தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : மே 19, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 19, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*டி.ரங்கராஜன், திருப்பூர் : மக்கள் பணத்தை ஏப்பம் விட்டு, தலைமறைவான - கைதாகி, ஜாமீனில் வந்த பைனான்ஸ் அதிபர்களின் தற்போதைய நிலை என்ன?

பென்ஸ், 'எஸ்' சீரிஸ் காரில் வலம் வருகின்றனர். மார்க்கெட்டில் நம்பர் ஒன் ஆகத் திகழும் தமிழ், இந்தி, தெலுங்கு நடிகைகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு உல்லாசப் பயணம் மேற்கொள்கின்றனர். மொத்தத்தில் மகாராசாக்கள் போல வாழ்கின்றனர்!

***

**சி.சேதுராமன், நெய்வேலி : மூளையை கசக்கிப் பிழிந்து, லஞ்சத்தை ஒழிக்க ஒரு வழி சொல்லுங்களேன்...

கசக்கவும் வேண்டாம், பிழியவும் வேண்டாம். லஞ்சத்தைப் பொறுத்து, வாங்கியவரின் பதவி முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அரபு நாடுகளைப் போல கை வெட்டுதல் முதல், தலை சீவுதல் வரை செய்தால் போதுமே!

***

*என்.ஜெயலட்சுமி, பனங்குடி : ஏழை, பணக்காரன் இவர்கள், இந்த காலத்தில் எதற்கு வருந்துகின்றனர்?

'ஒருவேளை சாப்பாடு கூட இல்லாமல் உருக்குலைகிறோமே' என்று கலங்குகிறான் ஏழை! உடம்பு சதையை குறைக்க வழி தெரியாமல் வருந்துகிறான் பணக்காரன்!

***

** செ.பாலகிருஷ்ணன், பாளையங்கோட்டை : நம் நாடு முன்னேறாததற்கு காரணம் என்ன?

மக்களைப் புரிந்து கொண்டு விட்டனர் அரசியல்வாதிகள். இன்னும் அரசியல்வாதிகளை புரிந்து கொள்ளவில்லை மக்கள்; இதுவே, நாடு பின்தங்கி இருப்பதற்கு காரணம்!

***

*ஜி.தாமரைச்செல்வி, விருதுநகர் : 'பணம்தான் உலகம்' என்கிறாள் என் தோழி...

இல்லவே இல்லை! நமக்கு நாமே தான் உலகம். பணத்தை படைத்தது நாம் தான். பணம் தான் நம்மை நம்பி இருக்க வேண்டுமே தவிர, அதை நம்பி நாம் இருக்கக் கூடாது!

***

**ஆ.ராம்குமார், விளாங்குடி : சக்தி வாய்ந்த டானிக் ஏதாவது உள்ளதா? எங்கே கிடைக்கும்?

மிகவும் சக்தி வாய்ந்த டானிக் நம்பிக்கை... அது அவரவர் மனநிலையிலேயே இருக்கிறது! ஒரு நாளும் இந்த டானிக்கை தொலைத்து விடக் கூடாது!

***

*எஸ்.முரளி, ஆவடி : பெண்கள், எளிதில் ஏமாந்து விடுகின்றனரே...

வேஷங்களை, கபட நாடகங்களை முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியாத இளகிய சுபாவம் கொண்டிருப்பதால், தொடர்ந்து வாழ்வின் ஒவ்வொரு இடத்திலும், படித்திருந்தும் ஏமாற்றப்படுகின்றனர். எப்போது தெளிவார்களோ... தெரியவில்லை!

***

*மா.செந்தூர்பாண்டியன், கொளத்தூர் : வேலை இல்லா பட்டதாரிகளுக்கு, உங்கள் ஆலோசனை என்ன?

தம் பெயருக்கு பின்னால் போட்டுக் கொண்டுள்ள பட்டத்தை மறந்து விட வேண்டும்... அப்படி மறந்தால், அவர்களிடமிருக்கும், 'ஈகோ' மறையும். அப்புறம் என்ன... ஆயிரம் வேலை இடங்கள் கண் முன்னே விரியுமே!

***

*என்.ராகுல், சிவகாசி : மனிதனின் அவசியத் தேவைகள் என்ன?

உள்ளத்தில் தூய்மை, உடம்பில் உடை, கையில் காசு!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us