந்த அலுவலகத்தில், 60 ஆண்டுகள் ஓவியராக பணியாற்றினார். இதுவரை எந்த ஒரு ஓவியரும், இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து, ஒரே பத்திரிகையில் பணியாற்றியதில்லை.
'அம்புலிமாமா பத்திரிகையை தவிர, மற்ற எந்த பத்திரிகைக்கும் வரையக் கூடாது...' என்று சொன்ன, 'சந்தமாமா' நிர்வாகம், இவரை, ராமகிருஷ்ணா மடத்திலிருந்து வெளியாகும், 'ராமகிருஷ்ண விஜயம்' இதழில் படம் வரைய அனுமதித்தது. அன்று ஆரம்பித்து இன்று வரை, அப்புத்தகத்திற்கு ஓவியம் வரைந்து கொடுத்து வருகிறார், சங்கர்.
'சந்தமாமா'வில் இருந்து ஓய்வுபெற்ற பின், பல புத்தகங்களுக்கு அட்டைப்பட ஓவியங்கள் வரைந்து வருகிறார், சங்கர்.
'எல்லாமே நம் விதிப்படி நடக்கிறது. கிருஷ்ணர் எதையும் எதிர்பார்க்கவில்லை. தர்மத்தை நிலைநாட்டவே அவர் அவதரித்தார். அது போல தான், என் வேலையும். பணம், பட்டம் என, எதையும் எதிர்பார்த்து நான் வேலையை செய்யவில்லை.
'முழு மனதுடன், ஈடுபாட்டுடன், கடவுள் காட்டிய வழியில், அவர் அருள் செய்த ஓவியத்தில் முழு கவனம் செலுத்தி, எல்லாவற்றையும் அவருக்கு அர்ப்பணித்து, என் வாழ்க்கையை நடத்தி வருகிறேன்...' என்கிறார், சங்கர்.
* 'அம்புலி மாமா' இதழில், விக்கிரமாதித்தியன் - வேதாளம் கதைக்கு இவர் வரைந்த ஓவியங்கள் உயிரோவியமாக உலா வந்தது. அக்கதையை தொடர்ந்து படித்த பலர், இன்றும், அந்த ஓவியத்தை நினைவு கூர்வர்.
* கடந்த, 1946ல், ஹிந்தி பிரசார சபாவில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, குரல் கொடுக்க சென்னை வந்திருந்தார், காந்திஜி. அப்போது, அங்கு படம் வரைந்து வைக்க, ஓவியக் கல்லுாரி மாணவர்கள் ஐந்தாறு பேரில் சங்கரும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு, 'போஸ்டர்கள்' வரைய வாய்ப்பு கிடைத்தது.
* ஒரு சமயம், சங்கரை சந்தித்து, 'இவ்வளவு அழகாக சரித்திர கதைகளுக்கு படம் வரைகிறீர்களே... நீங்கள், சினிமா துறையில் கலை இயக்குனராக சேர்ந்து, நிறைய பணம் சம்பாதிக்கலாமே...' என்று, ஆவலை துாண்டினார், 'கல்கண்டு' இதழ், தமிழ்வாணன்.
* முதன்முதலில் 'சுதேசமித்திரன்' நாளிதழில் ஞாயிறன்று வெளிவரும் சிறப்பு பகுதிகளில், இவரது ஓவியங்கள் வெளியாகி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கே. ஆர். ராமகிருஷ்ணன்

