PUBLISHED ON : பிப் 04, 2018

* ஆர்.லட்சுமி, திருவள்ளூர்: மனிதன், தன் ஆறாவது அறிவை சரியாக பயன்படுத்துகிறானா?
ஒரு அறிவைக் கூட மனிதன் பயன்படுத்து வதில்லை எனக் கூறுகின்றனர், உளவியலார். மனிதன், தன் வாழ்நாளில் தன் அறிவின், 10 சதவீதத்தை கூட பயன்படுத்துவதில்லையாம்...(10 சதவீத பயன்பாட்டுக்கே இவ்வளவு அடிதடி... மீதமுள்ள, 90 சதவீதமும் பயன்பாட்டுக்கு வந்தால் என்ன ஆகுமோ!)
* வி.ரவி, தேனி: இந்த காலத்தில் ஒரு மனிதனுக்கு, மிக முக்கியமாக தெரிந்திருக்க வேண்டியது என்ன?
எது, எதற்கு பர்சை திறக்கலாம்... எது எதற்கு திறக்கக் கூடாது என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சோப்பு, - சீப்பு வாங்குவதானால் கூட, 'இது, அவசியந்தானா...' என, நுாறு முறை யோசித்து வாங்க வேண்டும். சிக்கனமாக வாழக் கற்றுக்கொண்டு விட்டால், எப்போதும் இன்பம் தான்!
எஸ்.காயத்ரி, திருவண்ணாமலை: இந்த உலகில் எவரால் வாழ முடியாது?
இரக்கம் உள்ளவர்களால்! அளவுக்கு மீறிய இரக்கம் உள்ளவர்களை, இந்த உலகம் ஏமாற்றி விடும்; அவர்களை வாழ விடாது!
எஸ்.ராமகோபால், சென்னை: கிரெடிட் கார்டுகளால் நடுத்தர மக்களுக்கு நன்மையை விட பாதிப்பே அதிகம் என்று ஒரு கருத்து உள்ளதே...
தீக்குச்சி போன்றது கிரெடிட் கார்டு. தீக்குச்சியைப் பயன்படுத்தி விளக்கையும் ஏற்ற முடியும்; காட்டையும் அழிக்க முடியும். காலத்தோடு ஒட்டி வாழ இனி, நடுத்தர குடும்பத்து மக்களுக்கும், கிரெடிட் கார்டு தேவை தான்!
இ.வாணி, நீலகிரி: பட்டப் படிப்பெல்லாம் இனி வேலை வாய்ப்பிற்கு உதவாது என்கிறார்களே... அப்படியா சார்?
உண்மை தான்; புரப்பஷனல் கோர்ஸ் படித்தவர்கள் கூட வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். ப்ளஸ் 2 முடித்த கையோடு, ஏதாவது தொழில் கற்று, ஒவ்வொருவரும் சொந்த காலில் நின்றால் தான் இனி பிழைக்க முடியும்!
பி.முனுசாமி, கடலுார்: மதிய உணவிற்குப் பின் குட்டித் துாக்கம் போடலாமா?
கூடாது... அதற்கு பதில், பத்து நிமிடம் எந்த வேலையும் செய்யாமல், 'ரிலாக்ஸ்டாக' உட்கார்ந்து இருக்கலாம் என, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குட்டித் துாக்கத்தால் உடல் குண்டாகி விடுமாம்!
* கே.நவீன், திருப்பூர்: தோல்விகளை தோற்கடித்து, வாழ்க்கையில் வெற்றிகளை மட்டுமே பெற என்ன செய்ய வேண்டும்?
இது பேராசை! வாழ்வில் தோல்வியே சந்திக்காத ஒருவரை சுட்டிக் காட்டுங்கள் பார்ப்போம்... தோல்வியும், வெற்றியும் இணைந்தது தான் வாழ்க்கை. வெற்றியே பெற்று கொண்டிருப்பதாக கற்பனை செய்து பார்க்கும்போது, 'போர்' அடிக்கிறது. 'த்ரில்'லே இருக்காது போல் தோன்றுகிறது.
பெ.ராஜதுரை, வேலுார்: எந்தச் செயலிலும், 'நாளை... நாளை' என்று தள்ளி போடுகிறேன்; என்ன செய்வது?
அப்படியானால் ஒரு நாளும் நீங்கள் எந்த செயலையும் முடிக்கப் போவது இல்லை. உங்களுக்குள், 'தோல்வி அடைந்து விடுவோமோ...' என்ற பயம் உள்ளதாலேயே தள்ளிப் போடுகிறீர்கள். தண்ணீருக்குள் இறங்கினால் தானே நீச்சலடிக்க முடியும்... தைரியமாக நீரில் குதியுங்கள்; நீந்திக் கரை ஏறி விடலாம்!
