PUBLISHED ON : மே 19, 2013

ஆரவல்லி படத்திற்காக, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல், பழக்கம் இல்லாத கழுதைக்கிட்டே, கொஞ்சம் பாத்து கறக்கணும் - ஏன்னா எப்ப பல்லு போகுமோ, மூக்கு போகுமோ சொல்ல முடியாது. அதனாலே பாத்து கறக்கணும்... என்று ஆரம்பிக்கும். படத்தை, டி.ஆர்.சுந்தரம் டைரக்ட் செய்தார். கறுப்பு- வெள்ளையில் எடுத்த இந்தப் படத்தின் படப் பிடிப்பு, மிகவும் அற்புதமாக இருந்தது என்று, எல்லாரும் அப்போது பாராட்டினர். பாராட்டுக்குரியவர், கேப்டன் ஜி.ஆர்.நாதன்.
மாடர்ன் தியேட்டர்சில், பெரிய நடிகர்களை போட்டு எடுத்த பிரம்மாண்டமான படம், தலை கொடுத்தான் தம்பி. இதற்கு, வசனம் எழுதத்தான் மாடர்ன் தியேட்டர்சுக்கு வந்தார் முரசொலி மாறன். நடிகர்கள் கே.ஆர். ராமசாமியும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் இணைந்து நடித்த கதை இது.
இது, ஒரு கிராமியக் கதையின் சாயலைக் கொண்ட, இரு சகோதரர்களின் கதை. ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாமலேயே, இருவரும் சிறையில் வாடுகின்றனர். பின், அங்கிருந்து தப்பிக்கும் காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப் பட்டன. இந்தியாவிலேயே, மிகப் பெரிய மாக்னசைட் சுரங்கம் உள்ள இடம் சேலம். அங்கு, 200 சதுர அடி ஆழம் வரை தோண்டப்பட்ட பின், நீண்ட படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, அந்தப் படிக்கட்டுகளில், ஆயிரம் கைதிகள். வரிசைக்கு 50 பேர் நிறுத்தப்பட்டு இருந்தனர். சுற்றிலும், கண்களுக்கு எட்டிய தூரம் வரை, கைதிகள் வேலை செய்வது போல், காட்சி அமைக்கப்பட்டது. கே.ஆர்.ராமசாமியும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் ஒரு இடத்தில் வேலை செய்வது தான் சீன். அங்கிருந்து அவர்கள் தப்பி ஒட வேண்டும்.
கைதிகள் வேலை செய்யும் இடத்திற்கு போய், அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க ஆட்கள் தேவை என்பதால், ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு டிரம் வைத்து, அதில் தண்ணீர் நிரப்பி இருந்தனர். அதிகாலையில், ஆட்கள் ஸ்பாட்டிற்கு வர ஆரம்பித்தால், எல்லாவற்றையும் ஒழுங்காக அமைக்க காலை ஒன்பது மணி ஆகி விடும். படப்பிடிப்பு முடிய, மதியம் ஒரு மணி ஆகிவிடும். அதற்கு மேல் தாங்க முடியாத அளவுக்கு வெயில் இருக்கும் என்பதால், முற்பகலோடு படப்பிடிப்பு நிறுத்தப்படும். இதை போன்று, 'மாக்னசைட் மைன்சில்' பத்து தினங்கள் படப்பிடிப்பு நடந்த பின், சிறையிலிருந்து சகோதரர்கள் தப்புவது போல் காட்சி அமைக்கப்பட்டது. டி.ஆர்.சுந்தரம் டைரக்ஷனில் இதுவும் ஒரு வெற்றி படம் தான்.
தலை கொடுத்தான் தம்பி படத்துக்காக, மாக்னசைட் சுரங்கத்தில் அவுட்டோர் படப்பிடிப்பு நடந்த பின், இன்னும் சில வெளிப்புற காட்சிகள் எடுப்பதற்காக, கன்னியாகுமரி, சுசீந்திரம், திருவனந்தபுரம் போன்ற இடங்களை தேர்ந்தெடுத்தார் டி.ஆர்.சுந்தரம். நடிகர்கள் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ். ராஜேந்திரன் மற்றும் மற்ற துணை நடிகர்கள், தொழில் கலைஞர்கள் உட்பட, பெரிய பட்டாளமே அந்தப் பகுதிக்கு போயிருந்தது. கேமராமேன் மஸ்தான், ஆர்ட் டைரக்டர் டோமினிக் எல்லாம் இதில் அடக்கம்.
