PUBLISHED ON : பிப் 04, 2018

முஸ்லிம் நண்பர் வீட்டு கல்யாணத்திற்கு சென்ற சந்திரபாபு, வரும்போது, தன் அம்மாவுக்கு பிரியாணி எடுத்து வருவதாக கூறினார். அதற்கு, 'ச்சீ மடையா... அங்கே போய் அசிங்கமா, பார்சல் கட்டி வாங்கி வரப்போறியா?' என, கோபித்தார், அவரது அம்மா.
'இதுல என்னம்மா இருக்கு... 'எங்க அம்மாவுக்கு பிரியாணி பிடிக்கும்; கொஞ்சம் கட்டிக் கொடுத்துடேன்'னு கேட்கப் போறேன். நான் என்ன பத்து பேருக்கா கேட்கிறேன்... பத்து மாதம் சுமந்த தாய்க்கு தானே கேக்கிறேன்...' என்றதும், அமைதியானார், அம்மா.
இச்சம்பவம் குறித்து சந்திரபாபு கூறியது: கல்யாண வீட்டில், நான், தேங்காய் சீனிவாசன், இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் உதவியாளர் மணி, கதாசிரியர், ஏ.எல்.நாராயணன் எல்லாரும் ஓர் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
எங்களுக்கு ஒரு கூல்டிரிங்க் கூட கிடைக்கவில்லை. இருந்த சிகரெட்டும் காலியாகி விட்டது. யாரோ ஒரு நடிகருக்காக காத்திருந்தனர், திருமண வீட்டினர். எனக்கு பெருத்த ஏமாற்றம்; நான் எதிர்பார்த்து வந்தவன் அல்லவா... சட்டென்று கிளம்பி விட்டோம்.
தேங்காய் சீனிவாசன் காரிலேயே, நாராயணனை தவிர மற்றவர்கள் கிளம்பினோம். இயக்குனர், டி.என்.பாலுவின் தம்பி வைரவன் தான் காரை ஓட்டினார். பூந்தமல்லி சாலையில் காரை நிறுத்தி, ஒரு பாட்டில் விஸ்கி வாங்கிய பின், நேராக ஓட்டல் இம்பீரியல் போனோம்.
'என்ன சாப்பிடுறீங்க?' என்று கேட்டான், தேங்காய் சீனிவாசன்.
கல்யாண வீட்டில் கிடைக்காத பிரியாணி, நண்டு, சூப், சிக்கன் என, ஆர்டர் கொடுத்தேன். நடுவில் அம்மாவை மறக்காமல், ஒரு பொட்டலம் பிரியாணியும் சொன்னேன்.
அப்போது, எங்கோ பேண்டு சத்தம் கேட்டது; இசை என்றால் எனக்கு தான் பைத்தியம் ஆச்சே... மதுவை விட போதை தரும் அந்த இசை, எங்கிருந்து வருகிறது என்று, ஓட்டல் பணியாளரிடம் கேட்டேன்.
அவன் எங்க ஊர்க்காரன்; பக்கத்தில் கேபரே நடப்பதாக சொன்னான். அந்த ஹாலுக்கு கிளம்பினோம். வெளிநாட்டினரோடு, நம்மவர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நேராக வாத்தியக் குழுவை நோக்கி சென்றேன். சாக்ஸபோன் வாசிப்பவரிடம், 'உங்களுக்கு கோங்கா நடனம் தெரியுமா...' என்று கேட்டேன்.
அவன் விழித்து, 'மன்னிச்சுக்கங்க சார்... எனக்கு தெரியாது...' என்றான்.
அறையின் விளக்குகளை அணைக்கச் சொல்லி, என் கால்களுக்கு மட்டும் வெளிச்சம் விழும்படி அமைத்து, கோங்கா நடனம் ஆட ஆரம்பித்தேன்...
ஒன்று, இரண்டு, மூன்று, நான்காவது அசைவுக்கு, பெரும் கரகோஷம் எழுப்பினர். சந்தோஷத்தில் எனக்கு கண்ணீர் வந்தது.
அதற்குள், தேங்காய் சீனிவாசனுக்கு உற்சாகம் பிறந்து விட்டது. நேராக மைக்கை நோக்கி சென்று, 'இப்போது நான் ஒரு ரஷ்ய பாடலை பாடப் போகிறேன்; என்னுடன் சந்திரபாபுவும் பாடுவார்...' என்று அறிவித்தான்.
'ரஷ்ய பாடலா...' என்று திகைத்தேன்.
'அண்ணே, கொஞ்சம் சமாளிச்சுக்கங்க...' என்று என்னிடம் மெதுவாக கூறினான், சீனிவாசன்.
நான் வாத்தியக் குழுவிடம், நம்ம ஊர், பறை மேளம் அடிக்கச் சொன்னேன். கன்னாபின்னா என்று மொழிக்கு அடங்காத வார்த்தைகளை கோர்த்து பாடத் துவங்கினான், சீனிவாசன்.
நான், 'யூட்லிங்' போட, உடனே, 'ஷட்ஜமத்'துக்கு போய் விட்டான், சீனிவாசன். ஷட்ஜமத்தில் யூட்லிங் போட முடியுமா... நான் பேஸ் (கீழ் ஷட்ஜமம்) வந்தேன் பாருங்கள்... ஒரே கிளாப்ஸ்!
