PUBLISHED ON : ஏப் 23, 2023

அலுவலகத்திலிருந்து திரும்பி, வீட்டுக்குள் நுழைந்த கல்பனா, கூடத்தில் பிரபுவும், பிரீத்தியும், மாமியார் காமாட்சியோடு விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்ததும், கோபத்தின் உச்சிக்குச் சென்றாள்.
''அவங்களுக்குத்தான் வேலை வெட்டி இல்ல. உங்களுக்குமா? போய் வீட்டுப் பாடத்தை முடிக்க வேண்டியது தானே,'' என கத்திவிட்டு, வேகமாக அறைக்குள் சென்றாள்.
பாட்டியை ஏக்கத்துடன் பார்த்தபடி, புத்தகப் பையை எடுத்து, பாடங்களை படிக்க, எழுத ஆரம்பித்தனர், பிள்ளைகள். சற்று நேரத்தில், உடை மாற்றி, கல்பனா வெளியே வரவும், வீட்டுக்குள், வேலு நுழையவும் சரியாக இருந்தது.
அசதியில், சோபாவில் சாய்ந்த வேலுவின் அருகே வந்தமர்ந்தாள், கல்பனா.
இருவருக்கும் காபி போட்டு வந்து கொடுத்த காமாட்சி, மீண்டும் அடுக்களைக்குச் சென்றாள்.
மாமியார் உள்ளே சென்றதை உறுதி செய்த கல்பனா, ''எத்தனை தடவ சொன்னாலும், உங்க அம்மாவுக்கு ஏன் புரியமாட்டேங்குது. பிள்ளைகளைக் கெடுத்து வைக்கிறாங்க.
''நான் வந்ததும் தான் படிக்கவே ஆரம்பிக்கிறாங்க. அதுவரைக்கும் பாட்டி கூட ஒரே அரட்டை தான். சிரிப்புச் சத்தம் தெரு வாசல் வரை கேட்குது,'' வழக்கம்போல கொட்டித் தீர்த்தாள், கல்பனா.
அரைகுறையாகக் காதில் வாங்கியபடி, காபியை உறிஞ்சிய வேலு, தலையை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தான். பல காலமாய், கல்பானாவின் புலம்பலைக் கேட்டு மனம் வெறுத்து, 'என்றைக்காவது ஒரு நாள், அம்மாவைப் புரிந்து கொள்வாள்...' என்ற நம்பிக்கையில், காலம் கடத்தினான்.
மறுநாள் காலை -
'தயிரம்மா... தயிர்...' குரல் கேட்டு பாத்திரத்துடன் வெளியே வந்த கல்பனா, தாமதத்துக்கான காரணத்தைக் கேட்டாள்.
''அத ஏம்மா கேட்கறீங்க, வியாபாரம் செய்துட்டு உடனே புறப்படலாம்ன்னா, எங்க விடறாங்க. நாள் முழுக்க வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கற வயசான பாட்டிங்க, கிடைக்கிற ஆளுங்ககிட்ட ஆசையா எதையாவது பேசுவாங்க. உடனே, கழட்டிக்கிட்டு வர முடியல.''
''காலை நேரத்துல, கதை பேசிக்கிட்டிருந்தா, உன் வியாபாரம் பாதிக்காதா?''
''என்ன செய்யிறது, வீட்டுக்குள்ளயே அடைந்து கிடக்கறவங்க, தெரிந்த முகம் யாரையாவது பார்த்தா, ஏதாவது பேசணும்ன்னு நினைக்கறது, எல்லா மனுஷாளுக்கும் உள்ளதுதானேம்மா. உங்களுக்கு அந்த நிலைமை வந்தாத்தான் கஷ்டம் தெரியும்,'' என நகர்ந்தாள், தயிர்க்காரி.
அடுத்த ஐந்து நிமிடத்தில், 'கீரைம்மா, கீரை...' என, குரல் கேட்டது.
''நீயும் லேட்டா?'' கல்பானாவின் கேள்வியில் ஒரு சலிப்பு.
''சீக்கிரமாத்தான் வந்தேன். பக்கத்து தெரு பர்வதம் பாட்டிக்கு, திடீர்னு உடம்பு முடியலையாம். அதான், என்ன ஏதுன்னு, விசாரிச்சிட்டு வர்றேன்.''
''அவங்களுக்கு என்னாச்சு?''
