sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஆனந்தனின் ஆசிரியர்!

/

ஆனந்தனின் ஆசிரியர்!

ஆனந்தனின் ஆசிரியர்!

ஆனந்தனின் ஆசிரியர்!


PUBLISHED ON : செப் 04, 2022

Google News

PUBLISHED ON : செப் 04, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனந்தனின் பார்வை எதிர் சுவரில் இருந்த நாள்காட்டியில் பதிந்தது. செப்டம்பர் 5, 2022. ஆசிரியர் தினம்! நாள்காட்டியின் அருகில், நாளிதழ் ஒன்றில் மங்கலாய் அச்சாகியிருந்த அந்தப் படமும், சட்டத்துடன் தொங்கவிடப்பட்டிருந்தது.

எழுந்து அதன் அருகே சென்று உன்னிப்பாய் பார்த்தார், ஆனந்தன். படம் மங்கலாக இருந்தாலும், அவர் கண்கள் பளிச்சென்று இருந்தன. இவர் கண்களில் சற்றே ஈரம் படர்ந்தது. பெருமூச்சுடன் தன் நாற்காலிக்குத் திரும்பியவரின் மனக்கண் முன், பழைய காட்சி விரிந்தது...

பிற்பகல் சாப்பாட்டுக்கான மணி அடித்ததும், கூச்சலும், கும்மாளமுமாக எல்லா மாணவர்களும் தத்தம் வகுப்பறைகளிலிருந்து உற்சாகத்துடன் வெளியேறினர். பள்ளி வளாகத்தின் குழாய்களில் கை கழுவிய பின், மரத்திற்கு அடியில் அமர்ந்து, அவரவர் சாப்பாட்டுப் பொட்டலங்கள், டப்பாக்களைத் திறந்து, ஆவலுடன் சாப்பிடத் தயாராயினர்.

ஐந்தாம் வகுப்பறையிலிருந்து, கையில் பொட்டலம் ஏதுமின்றி கடைசியாக வெளிப்பட்ட ஒரு சிறுவன் மட்டும், வாசலிலேயே தயங்கி நின்றான். சில கணங்களுக்குப் பின், தன் பார்வையைச் சுழல விட்டபடி, வகுப்பறைக்குள் நுழைந்தான்.

ஒரு மேஜை இழுப்பறையை மெதுவாய் திறந்து, அதிலிருந்த ஒரு பையிலிருந்து ஐம்பது பைசா நாணயம் ஒன்றை எடுத்தான். அடுத்த வரிசையில் இருந்த மற்றொரு பையிலிருந்து ஒரு ஐம்பது பைசா நாணயத்தை எடுத்த பின், பையைத் திரும்ப வைத்து, ஓசைப்படாமல் வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்தான்.

யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்று எண்ணியவனாய் வெளியேறி, பள்ளிக்கு அருகில் இருந்த ரொட்டிக் கடைக்குப் போனான். ஒரு பன்னும், தேநீரும் வாங்கிச் சாப்பிட்டபின், பள்ளிக்குத் திரும்பி வந்தான்.

மறுநாளும் அவன், வேறு இரண்டு பைகளிலிருந்து இவ்வாறே செய்துவிட்டு வெளியேறுகையில், அவன் வகுப்பாசிரியர் எதிர்ப்பட்டு விட்டார். அவர் தற்செயலாய் அங்கு வந்திருப்பார் என்று எண்ணியவன், குனிந்தவாறே நடக்க முற்பட்டான்.

'கொஞ்சம் நில்லு...' என்ற குரல், அவனைத் தடுத்து நிறுத்தியது. அவனுள் ஏதோ நெருடியது. அவர், தான் செய்ததை மறைந்திருந்து பார்த்திருக்க வேண்டும் என்று, அவன் ஊகித்து விட்டான். இரண்டு நாணயங்களை வைத்திருந்த உள்ளங்கை வியர்த்தது.

'கையில என்ன?'

கை நடுங்கத் துவங்கியது. அவரே அவனது கையைப் பிரித்தார்.

'எத்தனை நாளா இந்தப் பழக்கம்?'

பதில் சொல்லாமல் தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

'நேத்தே உன் வேலையைப் பார்த்துட்டேன். ஒருநாள் மட்டும்தான் அப்படியா, இல்லாட்டி தினமுமே அப்படியான்னு கண்டு பிடிக்கிறதுக்காகத்தான் மறைஞ்சு நின்னு, கவனிச்சேன். தினமுமே இப்படித்தான், 'லஞ்ச்' சாப்பிடறியா?'

அவன் கண்ணீர் விட்டான்.

அவர், அவன் கையைப் பிடித்துக் கொண்டார்.

'அந்தக் காசுகளை அதே பைகள்ல வெச்சுட்டு, என்னோட வா...'