திருவனந்தபுரத்தில் இருந்த மெர்ரிலேண்ட் ஸ்டுடியோ கெஸ்ட் அவுசில் டி.ஆர்.சுந்தரம் தங்கி இருந்தார். திட்டமிட்டபடி, படப்பிடிப்பு ஒழுங்காக முடிந்து விட்டது. கலைஞர்கள் எல்லாரும் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர். பத்துக்கும் மேற்பட்ட தொழில் நுட்பக் கலைஞர்களும், டி.ஆர்.சுந்தரமும் மட்டும் தான் எஞ்சி இருந்தனர்.
பணம் எல்லாம் தீர்ந்து விட, ரயில் டிக்கெட் வாங்க பணம் இல்லை. இதை டி.ஆர்.சுந்தரத்திடம் போய் சொல்ல, 'சேலத்திற்கு போன் போட்டு, பணம் அனுப்பச் சொல்!' என்று உத்தரவு போட்டு விட்டார். எப்படியும் வந்து சேர, இரண்டு தினங்களாவது ஆகும். ஸ்டுடியோவிற்குள், இவர்கள் நின்று பேசிக் கொண்டு இருந்தபோது, அங்கே பிரேம் நசீர், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஸ்டுடியோவில் படம் பார்க்க வந்தார். அவர் தான், மாடர்ன் தியேட்டர்சின் வண்ணக்கிளியில் கதாநாயகனாக நடித்தவராயிற்றே.
காஸ்டியூமர் அர்த்தனாரிக்கு, திடீரென ஒரு யோசனை தோன்ற, அவரை நிறுத்தி, தங்கள் நிலையை சொல்லி, ஊருக்கு போனவுடன் பணம் அனுப்புவதாகவும், இப்போது ரயில் செலவுக்கு இரண்டாயிரம் ரூபாய் தேவை என்றும் சொன்னார். தொழில் நுட்ப கலைஞர்கள் அருகில் தான் இருந்தனர். எல்லாம் கேட்டு விட்டு, அந்த நடிகர். 'என்னை யாரென்று நினைத்து கொண்டு பேசுகிறீர்கள்?'' என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். எல்லாருக்கும் அதிர்ச்சி...
'ஏன்...நீங்கள், எங்கள் படத்தின் ஹீரோ பிரேம்நசீர் தானே!'
'இல்லை... நான் அவர் தம்பி பிரேம் நவாஸ்...' என்றார் சிரித்துக் கொண்டே.
அச்சு அசலாக, தன் அண்ணனைப் போலவே இருந்தார்.
எல்லாரும் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவரே பேசினார்...
'அரை மணி நேரம் டைம் கொடுங்கள்... வீட்டிற்கு போய், பணம் எடுத்து வருகிறேன்...' என்று சொல்லிவிட்டு போனவர், விரைவில் பணத்துடன் வந்தார்.
'எங்கள் டைரக்டரை சந்திக்கிறீர்களா?'என்று கேட்டதற்கு 'வேண்டாம்... எனக்கு அதிக அறிமுகமில்லை...' என்று சொல்லி, போய் விட்டார்.
கதாநாயகன் என்றாலே, தனக்கு தனி அந்தஸ்து வந்துவிட்டதென்றும், அதனால், தான் சொன்ன படி தான் எல்லாரும் கேட்டாக வேண்டும் என்று நினைத்த ஒரு கதாநாயகனுக்கு, ஏற்பட்ட கதி என்னவென்று பார்ப்போமா?
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்னும் வெற்றிப்படத்தை, தெலுங்கில் எடுக்க முடிவு செய்த டி.ஆர்.சுந்தரம் அதற் காக தெலுங்கில் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த நடிக, நடிகையரை இந்த படத்திற்காக ஏற்பாடு செய்தார்.
ஜக்கையா மற்றும் ராஜ்நளா, பிரபாகர் ரெட்டி, ரேலங்கி, அல்லூரி ராம லிங்கையா, ரமண ரெட்டி, ஜமுனா, கிரிஜா ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இருந்தனர்.
