PUBLISHED ON : பிப் 13, 2022

இமாச்சல் பிரதேசத்தில், மலை உச்சியில் இருக்கும் ஒரு கிராமத்தை, போதை கிராமம் என்கின்றனர். ஒரு குறிப்பிட்ட எல்லை வரை வாகனத்தில் சென்று நிறுத்திவிட்டு, பாதசாரிகளாக மலைகள் தாண்டி, மரம், செடி, கொடிகளையும் கடந்து, 2 கி.மீ., மூச்சிரைக்க நடந்தால், இந்த கிராமத்தை அடையலாம்.
இங்கு கஞ்சா செடிகள் அதிகம். எங்கு பார்த்தாலும், 'ஆஷிஷ்' என்ற சக்தி வாய்ந்த போதை பொருட்கள் விற்கப்படுகின்றன.
பெரும்பான்மையான வீடுகளிலும் குடிசைத் தொழிலாக போதை பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. மலைப்பாதையில் நடந்து செல்வோரிடம், 'கிரீம் வேண்டுமா?' என்று சர்வ சாதாரணமாக கேட்பர். இது, 'ஆஷிஷின்' சங்கேத பெயர்.
தீவிரமாக கண்காணித்தாலும், போதை வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. சர்வதேச போதை மாபியாக்களின் ஏஜன்டுகள், இங்கு வந்து குறைந்த விலையில், 'ஆஷிஷ்' வாங்கிச் செல்கின்றனர்.
இவர்கள் போதை வியாபாரிகளாக இருந்தாலும், பக்தியில் சளைத்தவர்கள் அல்ல என்றும் நிரூபித்து வருகின்றனர். நுாற்றாண்டுகள் பழமையான கோவில்கள் ஏராளம் இங்குள்ளன. ஆனால், 'வெளியாட்கள் கோவில் சுவர்களை தொடக் கூடாது. மீறி தொட்டால், 3,500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என்று, எழுதி வைக்கப்பட்டுள்ளது.
—ஜோல்னாபையன்
