PUBLISHED ON : பிப் 04, 2018

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவரிடம் வேலை ஒன்று ஆக வேண்டி இருந்தது. அவரைப் பார்க்க, சென்னையிலிருந்து காலை, 7:30 மணிக்கு வண்டியைக் கிளப்பி, கிழக்கு கடற்கரை சாலையைப் பிடித்தேன்.
ஒரு மணி நேரத்திற்குள் அவரது இல்லத்தை அடைந்தாக வேண்டுமே என்ற பதற்றம் இருந்தது.
நினைத்தபடியே, 8:30க்கு அதிகாரி இல்லத்தை அடைந்து, சென்ற வேலையை ஐந்தே நிமிடத்தில் முடித்துக் கொண்டேன். மிகவும் அன்பானவர் அவர் மனைவி... 'தம்பி, ஸ்வீட் சாப்பிடுங்க...' என, தான் கிளறிய கேசரியை நெய் மணக்க, வறுத்த முந்திரி துாவி சுடச் சுட எடுத்து வந்தார்.
அதிகாரியோ ஒரு, 'ஷுகர் பேக்டரி!' அவர் ஸ்வீட்டே சாப்பிடக் கூடாது. பின், ஏன் ஸ்வீட் தயாரித்துள்ளார் என எண்ணியபடியே கேசரியை வாங்கிக் கொண்டேன்.
என் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட அதிகாரி, 'உனக்காகத் தான் ஸ்வீட் தயாரிக்க சொன்னேன்...' என்றார். உடனே அவரது மனைவி, 'நம்பாதீங்க தம்பி... இவர், பக்கத்து இலைக்கு பாயசம் வைக்கச் சொல்லும் ஆசாமி... உங்களச் சாக்கு வைத்து, அவரும் ஒரு வெட்டு வெட்டிடுவார்...' எனக் கூறி சிரித்தார்.
எனக்கு ஸ்வீட் மீது அவ்வளவு பிரியம் கிடையாது என்பதால், சம்பிரதாயத்திற்கு கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டேன். அப்போது, குழந்தையுடன் உள் அறையிலிருந்து வந்து வரவேற்றார், அதிகாரியின் திருமணமான மகள்.
அவரது கணவர் சாப்ட்வேர் துறையில் சூரர்... அவரது நலன் பற்றி விசாரித்த போது, 'மாப்பிள்ளைக்கு, ஆப்ரிக்க நாடான உகாண்டாவிலிருந்தும், தான்சானியா
விலிருந்தும் வேலைக்கான அழைப்பு வந்திருக்கு... தான்சானியாவை விட உகாண்டாவில் அதிக சம்பளம்; நிறைய வசதிகள் செய்து தருவதாக சொல்லியிருக்காங்க. அனுப்பலாமா, வேண்டாமான்னு தயக்கமா இருக்கு... நீ என்ன சொல்றே?' எனக் கேட்டார்.
'இதில என்ன தயக்கம்... உகாண்டா முன்னைப் போல இல்ல; இடி அமீன் கூட செத்துப் போயிட்டாரு... அவரது சர்வாதிகார ஆட்சி நடந்தபோது தான், பணக்கார இந்திய நிலச்சுவான்தார்கள், இந்தியத் தொழிலதிபர்கள் துன்பப்படுத்தப்பட்டாங்க. அவங்க எல்லாம் சொத்துகள அப்படியே விட்டு, உயிர் தப்பினால் போதும்ன்னு இங்கிலாந்து போன்ற நாடுகள்ல தஞ்சமடைஞ்சாங்க...
'இந்தியில், கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை மும்தாஜ் கூட, அங்குள்ள தொழிலதிபர் ஒருவரை மணந்து, இடி அமீனால் விரட்டி அடிக்கப் பட்டவர் தானே... இப்போது, உகாண்டா ஒரு அமைதியான நாடு; உங்க மாப்பிள்ளையையும், பொண்ணையும் தைரியமாக அனுப்பி வையுங்க; ஐந்தாறு வருஷம் இருந்துட்டு வரட்டும்...' எனக் கூறி, அவரது மகள் பக்கம் திரும்பி, 'சிஸ்டர்... இயற்கையோடு இயைந்து வாழணும்ன்னா, தான்சானியாவைத் தேர்வு செய்யுங்க; நிறைய காசு சம்பாதிக்கணும்ன்னா உகாண்டா போங்க... அங்க தானே அதிக சம்பளமும், வசதிகளும் கிடைப்பதாக, உங்க அப்பா கூறுகிறார்...' என்றேன்.