மீண்டும் எங்கள் இடத்தில் வந்து அமர்ந்தோம்.
ஓட்டல் மூடி விட்டதாகவும், கேபரே பகுதி மட்டுமே திறந்திருப்பதாகவும் கூறினான், பேரர். நாங்கள் வந்தவுடனேயே ஆர்டர் கொடுத்தாயிற்றே!
சீனிவாசனுக்கு கோபம் வர, அதற்குள் எங்கிருந்தோ பிரியாணியும் வந்துவிட்டது.
பேச்சுக்கு இடையே, என்னைப் பற்றி ஏதோ ஒரு வார்த்தையை விட்டான், பேரர். கோபமடைந்த சீனிவாசன், 'உனக்கு புரியுமாடா... கடுகு சிறுத்தாலும் காரம் போகாது...' என்றான்.
இதைக் கேட்டதும் எனக்கு கண் கலங்கியது. அவனுக்கு தான் என் மீது எத்தகைய பாசம்!
நாங்கள் சாப்பிட்டதுக்கு மேல், 80 ரூபாய் அதிகமாக பில் போட்டிருப்பதை கண்டுபிடித்து விட்டான், சீனிவாசன். விடுவானா... 'எங்கே உங்கள் உரிமையாளர்?' என்று கத்தினான்.
'இதோ பார்... பாபு ஆடியிருக்கிறார்; அதற்கு ஆயிரம் ரூபாய். நானும், அவரும் பாடியிருக்கிறோம்; அதற்கு, 1,500 ரூபாய். உங்க கேபரே டான்சரை விட எங்க புரோகிராமை தான் எல்லாரும் ரசிச்சாங்க. அதிலே பில்லை கழித்து, மீதியை கொண்டு வா, போ...' என்று கூச்சல் போட, மன்னிப்பு கேட்டான், பேரர்.
இரவு ஒரு மணி இருக்கும்; நாங்கள் எல்லாரும் மீண்டும் காரில் ஏறினோம். கார் என் வீட்டை நோக்கி பறந்தது.
நான், காலிங் பெல்லை அழுத்தினேன்; என் மற்றொரு கையில், அம்மாவுக்கு நான் கொண்டு வந்த பிரியாணி!
சந்திரபாபு, வாலிப விருந்து படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயம் அது... அப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த கண்ணனிடம் நட்பாக பழகினார், சந்திரபாபு. மாலையில் இருவரும் ஒன்றாக பொழுதை போக்குவர். அன்று சந்திரபாபு நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டன; கண்ணன் நடிக்க வேண்டிய ஒரு காட்சி மட்டும் பாக்கி இருந்தது. 'ஷூட்டிங் முடிச்சுட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்துருங்க...' என, கண்ணனிடம் சொல்லி கிளம்பினார், சந்திரபாபு.
அச்சமயம், கண்ணனுடன், நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார், சீனிவாசன். சந்திரபாபுவின் தீவிர ரசிகரான இவர், வாழ்வில் ஒருமுறையாவது சந்திரபாபுவை சந்தித்து விடவேண்டும் என, நினைத்தார். அன்று, ஷூட்டிங் முடிந்து கண்ணன் கிளம்பும்போது, அங்கு வந்த சீனிவாசன், அவர் சந்திரபாபு வீட்டுக்கு செல்கிறார் என்பதை அறிந்ததும், 'என்னையும் கூட்டிட்டு போங்க...' என, அடம்பிடித்தார்.
வேறு வழியில்லாமல் சீனிவாசனையும் உடன் அழைத்து சென்றார், கண்ணன். சீனிவாசனை, சந்திரபாபுவின் வீட்டு வராந்தாவில் உட்கார சொல்லி, உள்ளே சென்ற கண்ணன், சந்திரபாபுவிடம், 'சீனிவாசன்னு ஒரு பையன்... என் கூட நாடகங்களில் நடிக்கறவன்; நீங்கன்னா அவனுக்கு ரொம்ப பிரியம். உங்கள எப்படியாவது சந்திக்கணும்ன்னு கெஞ்சினான். வெளியே உட்கார்ந்திருக்கான்; நீங்க அனுமதிச்சா உள்ளே வரச்சொல்றேன்...' என்றார்.
'அப்படியா, வரச்சொல்லுங்க...' என்றார் ஆவலுடன்!
தன்னை ரசிப்பவர்களை நேசிப்பவராயிற்றே சந்திரபாபு.
மிகவும் உணர்ச்சி பொங்க உள்ளே வந்தார், சீனிவாசன். சந்திரபாபுவை நெருக்கமாக பார்த்த பரவசத்தில், 'அண்ணா...' என, அவர் காலில் விழுந்து, விக்கி விக்கி அழத் துவங்கினார்.
'சரி சரி, பொம்பளை மாதிரி அழாத மேன்; எந்திரி...' என, சீனிவாசனை துாக்கி விட்டார் சந்திரபாபு.
சில ஆண்டுகள் கழித்து...
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் சென்னை.
முகில்
