PUBLISHED ON : ஏப் 23, 2023

ப
ஏதோ, 'அசைன்மென்ட்'டுக்காக வெளியூர் சென்று விட்டார், லென்ஸ் மாமா. மற்ற, 'பீச்' நண்பர்களும், வீட்டு விசேஷம் மற்றும் பிள்ளைகளுக்கு தேர்வு, அது இது என்று, ஒரு வாரத்திற்கு வர வாய்ப்பில்லை என்று கூறி விட்டனர்.
நிறைய ஓய்வு நேரம் கிடைக்கவே, படிப்பதற்காக எடுத்து வைத்திருந்த புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.
படித்ததில் இப்போது இரண்டு, 'மேட்டர்' மட்டும் இங்கு...
இன்று, உலகில் உள்ள நாடுகள், பல நுாற்றாண்டுகளுக்கு முன், ஒரே கண்டமாக இருந்தன. பிறகு, கடல் கோள்களால், பல கண்டங்களாக மாறியது. அதில், குமரி கண்டமும் ஒன்று. அதில், தென்னிந்தியாவும், ஆப்ரிக்காவும் இணைந்திருந்தது.
இதன் அடிப்படையில் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, எத்தியோப்பியாவில், தமிழகத்தின் வழக்கு சொற்கள் பல கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
* நாம், தந்தையை, அப்பா என அழைப்பது போலவே, எத்தியோப்பியாவிலும், அப்பா என அழைக்கின்றனர். உதாரணமாக, அன்னை - இன்னை என்றும், பாட்டியை ஆச்சி என நாம் அழைத்தால், அவர்கள், 'ஆச்' என அழைக்கின்றனர்
* குமரி மாவட்டத்தில், தாய் மாமனை, அம்மாச்சன் என அழைப்பதை, அங்கு, 'அம்மாச்' என்கின்றனர்
* மீனவர்கள் பயன்படுத்தும் நாட்டுப் படகுகளை, மிதப்பு, தெப்பம் என அழைக்கின்றனர்
* நம் நாட்டை போலவே, அங்கும், நாகன், தேவன், சிங்கன், சித்தன், மாடன், நாடன், உதயன், கண்ணன், காமன், இடையன் மற்றும் காடன் பெயர்கள் உண்டு.
ஆதன் என்பது, அங்கு பொதுப் பெயர். நம் சங்க இலக்கியத்தில் இந்த பெயரில், அரசர் ஒருவர் இருந்திருக்கிறார் என்று குறிப்பு உள்ளது. இந்த பெயரில், ஆதம் மல்லிக் (முஸ்லிம்) ஆதம் ஸ்மித் (கிறிஸ்தவர்) என்ற பெயர் சகஜம்
* நம் நாடு போல அங்கும் வரதட்சணை உண்டு. ஆனால், ஆண்கள் தான், பெண்களுக்கு தருகின்றனர். அத்துடன், அந்நாட்டின் தேசிய உணவான, 'இங்சிரா'வை, பாதுகாப்பாக வைக்க, பெண்ணுக்கு ஒரு கூடையும், பசுவும் கண்டிப்பாக தரவேண்டும், மாப்பிள்ளை வீட்டினர்
* நம்மைப் போலவே அங்கும் முதல் பிரசவம், தாய் வீட்டில் தான்
* பசுவின் சிறுநீர், அங்கும் புனிதமாக கருதப்படுகிறது
* தாய் மாமனுக்கு வீட்டு சடங்குகளில் முதன்மை தரப்படும். குழந்தையின் தந்தை வீட்டில் இல்லையென்றால், தாய் மாமன் மடியில் வைத்து தான், பிறந்த குழந்தைக்கு பாலுாட்டுவர்
* நம்மைப் போலவே, அங்கும் கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது
* நம்மைப் போலவே, இறந்தவர் வீட்டிற்கு வந்தவர்கள், திரும்பிச் செல்லும்போது சொல்லிக் கொண்டு புறப்படக் கூடாது
* இரவு வீட்டின் மீது அமர்ந்து, ஆந்தை கூவினால், கெட்ட சகுனம் என, எத்தியோப்பியர்களும் நம்புகின்றனர்
* ஊட்டி, தோடர் இனத்தவர், பல ஜடைகள் இட்டு முடி பின்னுவது போல், எத்தியோப்பிய பெண்களும் முடி அலங்காரம் செய்து கொள்கின்றனர்
* பச்சை குத்திக்கொள்ளும் வழக்கமும் உள்ளது
* மண்வெட்டி, அரிவாள், ஏர் கருவி, உரல் மற்றும் உலக்கை, அம்மி போன்றவற்றை அவர்களும் பயன்படுத்துகின்றனர்.
