PUBLISHED ON : ஏப் 23, 2023

அ நிறம் | அளவு
என் சுவாசக் காற்றே
உருவிலா உன்னை
கருவறைத் தொட்டு
கல்லறை வரை
சில நொடிகள் பிரிந்திடினும்
பறந்திடுவேன் விண்ணுலகம்!
சோலைகளுக்குள்
மவுனித்திடும் மரங்கள்
உன் வருகையால்
குதுாகலித்து அசைந்தாடுதே!
பாஷை பல பேசி
உறவாடுதே
நீ, அதன் காதலியா?
கடல் அலைகள்
உன் சங்கமத்தால்
குதித்து சதிராடுதே
நீ அதன் தாயா?
இசைக்கருவிகள்
உன் ஊடுருவலால்
மெல்லிசையாய் மாறி
ரசனையானதே
நீ அதன் தாரமா?
பணம், பதவி
பார்த்திராது
இல்லந்தோறும்
உள்ளந்தொட்டுச்
செல்கிறாய்...
ஜாதி, மதம்
சார்ந்திராது
சகல மனிதனையும்
தேகந் தீண்டிச்
செல்கிறாய்...
உன்னைச் சுவாசிக்கும்
எங்களுக்கும்
தந்துவிட்டுச் செல்- உன்
தார்மீகக் குணங்களை!
கே. முத்துஷீலா, திருநெல்வேலி.