''மன அழுத்தமும், ரத்தக்கொதிப்பும் அதிகமாயிடுச்சு. மகனும், மருமகளும் கவலையில் இருக்காங்க. வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடக்கற வயசானவங்கள, பொறுப்பா கவனிச்சுக்கணும். அவங்ககிட்ட பேசறதையே பாரமா நினைச்சா என்ன செய்யிறது!''
ஏதோ, தன்னைக் குறை சொல்வதுபோல, சுளீரென உரைத்தது, கல்பனாவுக்கு.
'வீட்டுக்குள்ள வெட்டியா இருக்கறவங்களுக்கு, வேலைக்குப் போறவங்க வலி தெரியுமா?' என, தான் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளை நினைத்தபடி, கீரைக்கட்டோடு உள்ளே வந்த கல்பனா, அடுக்களையை எட்டிப் பார்த்தாள். வியர்வையில் மூழ்கி, அமைதியாய் சமையல் செய்து கொண்டிருந்தாள், காமாட்சி.
காலை மணி, 9:00.
வழக்கம்போல, வீடே காலியானது. மிச்சமிருந்த வேலைகளை முடித்து, துணிகளை வாஷிங் மிஷினில் போட்டு, சாப்பிட உட்கார்ந்தாள், காமாட்சி.
மாலை, பேரப்பிள்ளைகள் வரும் வரை, தனிமை தான். சுவர் கடிகாரத்தை அடிக்கடி பார்த்தபடி பொழுதைக் கழிக்கும் காமாட்சியின் மனம், மாலை, 4:00 மணியானவுடன் மகிழ்ச்சியில் மத்தளமாடும்.
அன்றும் அப்படித்தான்... உள்ளே நுழைந்த, பிரபுவும், பிரீத்தியும், ஓடி வந்து பாட்டியை கட்டியணைத்தனர். இருவருக்கும் முகம் கழுவி, உடை மாற்றிய பின், தயாராய் இருந்த சிற்றுண்டியைக் கொடுத்தாள், காமாட்சி.
அடுத்த சில நிமிடத்தில், பாட்டியிடம் கதையை கேட்க ஆரம்பித்தனர், பேரப்பிள்ளைகள். சிறிது நேரத்தில், கடிகாரம் மணி, 6:00 காட்டியது.
''அம்மா வர்ற நேரம், புத்தகத்தை எடுத்துப் படிங்க. மீதியை நாளைக்குச் சொல்றேன்,'' என்றபடியே, அவசரமாய் அடுக்களைக்கு சென்றாள், காமாட்சி.
வீட்டுக்குள் நுழையும்போதே, பிள்ளைகள் மீதும், பொருட்கள் மீதும் கோபத்தை காட்ட ஆரம்பித்தாள், கல்பனா. அன்று, அவளின் கோபம் அதிகமாக இருந்தது. காரணம் புரியாமல், வேலையில் கவனமானாள், காமாட்சி.
கல்பனாவுக்கு, ஏதோ பிரச்னை என்பதை உணர முடிந்தது.
வீட்டுக்குள் நுழைந்த வேலுவிடம், பிள்ளைகள் இருவரும் மிரட்சியுடன் ஓடினர்.
''அப்பா, அம்மா ரொம்ப கோபமா இருக்காங்க. என்னன்னு தெரியல,'' என்றாள், பிரீத்தி.
கூடத்திலிருந்த டீபாய் மீது, கேசரியும், பஜ்ஜியும் இருந்ததை கவனித்த வேலு, கல்பானவைத் தேடினான்.
படுக்கையறையில் இருந்தவளிடம் சென்று நைசாக பேச்சுக் கொடுத்தான். லேசாக இருந்த அவளின் விசும்பல் சத்தம் அதிகமானது.
பதற்றமாய், அவள் தோளை உலுக்கி, ''என்னாச்சு, ஏன் அழறே?'' என்றான், வேலு.
''திடீர்னு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க. அதுவும், 30 கி.மீ., துாரம். கொஞ்ச நாளைக்கு, போய்த்தான் ஆகணுமாம். கறாரா சொல்லிட்டாங்க,'' என்றாள், கல்பனா.
''அட அசடு... இதுக்கா இவ்வளவு வருத்தப்படற. கொஞ்ச நாளைக்குத்தானே, சர்வீஸ்ல இதெல்லாம் சகஜம். விடு பார்த்துக்கலாம்,'' என, வேலு ஆறுதலாய் சொன்னாலும், மனம் முழுமையாக சமாதானமாகவில்லை என்பதை, வாடிய அவளது முகம் காட்டிக் கொடுத்தது.
