PUBLISHED ON : மே 19, 2013

'அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது; அதிலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது என்ற, அவ்வை பிராட்டியின் வார்த்தைக்கேற்ப, முழு ஆரோக்கியத்துடன் பிறந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலையால், விபத்தில் சிக்கி, செயல்பட முடியாமல், மூலையில் முடங்கி விடுவதுண்டு. ஆனால், 'என்னால் முடியும், நான் செய்யாவிட்டால் யார் செய்வார்...' என்ற மனோதைரியம், லட்சத்தில் ஒருவருக்குத் தான் வரும்.
அந்த பட்டியலில் ஒருவராய், பாராலிம்பிக்கில் தங்கம் வாங்க முடியும் என்ற நம்பிக்கையுடன், நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், ராமநாதபுரம் மாவட்டம் கவுசானல் கல்லூரியில் பி.எஸ்சி., இயற்பியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் அந்தோணி பார்த்திபன்.
நெல்லை மாவட்டம் ஆயன்குளம் கிராமத்தில், வறுவேல் செபஸ்தியன் - மேரி தம்பதியருக்கு, பத்தாவது குழந்தையாக பிறந்த இவர், அங்கேயே பள்ளிப் படிப்பை முடித்து, ராமநாதபுரம் கவுசானல் கல்லூரியில் சேர்ந்தார்.
நன்றாக படித்த அவர், 2011ல், விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்று, மீண்டும் கல்லூரிக்கு ரயிலில் திரும்புகையில், அதிகாலை மூன்று மணிக்கு, பரமக்குடிக்கு ரயில் வந்த போது, ராமநாதபுரம் வந்ததாக நினைத்து, தூக்கக் கலக்கத்தில் அவசரமாக இறங்கினார்.
அந்த இடம் ராமநாதபுரம் இல்லை என தெரிந்தவுடன், மீண்டும் ரயிலில் ஏற முயன்ற போது தடுமாறி, நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கி, இரண்டு கால்களையும், வலது கையில் மூன்று விரல்களையும் இழந்தார்.
சிதைந்த நிலையில் கை, கால்கள், பரமக்குடியில் உள்ள விபத்து மீட்போர் சங்கத்தினர் மற்றும் மதுரையில் உள்ள, 'கியூர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் இளம்பாரியும் இணைந்து, இருந்த அவரை அவசர சிகிச்சை பெற வசதிகள் செய்து கொடுத்தனர்.
மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில், 45 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்தோணி பார்த்திபனுக்கு, கடவுளின் கருணையால், புதுப்பிறப்பு கிடைத்தது.
சிகிச்சை ஓய்விற்கு பின், மீண்டும் உத்வேகத்துடன் வலது கையில் விரல்கள் இல்லாத நிலையில், இடது கையில் எழுதி பழகி, முதல் ஆண்டில், அனைத்து பாடங்களிலும் தேர்வானார்.
ஆடிய கால்களை அடக்க முடியாது என்பது போல, விபத்திற்கு முன் அனைத்து விளையாட்டிலும் சிறந்து விளங்கிய அந்தோணி பார்த்திபனுக்கு, வாலிபால் என்றால் கொள்ளை பிரியம். அதில், பல பரிசுகளை பெற்றுள்ளார்.
விபத்திற்கு பின், இரண்டு கால்களை இழந்த நிலையிலும், ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற அவரது தணியாத தாகத்திற்கு, சிறுவயதில் கற்றுக்கொண்ட நீச்சல், கை கொடுத்தது. இரண்டு கால்களும், கையில் விரல்களும் இல்லாத நிலையில், இவரால் நீந்த முடியுமா என்ற அச்சம், அவரை சார்ந்தவர்கள் அனைவருக்கும் இருந்தாலும், அவரது நம்பிக்கைக்கு தடை சொல்லாமல், அவரை உற்சாகப்படுத்தினர்.
நீச்சல் குளத்திற்கு சென்றபோது, நம்மை எதிர்கொண்டு தவழ்ந்து வந்த அவரை பார்க்கும் போது, நம் கண்களிலும் நீர். பயிற்சியின் போது, அவரின் நம்பிக்கை, மன தைரியம், வேகம் பிரமிக்க வைத்தது.
'சாதிக்க நினைப்பவருக்கு, சந்தர்ப்பம், ஒவ்வொரு விதமாக அமையும். என்னை பொறுத்தவரை, இந்த விபத்திற்கு பின் தான் அது அதிகமானது. 'அய்யோ பாவம்' என்பவர்கள், நாளை, என்னை வியந்து பார்க்க வேண்டும். பாராலிம்பிக்கில் தங்கம் வாங்க வேண்டும், என்னை போன்றோருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்...' என்கிறார் தன்னம்பிக்கை நாயகனாய்.
***
ஆர். ஆனந்த்
