PUBLISHED ON : ஏப் 23, 2023

எம்.ஆர். தங்கமீனாள், காரைக்குடி:தொழில் முனைவோராக ஆக விரும்பும் என் தோழிக்கு, தாங்கள் கூறும் அறிவுரை என்ன?
நமது நாளிதழில், தினமும், 9ம் பக்கம் வெளியாகும், 'சொல்கிறார்கள்' பகுதியை விடாமல் படிக்கச் சொல்லுங்கள். அப்பகுதியில், சுயதொழிலில் முனைவோரான, பல பெண்களின் அனுபவத்தைக் கற்றுக் கொள்ளலாம். அவர், தொழில் முனைவோராக என் வாழ்த்துக்கள்!
சி. சுந்தர் மணிகண்டன், சென்னை: வழக்கமான நாட்களை விட, ஞாயிறு, 'வாரமலர்' விற்பனை எவ்வளவு அதிகரிக்கும்?
ஞாயிறு, முதலாளிகளின் ஆதரவு அதிகம்! ஞாயிறு மட்டும், வழக்கத்தை விட, 1 லட்சத்து, 70 ஆயிரம் முதலாளிகள், 'வாரமலர்' இதழை ஆதரிக்கின்றனர். வாசகர்கள் என்றால், முதலாளிகள் தானே, 'தினமலர்' இதழுக்கு!
* அப்துல், திருச்சி:'நானும், டெல்டாக்காரன்...' என்று, மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே...
'டெல்டா' என்பது தமிழ் என்று நினைத்து விட்டாரோ என்னவோ... அதனால், அப்படி கூறி இருக்கிறார் போலும்!
பா. பானு, நாகை: பா.ஜ.,விலும், 'குஸ்தி' ஆரம்பித்து விட்டதே. இனி என்னவாகும்?
காங்கிரஸ் போல ஆகிவிடாது; அதற்குத்தான் திறமையான தலைவர் இல்லை. பா.ஜ., அப்படி இல்லையே... இந்த, 'குஸ்தி' எல்லாம் முடிவுக்கு வந்து விடும்!
ஜி. அர்ஜுனன், செங்கல்பட்டு: ஒரு வாரத்தில் வரும், 300 கேள்விகளில், எட்டு கேள்விகளை மட்டும் எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் அந்துமணியாரே... புரியாத புதிராக உள்ளதே...
அர்ஜுனன் சார்... புதன் கிழமை மட்டுமே, 700 கார்டுகள் வரும். அவை ஒவ்வொன்றிலும், ஐந்து கேள்விகள் இருக்கும். மற்ற கிழமைகளில் எவ்வளவு கார்டு, இ - மெயில் வரும் என்பதை, கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இவைகளில், எட்டு கேள்விகளுக்கு மட்டுமே விடை அளித்து, கேள்வி - பதில் பகுதிக்கு, ஒரு பக்கமே ஒதுக்கியுள்ளார், பொறுப்பாசிரியர்.
இதை புரிந்து கொள்ளுங்கள் வாசகர்களே!
* ஆர். சுப்பு, திருத்தங்கல்: 'மே 31க்குள், வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்...' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கெடு விதித்துள்ளாரே...
இவரது, கெடு எல்லாம், கெடுவோடு முடிந்து விடும். ஒருநாளும் இந்த ஒதுக்கீடு, நிறைவேறப் போவதில்லை!
அ. சேகர், நெல்லை: நான், ஒரு ஞானி ஆக விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்?
தனக்கு தானே பேசத் தெரிந்தவன், ஞானி ஆகி விட முடியும். பிறரோடு பேசத் தெரிந்தவன் நண்பன் ஆகிறான். சமுதாயத்தோடு பேசத் தெரிந்தவன், தலைவன் ஆகிறான்!
எம். ராஜன், துாத்துக்குடி:என் நண்பன், குழப்பவாதியாக இருக்கிறானே...
அவரை திருத்துங்கள்... குறிக்கோள் உள்ளவராக மாற சொல்லுங்கள்; அது உள்ளவர் தான் குறிப்பிடத்தக்கவராய் வாழ முடியும். குறிக்கோள் இல்லாதவர், குழப்பவாதியாக வாழ்கிறார்!