இரவு உணவை நால்வருக்கும் பரிமாறி, தானும் சாப்பிட உட்கார்ந்தாள், காமாட்சி.
கல்பானாவுக்கு வேறு அலுவலகத்தில் மாறுதல் வந்த செய்தியைச் சொல்லி, ''அதிக துாரம் பயணம் செய்யணும்ன்னு வருத்தப்படறா. போகப் போக சரியாய்டுவா,'' என்றான், வேலு.
''சரிப்பா, நாளையிலிருந்து, வழக்கத்தைவிட சீக்கிரமா எழுந்து, சமையலை முடிச்சிடறேன். நீ கவலைப்படாம போய் துாங்கு,'' என்றாள், காமாட்சி.
இரவு மணி, 10:00. அடுக்களையில் சமையல் பாத்திரங்கள் கழுவும் சத்தமும், காய்கறி நறுக்கும் சத்தமும், வேலுவின் காதில் கேட்டது. அவனுக்காக, காமாட்சி செய்த தியாகத்தை, சற்று நேரம் அசை போட்டான். அவனையறியாமல் கண்கள் குளமாயின.
மறுநாள் காலை, சமையல் அனைத்தும் விரைவாய் தயாராகி இருந்தது.
பதற்றத்துடன் புறப்பட்ட கல்பனாவுக்கு, புதிய அலுவலக வாசலை அடையும்போது, மேலும் பதற்றம் அதிகமானது. மேனேஜர் அறைக்கு சென்று, தயாராய் இருந்த ஆவணங்களைக் கொடுத்தாள்.
நிதானமாக அனைத்தையும் புரட்டிப் பார்த்த மேனேஜர், கல்பனாவை நிமிர்ந்து பார்த்தார்.
''எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கு. காலம் எவ்வளவு வேகமாப் போகுது...'' சம்பந்தமே இல்லாமல் பேசிய மேனேஜரை பார்த்தாள், கல்பனா.
''ஏம்மா, நீங்க காமாட்சி மேடம் மருமகதானே. உங்க கல்யாணத்துக்கு நான் வந்திருந்தேன். எவ்வளவு வருஷமாச்சு... ஆமா, மேடம் எப்படி இருக்காங்க... கணவர், வேலு எப்படி இருக்கார்?'' என்றார்.
வந்ததும் வராததுமாக, மாமியாரைப் பற்றி விசாரித்தது, அதுவும், 'மேடம்' என்று சொன்னது, அவளுக்கு எரிச்சலை உண்டாக்கியது. சற்று நேரம், அலுவலக நடைமுறைகள் தொடர்பாக விளக்கினார், மேனேஜர்.
குழப்பதிலிருந்த கல்பனா எதையும் காதில் வாங்கவில்லை. ஊழியர்களுக்கு, கல்பானாவை அறிமுகம் செய்ததும், அவளது இருக்கைக்கு அழைத்துச் சென்றார், மேனேஜர்.
''ஒருகாலத்துல, இதுதான் அவங்க சீட்.''
''யாரோட சீட் சார்?'' சட்டெனக் கேட்டாள், கல்பனா.
''என்னம்மா இப்படி கேட்கற, உன் மாமியார் தான். நல்ல ஸ்டெனோ. நான் அவங்களோட தான் வேலை செய்தேன். இப்ப பதவி உயர்வு கிடைத்து மேனேஜர் ஆயிட்டேன். அவங்க கணவர் இறக்கும் போது, மகனுக்கு, 16 வயசு.
''மகனை கவனிக்க ஆள் இல்லைன்னு, வேலையை விட்டுட்டுப் போயிட்டாங்க. எவ்வளவோ எடுத்துச் சொன்னோம், அவங்க கேட்கல. இப்போ எப்படி இருக்காங்க?'' மேனேஜர் கேட்டதும், கல்பனாவின் முகம், 'குப்'பென வியர்த்தது.
இதுவரை யாரும் சொல்லாத தகவல்கள். அவளை நிலைகுலையச் செய்தன. அதன்பின், மனம் வேலையில் முழுமையாக ஈடுபடவில்லை.
பல்வேறு சிந்தனைகள் வந்து போயின. கடந்த காலங்களில், காமாட்சியை, 'வேலை வெட்டி இல்லாதவங்க...'ன்னு அடிக்கடி சொல்லி, அவமானப்படுத்தியதை நினைத்து, மனம் கூசியது.
