PUBLISHED ON : ஏப் 23, 2023

பொங்கி வரும் கோபத்தை பொசுக்கி, 'நீ கவலைப்படாதே கண்ணு, நான் உனக்கு இன்னொரு அப்பா வாங்கித் தர்றேன்...' என, மகள் பிரியாவிடம் அடிக்கடி சொல்லி வைப்பாள், கதிர்மதி.
பலவித கனவுகளோடு புகுந்த வீடு வந்தவள், கதிர்மதி. வயது: 31, நல்ல நிறம், வட்ட முகம், பட்டப் படிப்பு முடித்தவள். ஆனால், அவள் கனவுகளுக்குத் தலைகீழாக இருந்தது, கல்யாண வாழ்வு.
கணவர் பூவராகவனுக்கு நல்ல தோற்றம் இல்லை. பழக்க வழக்கங்களில் கூட எத்தனையோ குறைபாடுகள். அதிர்ச்சியான அதிர்ச்சி, மனதளவில் நொறுங்கினாள், கதிர்மதி.
தன் அழகை ஆராதிக்கிற, தன்னை தலையில் தாங்குகிற, தான் தான் உலகம் என்று வலம் வருகிற கணவனாக பூவராகவன் இல்லாதது, பெரும் ஏமாற்றமாகப் போய், இயந்திர வாழ்க்கையானது.
தினமும் அதிகாலையில் எழுந்து, தன் காலை அலுவல்களை முடித்து, பாத்திர பண்டங்கள் கழுவி, வாசல் தெளித்து, கோலமிட்டு. சிற்றுண்டி தயார் செய்து பரிமாறுவாள். மீண்டும் மதிய உணவு தயார் செய்து, மாமனார் - மாமியாருக்கு பணிவிடை செய்வாள்.
துணிகள் துவைத்து, உலர்த்தி, மடித்து இஸ்திரி போடுவாள். சாயங்காலம் காபி கலந்து, எல்லாருக்கும் வினியோகிப்பாள். கம்பெனிக்குச் சென்று திரும்பிய கணவருக்கும், வீட்டாருக்கும், இரவு நேரத்தில், சப்பாத்தி தயாரித்து, பரிமாறுவாள்.
கடைசியாக எஞ்சிய பாத்திர பண்டங்கள் துலக்கி, படுக்கப் போகும் போது, இரவு,11:00 மணி ஆகிவிடும். கணவன் துாங்கியிருப்பான் அல்லது இவளை எதிர்பார்த்து காத்திருப்பான்.
ஆதரவான, அனுசரணையான எந்தப் பேச்சும் பேசாமலேயே அந்தரங்கம் அரங்கேறும். இவளாக கொடுக்கிற மாதிரி இருக்காது; அவனாக பிடுங்கித் தின்கிற மாதிரி இருக்கும். மனமறிந்து நடக்க, வாஞ்சையோடு பழக, ஏன் இந்த மனிதர் மறந்து போகிறார் என்று மருகுவாள், கதிர்மதி.
ஆரம்ப காலங்களில் தவியாய் தவித்தாள். என்ன செய்வதென்று தெரியவில்லை. பிறந்த வீட்டிற்கே போய் விடலாமா என்று கூட நினைத்திருக்கிறாள்.
போதாத காலம் அங்கும், அவஸ்தையான வாழ்க்கைச் சூழல். வரிசையாய் மூன்று பெண்களைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, முடிந்த வரை படிக்க வைத்து, நகை நட்டு போட்டு கட்டிக் கொடுத்து, ஓய்ந்து போயி இருக்கிறவர்களை எப்படி மறுபடியும் சங்கடப்படுத்துவது? அதனால், இங்கேயே இருக்க பழக்கிக் கொண்டாள்.
இதற்கிடையில் கொஞ்ச நாளிலேயே கர்ப்பம் தரித்து, அழகாகவும், அறிவாகவும் வந்து பிறந்தாள், பிரியா. வெடுக் வெடுக்கென்று பேச, விதம் விதமான கேள்விகள் கேட்க, சுட்டித்தனத்தோடு நடந்து கொள்ள எப்படி வாய்த்ததென்றே தெரியவில்லை.