சொன்னபடி செய்து, அவரோடு சென்றான். அவர் பள்ளியின் நுாலகத்துக்குப் போய் அமர்ந்து, அவனையும் உட்காரச் சொன்னார். ஆனால், அவன் அழுதுகொண்டே நின்றான்.

'தினமுமே இப்படித்தானான்னு கேட்டேனே...'

'ஆமா, சார்... ஆனா, ஒவ்வொரு பையிலேர்ந்தும் எட்டணாவுக்கு மேல எடுக்க மாட்டேன்...'

'நிறைய எடுத்தா தெரிஞ்சிடுமில்ல, அதானே காரணம்?'

பதில் சொல்லாமல் தலை குனிந்தான்.

'நீ கெட்டிக்காரன் தான். அது சரி, ஏன் இப்படிப் பண்ற, உங்கப்பா என்ன பண்றாரு?'

'எனக்கு அப்பா இல்லீங்க, சார். அம்மா மட்டுந்தான். காலையில அவங்க எனக்கு ஒரு குவளை நீர்ச்சோறும், ரெண்டு வெங்காயமும் குடுத்துட்டு, வேலைக்குப் போயிடுவாங்க...'

'என்ன வேலைக்கு?'

'பாத்திரம் தேய்க்குற வேலைக்கு. ராத்திரிக்கு மட்டுந்தான் சோறாக்குவாங்க. அப்ப மட்டுந்தான் சோறு, கொழம்பு, பொரியல்னு செய்வாங்க!'

'நீ இப்பிடிச் செய்யிறது உங்கம்மாவுக்குத் தெரியுமா?'

'அய்யோ, தெரியாதுங்க. தெரிஞ்சா சூடு போட்றுவாங்க. சொல்லிறாதீங்க சார். பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாதுன்னு அடிக்கடி சொல்லுவாங்க!'

'இந்தா, இதுல பன்னும், டீயும் வாங்கிச் சாப்பிடு. போ, நாளையிலேர்ந்து நானே உனக்கு, 'லஞ்ச்' எடுத்தாறேன்...' என்றவர், அவனுக்குக் காசு கொடுத்தார்.

'அய்யோ... வேணாங்க, சார்...'

'அப்ப தினமும் திருடியே தின்றேன்றியா?'

பதில் சொல்ல முடியாமல், பேசாமல் நின்றான்.

'இனிமே, நானே உனக்கு, 'லஞ்ச்' எடுத்தாறேன். எல்லா பசங்களும் போனதுக்குப் பிறகு நுாலக அறைக்கு வா. நான் இங்க தான் சாப்பிடுவேன். வந்து எடுத்துட்டுப் போ. யாருக்கும் சொல்ல வேணாம்...'

கண்ணீருடன், 'ரொம்ப நன்றி சார்!' என, அவரைக் கும்பிட்டான்.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டார், ஆனந்தன்.

சோறு மட்டுமல்லாமல், அவரது தனிப்பட்ட கவனிப்பாலும், அக்கறையாலும், அதிக மதிப்பெண்கள் வாங்கி, இறுதி வகுப்பில் பள்ளியிலேயே முதன்மையானவனாய் தேறினான்.

அதே ஆண்டில், அவருக்கும் நல்லாசிரியர் விருது கிடைத்தது. அப்போது ஒரு நாளிதழில் வெளிவந்த புகைப்படத்தைத்தான் பெரிதுபடுத்தி, தன் அறையில் மாட்டி வைத்திருந்தார்.

உணர்ச்சி வசப்பட்ட நிலையில், ஆனந்தன் மறுபடியும் எழுந்து அந்தப் புகைப்படத்துக்கு எதிரே கைகூப்பி நின்றார்.

'சுப்ரமணியம் சார், உங்க அன்பாலும், ஆசியாலும் தான், நான் இப்ப மாசம், 80 ஆயிரம் சம்பளத்துல வேலையில இருக்கேன். என்னுடைய சின்ன வயசு வறுமையையும் அது உங்க கருணையாலதான் போச்சுன்றதையும் மறக்காம, மாசா மாசம், ராமகிருஷ்ணா மிஷன் இலவசப் பள்ளிகளுக்கு என் பாதிச் சம்பளத்தை நன்கொடையாக் குடுத்துக்கிட்டு இருக்கேன்.

'அந்தப் பள்ளிப் பிள்ளைங்க என்னை நேர்ல பார்க்காட்டியும், அந்தப் புண்ணியம் எனக்குத்தானே... அய்யோ, தப்பு தப்பு... அந்தப் புண்ணியமெல்லாம் உங்கள மாதிரி ஆசிரியர்களுக்குத்தான், சுப்ரமணியம் சார்...' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.

ஜோதிர்லதா கிரிஜா






      Dinamalar
      Follow us