'உன்னைப் போன்ற ஒரு சிலருக்குத் தான், இப்படி, தெளிவாக, தைரியமாக முடிவுகளை எடுக்கத் தெரிகிறது. அது, உங்களைப் போன்றோரின் உடன் பிறந்த குணமா அல்லது எங்களிடமும் அந்த குணம் இருந்து, அரசு வேலைக்கு வந்து விட்டதால் போய் விட்டதா எனத் தெரியவில்லை...' என்றார் அதிகாரி.
'தம்பி... வாங்க; பிரேக் பாஸ்ட் ரெடியாயிடுச்சு...' என்றபடியே பீங்கான் தட்டில் ஆவி பறக்கும்
கள் ஆப்பமும், கிண்ணத்தில் வெஜிடபிள் ஸ்டூ, தேங்காய் பால் மற்றும் கார சட்னியும் டைனிங் டேபிள் மீது வைத்தார். (குடிக்கும், 'கள்'ளை மாவில் ஊற்றி வைத்தால் 'ஈஸ்ட்' சேர்த்தது போன்று, 'புசு - புசு' என, இருக்கும் ஆப்பம்.)
சாப்பிட்டபடியே பேச்சை தொடர்ந்தார் அதிகாரி... 'இப்படித் தான் பாரு... என் கூட வேலை பார்த்த இன்ஜினியர் நண்பர் ஒருவர், வேலையில் படு புத்திசாலி; அவருக்கு வளைகுடா நாடு ஒன்றில், இதே போன்ற அணு மின் நிலையத்தில், 'டாப்' போஸ்ட் ஒன்றுக்கு, 'ஆபர்' வந்துச்சு. லட்சக்கணக்கில் சம்பளம்... அந்த அணு மின் நிலையத்தின் அதிபரான ஷேக், இவரைத் தேடி, கல்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டுக்கே இருமுறை வந்துட்டார்...
'இந்த மனுஷனுக்கு தைரியம் இல்ல; நொண்டி சாக்கு கூறுகிறார்... அவரது வயதான தந்தை, 'கடல் கடந்து சென்றால் காலை வெட்டிடுவேன்'னு சொன்னாராம்... எனக்கென்னவோ இது சரியான காரணமாகத் தோணல.
'பொறுப்புகளை பிறர் மீது சுமத்தியே பழக்கப்பட்டு விட்டனர் அரசு ஊழியர்கள். இப்போது ஒரு பொறுப்பை தானே முன்னின்று நடத்த வேண்டும் என்று வரும்போது, ஒரு வித, 'கிலி' வந்து விடுகிறது. இதனால், முடிவெடுக்கத் தெரியாமல் தவிக்கின்றனர்...' எனக் கூறினார்.
அவர் கூறியதில் உள்ள உண்மையை அசை போட்டபடியே, நாலாவது ஆப்பத்தை முடித்து, விடை பெற்றேன்.
அவர் தென் மாவட்டத்தில் வசிக்கும் ஜமீந்தார்; மலை சூழ்ந்த பிரதேசம் அது... அதனால், அங்கு காட்டு விலங்குகள் அதிகம். ஜமீந்தாரும், அவரது வாரிசுகளும் அவ்வப்போது வேட்டைக்குச் சென்று வந்த காலங்கள் உண்டு. அரசின் மிகக் கடுமையான உத்தரவுகள் மற்றும் தண்டனைகளால் இப்போதெல்லாம் இவர்கள் வேட்டைக்குச் செல்வதில்லை.
தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டு வந்த அரச பரம்பரையின் வாரிசுகள், இந்தியாவில் தானே இந்தத் தொல்லை என நினைத்து, பிரான்சு நாட்டுக்குச் சென்று, ஹெலிகாப்டர்களில் பறந்து வேட்டையாடுகின்றனராம்... அங்கே, வேட்டை, சட்டப் பூர்வமானது; அரசுக்கு பணம் கட்டி விட்டால் போதும்.
மேற்படி ஜமீந்தார், தம் சொந்த வேலை ஒன்றுக்காக சமீபத்தில் என்னை அணுகினார். விலங்கினங்களுக்கு திருமணம் செய்து வைத்தது பற்றி கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தவர், வன விலங்கினங்கள் பற்றி கூறியவை மிக சுவாரஸ்யமானது. இதோ, அவர் கூறியவை:
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில், 106 வகை விலங்கினங்களை உலகம் இழந்திருக்கிறதுப்பா... இதில், 67 சதவீதம் இறுதி நுாற்றாண்டுகளில் அழிந்திருக்கிறதுன்னு விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.
