PUBLISHED ON : மே 19, 2013

மே 24., வைகாசி விசாகம்!
தாயின் சம்பந்தமில்லாமல் ஒரு குழந்தை பிறக்க முடியுமா? முடியாது.
முருகன், தாயின் சம்பந்தமில்லாமல்... சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து நேரடியாகப் பிறந்தவரா? இல்லை. அவரும் தாயின் சம்பந்தத்துடன் பிறந்தவர் தான்.
உலகத்தில் அசுரர்களின் ஆதிக்கம் ஓங்கிய போது, அவர்களை அடக்க சிவன், தன் நெற்றிக் கண்ணில் இருந்து, ஆறு பொறிகளைச் சிந்தினார். அந்தப் பொறிகள், கங்கையில் விழுந்தன என்று, குமார சம்பவம் என்ற நூலில் மகாகவி காளிதாசர்
கூறுகிறார். கங்கை யின் புத்திரர் என்பதால் தான் முருகனுக்கு காங்கேயன் என்ற பெயர் வந்தது.
தமிழ் புராணங் களில், முருகன் சரவணப் பொய்கையில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. அசுரன் ஒருவனால் துரத்தப்பட்ட அம்பாள், அவனிடமிருந்து தப்ப, பொய்கையாக மாறினாள். அதுவே, சரவணப்பொய்கை. சரவணம் என்றால் நாணல் (தர்ப்பை). தர்ப்பை புல் அடர்ந்த பொய்கை.
அழகுத் தமிழில் முருகன் என அழைத்தாலும், அவருடைய பல கோவில்கள், சுப்பிரமணியர் கோவில் என்றே அழைக்கப்படுகின்றன.
சுப்பிரமணியர் என்பது சமஸ்கிருதச் சொல். 'சுப்ரஹ்மண்யர்' என்றே அதை உச்சரிக்க வேண்டும். சு என்றால் உயர்ந்த. 'ப்ரஹ்மண்யன்' என்றால் உண்மையான தெய்வ வடிவம் (சத்யமான பரமாத்ம ஸ்வரூபம்) என்று அர்த்தம். அந்தக் குழந்தை பிரம்ஹச்சாரியாக (பிரம்மச்சாரி) கோவில்களில் தனித்துக் காட்சியளிப்பார்.
தமிழில், பால சுப்பிரமணியர் என்போம். பாலன் என்றால் குழந்தை. கிராமங்களில் இவரை சுப்பையா என்பர். இதை, சுப்பு+ஐயா என பிரிப்பர். சுப்பிரமணியத்தின் சுருக்கமே சுப்பு. ஐயா என்றால் மேலானவர்.
முருகனை ஆறுமுகன் என்று சொல்லவும் காரணம் உண்டு. அவருக்கு எல்லாமே ஆறு. ஆறு பொறிகளில் இருந்து பிறந்தவர். கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரால் வளர்க்கப்பட்டதால், கார்த்திகேயன் எனப்பட்டவர். பிறந்து ஆறு-நாட்கள் மட்டுமே பாலலீலைகள் புரிந்தவர். அவருக்குரிய திதி சஷ்டி. இது திதிகளில் ஆறாவதாகும்.
சுப்பிரமணியர் தன் தாயை, எப்போதும் கைகளில் பிடித்துக் கொண்டிருக்கிறார். தாய் பார்வதி, தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி, கொடுத்த வேல்தான் அது. அதனால் தான் அதை, 'சக்திவேல்' என்பர். முருகன், பாம்பு வடிவம் கொண்டவரும் கூட. அவரது வாகனமான மயிலின் கால்களுக்குள் பாம்பு இருக்கும். இதனால் தான் குழந்தை இல்லாதவர்களும், குழந்தைகளால் கஷ்டப்படுவோரும், அதை நாக தோஷமாகக் கருதி, சஷ்டி விரதம் இருப்பர். பேச்சு திறனற்று பிறந்த குமரகுருபரரை, அவரது பெற்றோர் திருச்செந்தூர் அழைத்துச் சென்றனர். செந்திலாண்டவரின் பேரருளால், அவர் பாடும் திறமையைப் பெற்று, உலகம் போற்றும் புலவரானார்.
ஆந்திரா, கர்நாடகாவில் முருகனுக்கு சிலை வடிப்பதில்லை. நாகத்தையே முருகனாகக் கருதி, 'ஸுப்பாராயுடு' என்று அழைப்பர். தெலுங்கு மக்கள், எங்காவது பாம்பைக் கண்டால், 'ஸுப்பாராயுடு' என்று அழைப்பது வழக்கம்.
ஆதிசங்கரர், செந்தூர் முருகன் மீது பாடிய நூல், 'சுப்பிரமணிய புஜங்கம்!' புஜங்கம் என்றால் பாம்பு. இதிலுள்ள ஸ்லோகங்களை வாசிக்கும் போது, பாம்பு நெளிந்து செல்வதைப் போன்ற உணர்வு ஏற்படும்.
முருகன் பிறந்தது விசாகம் நட்சத்திரத்தில் என்பதால், இவருக்கு விசாகன் என்ற பெயரும் உண்டு. வி என்றால் வெற்றி. சாகம் என்றால் ஆடு. முருகனுக்கு மயில் மட்டுமல்ல, ஆடும் வாகனம் தான். திருச்சி வயலூரில் அவரை ஆடு வாகனத்தில் தரிசிக்கலாம்.
முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நன்னாளில், அவரது திருத்தலங்களுக்கு சென்று வருவோம்.
***
தி. செல்லப்பா