படத்தின் பெயர், சஹஸ்ர சிரச்சேத அபூர்வ சிந்தாமணி என்பதாகும். தமிழில், பி.எஸ்.கோவிந்தன் நடித்த கதாநாயகன் பாத்திரத்திற்கு, தெலுங்கில் ஜக்கையா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். சிந்தாமணி படத்தின் முக்கிய பகுதியே, 'இந்த மூன்று கேள்விகள்' தான். அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையென்றால் அவர்களது, தலை துண்டிக்கப்பட்டுவிடும். 999 அரச குமாரர்கள், சிந்தாமணியிடம் வந்து, தங்களது தலையை இழந்தனர். ஆயிரமாவது நபராக வருபவர் தான், கதாநாயகன்! அவர், பல நாடுகளில் அலைந்து, முதல் இரண்டு கேள்விகளுக்கு விடை தெரிந்து கொண்டு வருகிறார். அடுத்ததாக வரும் நாட்டின் அரசர், கதாநாயகனின் தந்தைக்கு மிகவும் நெருங்கிய நண்பர். ஆனால், அந்தக் கேள்வியை கேட்ட வுடன், கதாநாயகனை, அந்த அரசன், அடித்து போட்டு விடுகிறார். கேள்வியை கேட்கும் வரை அன்பாக இருந்த அரசனின் குணம், ஏன் இப்படி மாறியது என்பது, கதாநாயகனுக்கும் புரியாத விஷயம்!
அடித்தபின், மீண்டும் சகஜநிலைக்கு திரும்பிய அரசன், கதாநாயகனை சமாதானப்படுத்துகிறான். தைரியமாக கதாநாயகன் தொடர்ந்து அதே கேள்வியை கேட்க, அரசன் இந்த முறை அடிக்காமல், மிகவும் சோகமாகி விடுகிறான். 'சந்நியாசிக்கு உதவிய சுதாவும், ஆகாத மதியும் உயிருடன் இருக்கின்றனரா அல்லது இறந்துவிட்டனரா! அல்லது சுதா, மதி கதி என்ன?'என்பது தான் கேள்வி.
பதில் வாங்காமல், அந்த இடத்தை விட்டு போவதில்லை என்று முடிவு செய்த, கதாநாயகனின் தொந்தரவை பொறுக்க முடியாமல் அரசன், அந்தகேள்விக்கு பதில் 'தான் தான்' என்று சொல்ல, கதாநாயகன் அதிர்ச்சி அடைகிறான்.
இதுதான் படமாக்கப்படவேண்டிய காட்சி. கதையில், ஹீரோவான ஜக்கையா, அரசனிடம் அடி வாங்க வேண்டும். ஆனால், ஜக்கையா அடி வாங்க மறுத்து விட்டார். இதற்கு, அவர் சொன்ன ஒரே காரணம். 'நான் அரசனிடம் அடி வாங்குவது போல் காட்சி அமைத்தால், ஆந்திராவில் என் ஹீரோ, 'இமேஜ்' கெட்டுவிடும். அதற்கு பின்னால், என்னை யாரும் மதிக்க மாட்டார் கள். எனக்கு அதுதான் முக்கியம். இந்தப்படம் முக்கிய மல்ல. வேண்டுமானால், அட்வான்சை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்...' என்று சொல்லி விட்டார். அப்போது, டி.ஆர்.சுந்தரம் ஊரில் இல்லை. சென்னையில், ஏதோ வேலையை கவனிக்கப் போயிருந்தார். ஸ்டுடியோ நிர்வாகிகள் யார் சொன்னதையும், ஜக்கையா கேட்கத் தயாராக இல்லை. சென்னைக்கே திரும்பிப் போகத் தயாராகி விட்டார். படமோ, பாதியாகி விட்டது. இப்போது, கதாநாயகன் போவதென்றால்...
படத்தில், எஸ்.எஸ்.லால், மற்றும் எஸ்.டி.லால் என்று இருவர் டைரக்டராகவும், கேமரா மேன்களாகவும் வேலை செய்தனர். இதை டி.ஆர்.சுந்தரத்திடம் சொல்லி, அவரது யோŒனையை கேட்பது நல்லது என்று சென்னைக்குப் போன் செய்தனர்.
'நான் ஒரு மணி நேரம் கழித்து, உங்களுக்கு போன் செய்கிறேன். அதுவரை படப்பிடிப்பை நிறுத்தாதீர்கள். ஜக்கையா இல்லாத காட்சிகளை எடுங்கள்...' என்று, சென்னையில் இருந்து சொல்லிவிட்டார் டி.ஆர்.சுந்தரம். இந்தச் சம்பவம் நடக்கும் போது காலை, 10:00 மணி. சரியாக 12:00 மணிக்கு 'டி.ஆர்.சுந்தரம் திரும்பவும் போன் செய்து, ஜக்கையாவின் விருப்பப்படி, அவரை சென்னைக்கே திருப்பி அனுப்பி விடுங்கள். நாளை காலை, நான் புதிய கதாநாயகனுடன் வருகிறேன்...' என்று சொல்லி விட்டார். படம்பாதி முடிந்த நிலையில், கதாநாயகன் சென்னைக்கு ரயிலேற்றி விடப்பட்டார்.
— தொடரும்.
ரா. வேங்கடசாமி
