PUBLISHED ON : ஏப் 23, 2023

கமலின், ரூ. 1,000 கோடி 'டார்கெட்!'
விக்ரம் படம், கமலஹாசனுக்கு மிகப்பெரிய, 'கம்பேக்' கொடுத்ததை அடுத்து, தற்போது மெகா பட்ஜெட் படங்களில் மட்டுமே ஒப்பந்தமாகி வருகிறார்.
அது மட்டுமின்றி, தான் நடிக்கும் ஒவ்வொரு படமும், 1,000 கோடி வசூலை, 'டார்கெட்' ஆக கொண்டு தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறும் கமலஹாசன், 'அந்த படங்களில், ஹாலிவுட் பைட் மாஸ்டர்களை இடம்பெற செய்து, அதிரடி சண்டை காட்சிகளை வைக்க வேண்டும்...' என்றும், கேட்டுள்ளார்.
இது போன்று, அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்களில், மாறுபட்ட, 'ஆக் ஷன்' காட்சிகளை கொடுக்க வேண்டும் என்பதற்காக, ஒரு ஹாலிவுட் பைட் மாஸ்டரை நியமித்து, புதுவிதமான சண்டை பயிற்சிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார், கமலஹாசன்.
— சினிமா பொன்னையா.
பா.ரஞ்சித்தை மலை போல் நம்பும், விக்ரம்!
மிகப்பெரிய அளவில், 'ரிஸ்க்' எடுத்து, விக்ரம் நடித்த சில படங்கள், அதிர்ச்சி தோல்வியை கொடுத்து வருவதால், தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும், தங்கலான் படத்தை, மலை போல் நம்பி இருக்கிறார்.
இந்த படத்துக்காக, பெரிய அளவில் தாடி வைத்து, தலையில் நீண்ட முடி வளர்த்து நடித்து வரும், விக்ரம், கோலார் தங்கவயல் கதாபாத்திரமாகவே முழுமையாக மாறி விட்டார். அதோடு, 'இந்த படமும் வெற்றி பெறவில்லை என்றால், என் மார்க்கெட் அதல பாதாளத்தில் விழுந்துவிடும் என்பதால், இதுவரை இல்லாத அளவுக்கு மெனக்கெட்டு வருகிறேன்.
'இதற்கு முன் நீங்கள் இயக்கிய, சார்பட்டா பரம்பரை படத்தை போல, இந்த படத்தையும், 'மெகா ஹிட்' படமாக கொடுத்து, என்னை காப்பாற்றி விடுங்கள்...' என்று, இயக்குனர் பா.ரஞ்சித்தை கேட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
மீனாவின் மார்க்கெட்டை தட்டிப்பறித்த, த்ரிஷா!
தமிழில், நீண்ட இடைவெளிக்கு பிறகு, விஜயுடன், லியோ படத்தில் நடித்து வரும், த்ரிஷா, அடுத்தபடியாக மலையாளத்திலும், ராம் என்ற படத்தில், மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இதற்கு முன், திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களிலும், மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த, மீனாவையே, இந்த படத்திலும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில், த்ரிஷாவின் நடிப்பு பேசப்பட்டதால், அவரை இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அந்த வகையில், மணிரத்னத்தின், பொன்னியின் செல்வன் படம், த்ரிஷாவுக்கு, மலையாள சினிமா கதவுகளை திறந்து விட்டுள்ளது.
எலீசா
ராஷ்மிகாவுக்கு, 'ஷாக்' கொடுத்த, சாய் பல்லவி!
தெலுங்கில், ராஷ்மிகா மந்தனா முன்னணி நடிகையாக இருந்தபோதும், அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து, தனக்கென பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார், சாய்பல்லவி.
தற்போது, ராஷ்மிகா நடிக்கும், புஷ்பா -2 படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், சாய்பல்லவி. எப்போதுமே தன் திறமைக்கு சவால் விடக்கூடிய வேடங்களில் மட்டுமே நடித்து வரும், சாய் பல்லவி, இந்த படத்திலும், கதைக்கு திருப்புமுனை வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார்.
இதனால், இப்படத்தில், 'கிளாமர் ஹீரோயின்' ஆக நடிக்கும், ராஷ்மிகா மந்தனா, தான் கிளுகிளுப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும், மாறுபட்ட நடிப்பால், தன்னை, சாய் பல்லவி ஓரங்கட்டி விடுவாரோ என்ற கலவரத்தில் இருக்கிறார்.
— எலீசா
கறுப்புப்பூனை!
பையா நடிகை, உச்ச நடிகரின் படத்தில் ஒப்பந்தமானதை அடுத்து, கோலிவுட்டில் மீண்டும் அழுத்தமாக அஸ்திவாரம் எழுப்ப தயாராகி விட்டார். அதன் காரணமாக, மறுபடியும் கோலிவுட் ஆண் நண்பர்களுடன், 'ஜாலி'யாக லுாட்டி அடிக்க துவங்கி இருக்கும் நடிகை, முன்பு போலவே இப்போதும் நள்ளிரவு, 'பார்ட்டி'களுக்கு, 'விசிட்' அடித்து, ஆட்டம் பாட்டம் என்று ரகளை செய்கிறார்.
இதனால், இதுவரை, அம்மணி மீது பாரா முகம் காட்டிய சில, 'ஹீரோ'களும், இயக்குனர்களும், மறுபடியும் அவரது ஆட்டத்தில் கிறங்கி, கைகோர்க்கத் துவங்கியுள்ளனர்.
சினி துளிகள்!
* கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்து வரும், எல் ஜி எம் என்ற படத்தில்,. ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க, இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
* பத்து தல படம், ஏமாற்றி விட்டதால், ராகவா லாரன்ஸ் உடன் நடித்துள்ள, ருத்ரன் படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறார், பிரியா பவானி சங்கர்.
* தற்போது, ரஜினியுடன், ஜெயிலர் படத்தில் நடித்து வரும், தமன்னா, அதை அடுத்து, சுந்தர்.சி இயக்கும், அரண்மனை - 4 படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அவ்ளோதான்!