கிராமப்புறங்களில் பெண்கள் விளையாடும் அம்மானை, பல்லாங்குழி, பாண்டியாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம் ஆகிய நடன நிகழ்ச்சிகள் அங்கும் உண்டு
* கி.மு., 800லேயே முருகனுக்கு கோவில் கட்டியுள்ளனர். கடவுள் பெயர், முருங்கு. அவரும் மலைக் கடவுளே, வாகனமும் சேவல் தான்! அக்கோவிலில் உள்ள முருகரை, 25 மலை ஜாதியினர் வழிபட்டதாக, கிரோம் நிக் என்ற ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். பெண் தெய்வம் மோரிமா; நம் மாரியம்மனின் மறு வடிவம் தான்
* ஒரோ என்ற பிரிவினர், அய்யன்ன என்ற காவல் தெய்வத்தை வழிபட்டனர். அது, நமது அய்யனாரின் திரிபு.
தங்கள் சமுதாயத்தை அழித்தது, கொடுங்கடல் என்ற நம்பிக்கையில், அதை தீய சக்தியாக நினைத்து, உயிர் பலி கொடுத்து, வழிபடுகின்றனர். குமரி மாவட்டத்திலும், ஒரு சில பகுதிகளில், கடலை தீய சக்தியாக எண்ணி வழிபடுவதை காணலாம்
* குமரி மாவட்டத்தில், புதுமண தம்பதியர், முதன் முதலில் கடலை பார்க்கக்கூடாது. சுசீந்திரம் தேரோட்டத்தை கண்ட பின்னரே, கன்னியாகுமரி கடலுக்கு செல்ல வேண்டும் என்ற மரபு, இன்றும் உள்ளது
* குமரி மாவட்ட மீனவர்கள், கடல்கோள் நிகழாமல் இருக்க, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம், கடலுக்கு விழா எடுக்கின்றனர். எத்தியோப்பிய கடலோர மீனவர்களிடமும் இப்பழக்கம் உண்டு!
படித்த இரண்டாவது, 'மேட்டர்!' இது:
கவலையை மறக்க, மூன்று சிறந்த வழிகள் உள்ளன.
ஒன்று: கவலைப்பட நேரமே இல்லாதபடி தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபடுவது. இரண்டு: நகைச்சுவையான விஷயங்களில் தீவிரமாக ஈடுபடுவது. மூன்று: தனிமையில் உட்கார்ந்து அழுது தீர்த்து விடுவது.
முதல் இரண்டு விஷயங்கள், பெரும்பாலானவர்களால் எப்போதும் கடைப்பிடிக்கப்பட்டு வருவது தான். மூன்றாவது வழியான அழுது தீர்த்து விடுவதைத்தான், இப்போது மன நல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு இது மிகவும் உகந்தது என்று சொல்கின்றனர்.
இன்றைய பெண்கள், பலவித மன அழுத்தங்களில் சிக்கி, கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதியை இழந்து விடுகின்றனர். இதுக்கெல்லாம் ஒரே தீர்வு, அவர்கள் தங்கள் மனப் பாரங்களை இறக்கி வெச்சு, அழுது புலம்பி தெளிவடைவது தான்.
இதற்காகவே, தனி அறைகளை வாடகைக்கு விடும் ஹோட்டல், ஜப்பானில் துவங்கப்பட்டுள்ளது. கதவைச் சாத்தி, எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு சத்தம் போட்டு அழுது ஒப்பாரி வைக்கலாம். கொஞ்சங்கூட சத்தம் வெளியே கேட்காது. அறைக்குள் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்துக் கொண்டும் அழலாம்.
அதோடு, யார் மேல் கோபம் இருக்கிறதோ, அவர்களின் புகைப்படத்தை எதிரில் உள்ள சுவரில் மாட்டி வைத்தும் அழலாம். இதற்கு கட்டணமாக, 25 ஆயிரம் ரூபாய் வரை வாங்குகின்றனர்.
அழுது முடியும் வரை தேவையான உணவு, தாரை தாரையாக கண்ணீர் வருவதற்கு கிளிசரின், பெரிய கர்ச்சீப், பார்த்ததும் சோகத்தை வரவழைக்கிற புகைப்படங்கள், படக்கதைகள், சோக காவியங்கள், அப்புறம் எல்லாம் முடிந்த பிறகு போட்டுக் கொள்வதற்காக, 'மேக் - அப்' சாதனங்களும் கொடுக்கின்றனர்.
தனிமையில் மட்டுமல்ல, குழுவாக சேர்ந்தும் ஒப்பாரி வைக்கலாம். அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த அறைகளை முன்பதிவு செய்து காத்திருக்கும் பெண்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறதாம். இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், பல கிளைகளும் துவங்கப்பட உள்ளன.
காலம் போகிற போக்கை நினைத்து, அழுவதா, சிரிப்பதா என, நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.