கோப்புகளில் கவனம் செல்லவில்லை. எப்போது அலுவலகம் முடியும் என, கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். வழக்கத்தைவிட, அன்று நேரம் மெதுவாக நகர்ந்தது.
அதற்குமேல் மனம் பொறுக்காமல், மேனேஜரிடம் சென்று தயங்கியபடி, ''சார், ஒரு மணி நேரம், 'பர்மிஷன்' வேணும்,'' என்றாள், கல்பனா.
அனுமதி கிடைத்தது. விரைவாய் புறப்பட்ட கல்பனா, நகரப் பேருந்துக்காக காத்திருந்தாள். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பெண், சட்டென வண்டியை நிறுத்தி, ''ஹாய் கல்பனா... எப்படி இருக்கே?'' என்றாள்.
ஹெல்மெட்டைக் கழற்றிய அவள் முகத்தைப் பார்க்க, கல்லுாரி தோழி மோகனா.
''என்னடி, ஆள் பளபளன்னு இருக்கே,'' என்றாள், கல்பனா.
''ஆமாண்டி... நல்ல கணவர், வீட்டு வேலைகளையும், பிள்ளைகளையும் பொறுப்பா கவனிச்சுக்கிற மாமியார். எந்தக் கவலையும் இல்லாம, நிம்மதியா இருக்கேன்,'' என்றாள், மோகனா.
''ஆமா... ஏன், இவ்வளவு அவசரமா எங்க போற?''
''மாமியாருக்கு இன்றைக்குப் பிறந்த நாள். கேக் வாங்கிட்டு, புதுப்புடவை எடுக்கணும். ஒரு மணி நேரம், 'பர்மிஷன்' சொல்லிட்டு வந்தேன். வரட்டுமா,'' என்றாள், மோகனா.
பேருந்துக்குக் காத்திருந்து சலிப்பான கல்பனா, ஆட்டோ ஒன்றில் ஏறி, கடைத்தெரு விரைந்தாள்.
சிறிது நேரத்தில், வந்த வேலையை முடித்து, ஆட்டோவில் அமர்ந்ததும், வேலுவுக்கு போன் செய்து, ''என்னங்க, நான் வீட்டுக்கு சீக்கிரம் வந்துடுவேன். நீங்களும் கொஞ்சம் சீக்கிரம் வாங்க?'' என்றாள்.
''என்னாச்சு... ஏதாவது பிரச்னையா?'' பதற்றத்துடன் கேட்டான், வேலு.
''பிள்ளைகளையும், அத்தையையும் அழைச்சுக்கிட்டு வெளிய போயிட்டு வரலாம்.''
வாசலை ஆட்டோ அடையும்போது, பாட்டியுடன், பிள்ளைகள் சிரித்து விளையாடும் சத்தம் கேட்டது. சட்டென, கல்பனா வீட்டுக்குள் நுழைவதை எதிர்பாராத மூவரும், 'திருதிரு'வென விழித்தனர்.
காமாட்சி அருகே சென்றமர்ந்த கல்பனா, ''ஏன் அத்தை, இந்த நஞ்சுபோன புடவையைக் கட்டறீங்க. வேற நல்ல புடiவையை கட்டக் கூடாதா?'' என்றாள்.
கையில் வைத்திருந்த புதுப்புடவையைக் கொடுத்து, நா தழுதழுக்க, ''அத்தை... நீங்க சாப்பிட்டிங்களா, இதை கட்டிக்கோங்க,'' என்றாள்.
மருமகளிடமிருந்து, அந்த வார்த்தையைக் கேட்ட காமாட்சியின் கண்கள் கலங்கியது. நீர் தேங்கிய பாட்டியின் கண்களைத் துடைத்தனர், பிரபுவும், பிரீத்தியும்.
''ஆபீஸ்ல உங்க சீட்ல உட்கார்ந்து வேலை பார்க்கறது, எனக்குப் பெருமையாவும், சந்தோஷமாகவும் இருக்கு, அத்தை. எவ்வளவு பெரிய தியாகத்தை அசால்ட்டா செய்திருக்கீங்க. உங்களை நினைச்சா...'' சொல்லும்போதே, கல்பனாவின் கண்களிலிருந்து கண்ணீர், 'பொலபொல'வெனக் கொட்டியது.
-அப்போதுதான் வீட்டினுள் நுழைந்த வேலு, இந்த காட்சியை பார்த்து மகிழ்ந்தான்.
பூபதி பெரியசாமி