சீதோஷ்ண நிலை மற்றும் இதர காரணங்களால் இயற்கையாகவே விலங்குகள் மறைவதுண்டு. ஆனால், மனிதனின் வேட்டை யாடும் குணமும், விஷம் வைக்கும் பழக்கமும் பல உயிரினங்கள் அழிந்து போகக் காரணமானது!
அயல் நாட்டு விலங்குகள், நரி, கீரிப்பிள்ளை போன்றவைகள் பழங்காலத்திலேயே இந்நாட்டில் புகுத்தப்பட்டதன் விளைவாக நம் நாட்டு விலங்கினங்கள் மறைந்து போயின என்று கூறுகின்றனர்.
சமீப காலத்தில், இந்தியாவில் எண்ணிக்கையில் குறைந்து போன விலங்குகள் சிறுத்தைப்புலி, ஒற்றைக் கொம்புள்ள சிறு காண்டாமிருகம், இரட்டைக் கொம்புள்ள காண்டாமிருகம் ஆகியவை; ஒற்றைக் கொம்புள்ள பெரிய காண்டாமிருகம், மிக குறைந்த அளவில் சில குறிப்பிட்ட இடங்களில் நம் நாட்டில் தற்போது காணப்படுகிறது.
நுாறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வடமேற்கிலுள்ள பாலைவனப் பகுதிகள் தவிர, இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரையிலும், மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து அஸ்ஸாம் வரையிலும் புலி இனம் பரவலாக திரிந்து கொண்டிருந்தது.
வடக்கு ஆசியா பகுதியிலிருந்து நம் நாட்டில் குடி புகுந்தது, புலி இனம். இந்தியாவிலிருந்து பூகோள ரீதியில் இலங்கை பிரிந்த பின்தான் இந்தியாவுக்குள் புலிக் கூட்டம் வந்திருக்க வேண்டும்; ஏனெனில், இலங்கையில் புலிகள் அனேகமாக இல்லை.
ஈவு இரக்கமின்றி, 19ம் நுாற்றாண்டிலிருந்து நம் நாட்டில் புலிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
வேட்டையாடுவதை வீரச் செயலாகவும், பொழுது போக்காகவும் ஐரோப்பிய அதிகாரிகள் மேற்கொண்டதன் விளைவாகவும், துப்பாக்கி பிரயோகம் பழக்கத்துக்கு வந்ததன் விளை
வாகவும் புலிகளை அழிக்கும் படலம் ஆரம்பமாயிற்று. மன்னர்களும், மகாராஜாக்களும், பெரிய பிரபுக்களும் இந்த அழிவுச் செயலில் ஈடுபட்டனர்.
அவ்வளவு ஏன்... எங்க மூதாதையரும் இதே வேலையைச் செய்தவர்கள் தான்... பெர்ரி என்ற ஆங்கிலேயர் தம் நுாலில், 'ஒரு ஆங்கிலோ இந்திய நீதிபதி, 1800ம் ஆண்டுக்குள் 360 புலிகளை சுட்டு வீழ்த்தியிருப்பதாகவும், 1832லிருந்து, 1862ம் ஆண்டுக்கிடையே ஜார்ஜ் பாமர் என்பவர், முன்னவரையும் மிஞ்சி, 1,000 புலிகளை சுட்டு வீழ்த்திய பெருமையைப் பெற்றார்...' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தொகை பெருக்கத்தால் வன நிலங்களில் மக்கள் குடியேறும் நிலை ஏற்படுகிறது. வனங்களின் ஓரங்களில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்த நெருக்கடியில் வாழ வகையின்றி தடுமாறுகின்றன, புலிகள்.
இயற்கையாக கிடைக்கக் கூடிய தீனி குன்றி விடவே, அண்டை கிராமங்களில் புகுந்து, ஆடு, மாடுகளைக் கொன்று தின்ன முயற்சிக்கின்றன, புலிகள். இதைத் தடுப்பதற்காக புலிகளுக்கு விஷம் வைக்கின்றனர் கிராமவாசிகள். இதனால், புலி இனமே தென் மாநிலங்களில் நசிந்து விட்டது.
புலிகளை சுடக் கூடாது என்று வன விலங்குத் துறை தடை விதித்து விட்டது. மனிதன் தான் புலிகளின் விரோதி; அவன், தன்னை மாற்றிக் கொண்டால், இந்நாட்டில் இன்னும் புலி இனம் பிழைத்து வாழ வழியுண்டு.
- ஆனால், இன்னமும் வேட்டைப் பிரியர்கள் நம்மிடையே உலா வந்து கொண்டிருக்கும் வரை, புலிகள் பயந்து தான் வாழ வேண்டும்!