இப்போதெல்லாம் மனம் கொஞ்சம் குளிர்கிறதென்றால், அது, பிரியாவின் கெட்டிக்காரத் தன்மையின் வசீகரிப்பே. 1ம் வகுப்பு படித்து வந்தாலும், வயதுக்கு மீறிய கெட்டிக்காரத் தனம். -மிடுக்காக பேசும் சுபாவம்.
ஆனாலும், இந்த ஏழெட்டு ஆண்டு கால வாழ்வில் எல்லாவற்றையும் ஜீரணிக்க முடியாமல் திணறினாள், கதிர்மதி.
மாமனார் ஒரு ரகம், மாமியார் இன்னொரு விதம். சதா இருமி, சளியை சிந்திக் கொண்டிருப்பார், மாமனார். ஆனால், அதிகாரத்திற்கு குறைவு இருக்காது. வேளைக்குக் காபி, நேரத்திற்கு டிபன், சாப்பாடு நீட்ட வேண்டும்.
இல்லையென்றால், 'வயசானவங்கள சரியா பார்த்துக்காத மருமக என்ன மருமக?' என்று, லபோதிபோவென்று கத்துவார்.
மாமனாருக்கு குறை சொல்வதே வாழ்க்கையென்றால், மாமியார் எதிர்மறை. 'என் மருமக நல்ல டைப். என்னை தலை மேல வெச்சு தாங்குவா...' என்று புகழ்ந்தே காரியத்தைச் சாதித்து கொள்வாள்.
கரிச்சுக் கொட்டுகிறவரையே நல்ல விதமாக நடத்தும், கதிர்மதி, துதி பாடுகிறவரை நன்றாக நடத்தாமல் இருப்பாளா? இவர்களுக்காக தானே சம்பளமில்லாமல் வாய்த்திருக்கிறாள், கதிர்மதி.
இதெல்லாம் பெரிய விஷயமில்லை. பூவராகவன், ஏன் கல்லுளி மங்கனாக இருக்க வேண்டும்? அதுதான் மண்டைக் குடையும் பிரச்னை.
ஒரு பிறந்தநாள் அல்லது கல்யாண நாள்... எதற்காகவாவது ஒரு மகிழ்ச்சியான வாழ்த்து... ஹூ ஹூம்... கிடைக்கவே கிடைக்காது. இவள் தான் கணவனது பிறந்த நாளை ஞாபகம் வைத்து, அதற்கு வெகுமதி தர வேண்டும். அப்போது கூட, உதடு பிரியாத சிரிப்பு மட்டும் தான்.
'உனக்கு என்ன பிடிக்கும். 'பீச்' ஹோட்டல் போய் வரலாம். நல்லதா ஒரு படத்துக்கு போய் வரலாம்...' என, ஒரு நாளும் கேட்டதில்லை.
இப்படி எந்த உபசரிப்பும் இல்லாமலேயே ஏமாற்றப் பட்டிருக்கிறாள், கதிர்மதி. அவன் மட்டும் எதிலும் குறைந்தவனல்ல. கண்டபடி ஊர் சுற்றி, ஹோட்டலில் ருசித்து, எல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இதெல்லாம் கூட பரவாயில்லை. இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் இவள் மூக்கை உடைக்கும் பழக்கத்தை கையாள்கிறான், பூவராகவன். அவ்வப்போது, சின்ன சின்னதாய் சண்டைகள் வரும். சதா மல்லுக்கட்ட வேண்டும்.
ஒருநாள், பொறுக்க முடியாமல் வெடித்தாள்.
நடுவில் கிடந்து, குழந்தை பிரியா தான் தவிக்கும். குழந்தையை வைத்துக் கொண்டு பெற்றவர்கள் சண்டை போடுவது அவலத்தின் உச்சம். என்ன செய்வது, சண்டை போடாமல் இருக்க முடியவில்லை.
அப்போது, குழந்தை என்ன நினைக்குமென்று இருவருமே உணர்வதில்லை.
அழுகிற மாதிரி முகத்தை மாற்றும், உணவின் மீது கோபம் காட்டும், மவுனம் காத்து துக்கம் அனுஷ்டித்து, என்னென்னவோ செய்து பார்க்கும். என்றாலும், யாரும் புரிந்து கொண்டதில்லை.
