PUBLISHED ON : மே 19, 2013

ஈ.வெ.ரா., (1944ல்) எழுதுகிறார்: நம் தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் மாபெரும் கேடாய் இருந்து வருவது சினிமா, நாடகம் போன்றவை. நம் தமிழகம், மானமுள்ள நாடாக, மானத்தில் கவலையுள்ள மக்களை கொண்ட நாடாக இருந்திருக்குமானால், இந்த நாடகமும், சினிமாவும் ஒழிந்து, கல்லறைக்குப் போயிருக்கும்.
வள்ளி, திருமண நாடகத்தில், வள்ளியை சுப்பிரமணியன் காதலித்து காதல் சேட்டை செய்யும் போது, பல ஆண்கள், பெண்கள் பக்கமும், பல பெண்கள், ஆண்கள் பக்கமும் திரும்பி பார்த்து, கண்ணோடு கண்ணை முட்டவைப்பது போல், பார்வையை முட்ட வைத்து அரை மூர்ச்சையாகி விடுகின்றனர்.
ஒரே கதை, நாடகமும், சினிமாவுமாக ஒரு ஊரில் ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதம் நடப்பதற்கு காரணம் என்ன? முதலிரண்டு மூன்று நாட்களிலேயே பல பெண்களும், ஆண்களும் நாடக கொட்டகையைத் தங்கள் பார்வை, சந்திப்பால் காதலை தீர்த்துக் கொள்ளவும், காதல் காட்சியை கண்டு அனுபவிப்பதால், இன்பங் கொள்ளவும், அனுகூலமான இடம் ஆக ஆக்கிக் கொள்கின்றனர். வெறும் சாதாரணமான நிலையில் ஆண், பெண் சந்தித்துக் கொள்வதை விட, நல்ல உடை, நல்ல நடை, நல்ல அலங்கரிப்பு, நல்ல சாயலோடு செல்ல உரிமை இருக்கிற இடங்கள், இவற்றோடு அதற்கேற்ற சைகைகள் நடக்கும் சமயத்தில், சந்திப்பு வைத்துக் கொள்வது, உண்மையிலேயே யாருக்கும் எந்த வயதினருக்கும் ஒரு இன்பத்தையும், குஷியையும், திருப்தியையும் கொடுத்துத் தான் தீரும். இது இயற்கையே.
ஆனால், நாம் இதை வளர்க்க செய்யலாமா? இளம் வயதாகவும், தங்களை காப்பாற்றிக் கொள்ள போதிய சக்தி இல்லாதவர்களாகவும் இருக்கிற சிறுவர், சிறுமியருக்கும் மற்றவர்களுக்கும், இதை ஒரு பழக்கமாக செய்யலாமோ என்று பாருங்கள். காட்டு மிராண்டிகள் போல மூடநம்பிக்கையையும், காமமும், காதலுமே நம் கலைகளை நிரப்பி வருவதானால், கலையினால் மனிதன் அறிவாளியாவானா மடையனாவானா? சிந்தித்துப் பாருங்கள்!
***
அண்ணாதுரைக்கு ஜஸ்டிஸ் கட்சியின் போக்கு பிடிக்கவில்லை. 1942 காஞ்சியில் முஸ்லிம் லீக் போல், திராவிடர் லீக் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அண்ணாதுரையும் அதில் இருந்தார்.
அதன் விளம்பரச் செயலரான, சி.வி.எம்., அண்ணாமலையின் பெயரில் இதைப் பற்றிய அறிவிப்பு, அண்ணாதுரையின், 'திராவிட நாடு' இதழில் வந்தது. அதிர்ச்சி அடைந்த ஈ.வெ.ரா., இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை சி.வி.எம்.அண்ணாமலைக்கு எழுதினார். 'தென் இந்திய நல உரிமைச் சங்கம் (ஜஸ்டிஸ் கட்சி), சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றுக்கு நான் தலைவனாக இருக்கிறேன். இப்போது என்னை ஒதுக்கி, இப்படி ஒன்றை உருவாக்குகிறீர்களே...' என்று வேதனைப்பட்டு எழுதி இருந்தார். இதை அடுத்து ஈ.வெ.ரா.,வை நேரில் சந்தித்தார் அண்ணாதுரை.
தன் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஜஸ்டிஸ் கட்சியின் போக்கை ஏற்று, தன் இளமையைப் பாழாக்க விரும்பவில்லை என்று ஈ.வெ.ரா.,விடம் அண்ணாதுரை வெளிப்படையாகக் கூறினார். அதன் விளைவாகவே, 1944-ல் சேலத்தில் கூடிய ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் திராவிடர் கழகம் தோன்றியது.
சென்னை பெத்தநாயக்கன் பேட்டையில் காங்கிரஸ் கமிட்டி செயலராக, என்.வி.நடராசன் இருந்தபோது, ஒருமுறை நேரு சென்னை வந்தார். பிராட்வே டாக்கீசில் நடந்த வரவேற்புக்கு தானும் வர விரும்பி என்.வி.நடராசனிடம் அதற்கான, 'பாஸ்' கேட்டார் அண்ணாதுரை. ஒருவேளை அண்ணாதுரை மனம் மாறி காங்கிரசுக்கு வந்து விடுவார் என்று எண்ணி, அவர் கேட்டபடி. பத்து பாஸ்கள் கொடுத்தார் நடராசன்.
வரவேற்பு விழாவில் நேரு பேசும்போது, முன் வரிசையில் இருந்து, அச்சடித்த கேள்விகளை நேருவிடம் கொடுத்தார் அண்ணாதுரை. அதை சத்தியமூர்த்தி வாங்கிப் படித்து, 'நேரு இதற்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார்...' என்று கூறி விட்டார்.
சத்தியமூர்த்தியிடம் அண்ணாதுரை தந்த கேள்வித்தாளை வாங்கிப் படித்து, 'இதற்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்று சத்தியமூர்த்தி சொன்னது தவறு. ஆரம்பத்திலேயே தந்திருந்தால் நிச்சயம் பதில் சொல்லியிருப்பேன். இப்போது நேரமாகி விட்டதால் இக்கேள்விகளுக்கு இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பதில் சொல்கிறேன்...' என்றார் நேரு.
அதன்படியே, மாலைப் பொதுக்கூட்டத்தில் அண்ணாதுரையின் எல்லா கேள்விகளுக்கும் நேரு பதில் சொல்லி விட்டு, 'இந்தக் கேள்விகள் எப்படி இருந்தபோதிலும், கேள்வி கேட்டவரின் சிந்தனையை, அறிவை, ஆற்றலை நான் பாராட்டுகிறேன்...' என்றார்.
— 'அண்ணா என்னும் அன்பு உள்ளம்' நூலில் ரா.சனார்த்தனம்.
நடுத்தெரு நாராயணன்