கொஞ்சம் கரிசனம் காட்டினால், அவர் பக்கம் சாய்ந்து கொள்வாள், பிரியா. இருந்தாலும் யார் விட்டுக் கொடுக்கின்றனர்?
அன்று திங்கட்கிழமை. கம்பெனிக்கு சென்று விட்டான், பூவராகவன்.
பிரியாவுக்கு லேசான ஜுரம், பள்ளி செல்லாமல், கட்டிலில் படுத்துக் கிடந்தாள்.
தன் வேலைகளை ஒதுக்கி, குழந்தையிடம் சென்று, பரிவோடு அவள் தலையை வருடி, ''செல்லக் குட்டிய நான் ஆஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகட்டுமா,'' என்று, அவள் காதருகே கிசுகிசுத்தாள், கதிர்மதி.
''ஒண்ணும் வேணாம்,'' கோபத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தினாள்.
''அம்மா மேல கோபமோ?''
''இல்ல...'' அதே சூடான வெளிப்பாடு.
''எனக்குத் தெரியுதுடா, எங்களுக்குள்ள ஏற்படற சண்டையால, நீ ரொம்ப தவிக்கற. உன்னை இந்தச் சிக்கலிலிருந்து விடுவிக்க, என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.''
தாயை நிமிர்ந்து பார்த்தாள், பிரியா.
''இந்த அப்பா வேணாம். நான், உனக்கு இன்னொரு அப்பா வாங்கித் தர்றேன்.''
தாயை ஆச்சரியம் கலந்த பார்வையால் பார்த்தாள், பிரியா. அவளின் முகக் குறிப்புகளை கதிர்மதியால் விளங்கிக் கொள்ள இயலவில்லை.
''கண்டிப்பா செய்வேன். அம்மாவ சண்டை பிடிக்காத, நல்ல அப்பாவா வாங்கித் தர்றேன்.''
கதிர்மதிக்கு அப்படி ஒருவரைத் தெரியாது. அப்படிப்பட்ட பண்பாட்டிலும் அவள் வரவில்லை. குழந்தையைத் தேற்றுவதற்கு அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால், இப்படி ஒரு அஸ்திரத்தைப் பிரயோகித்தாள்.
''அம்மா, எங்க மிஸ் என்ன சொல்லுவாங்கன்னா...''
''என்ன சொல்லுவாங்களாம்...''
''அம்மான்னா ரொம்ப நல்லவங்களாம். புனிதமான உறவாம். அதை விட சிறந்த உறவு உலகத்துல இல்லியாம். அன்பா, பண்பா, பொறுமையா, தியாகமா, விட்டுக் குடுக்கறவங்களா... அதோட, சகிப்புத்தன்மை உள்ளவங்களா இருப்பாங்களாம். நீ அப்படி இல்லியா, வேற மாதிரியா?''
பிரியாவின் முகம் இயல்பாகத்தான் இருந்தது. ஆனால், இந்த வார்த்தைகளின் கடூரம், கதிர்மதியை மிகவும் தாக்கியதில், அதிர்ந்து, அடங்கினாள்.
''நான் நல்லவடி செல்லம், நல்லவ. என்னை நம்பு,'' என, வந்த அழுகையை அடக்கி, பிரியாவை வாரி அணைத்தாள்.
''உன்னை மாதிரியே அப்பாவும், இன்னொரு அம்மாவ தேட ஆரம்பிச்சு, நான் அப்பாவோடவும், புது அம்மாவோட போயிட்டா...'' என்றாள், பிரியா.
இந்தக் கேள்வி, கதிர்மதியை செருப்பால் அடித்த மாதிரி இருந்தது. பட்டென்று பிரியாவின் வாயைப் பொத்தினாள்.
அடுத்ததாய் குழந்தை இதுபோன்று விபரீதமாய் பேசி விடாமல் இருக்க, மவுனமாய் நின்றாள்.
''நான் தப்பாப் பேசி, அனர்த்தமா உளறிட்டேன். இனி, எப்பவும் இப்படிப் பேச மாட்டேன். என்னை நம்பு, கண்ணு,'' என்றாள்.
இனி, எக்காலத்திலும், இதுபோல் விபரீதமாக பேசக் கூடாது என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டவளாய், பிரியாவை துாக்கி அணைத்துக் கொண்டாள், கதிர்மதி.
எம். கே. சுப்ரமணியன்
