தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : பிப் 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒழுக்கம் உயர்வு தரும்!

திருமணம் ஆகாத என் உறவினர் மகன், சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறான். வசதியாக தனி வீடு எடுத்து தங்க, வருமானம் போதாமையால், நான்கு நண்பர்கள் தங்கியுள்ள அறையில், தானும் இணைந்து, வாடகையை பகிர்ந்து கொள்கிறான்.

இந்நிலையில், சொந்த வேலையாக சென்னை சென்றேன், இரண்டு நாள் தங்கும் சூழ்நிலை ஏற்படவே, 'அம்மா... என் அறையில் வந்து தங்குங்கள்...' என்று அழைத்தான், உறவினர் மகன். பேச்சுலர் குடியிருக்கும் இடத்தில், புத்தகங்களும், உள்ளாடைகளும் ஒழுங்கற்று கிடக்கும். அதைவிட, சினிமா நடிகைகளின் கவர்ச்சி படங்களை சுவரில் கண்டபடி ஒட்டி, வைத்திருப்பர் என்றெண்ணி மறுத்து, சிறிது துாரத்தில் உள்ள என் சகோதரி வீட்டில் தங்கினேன்.

மறுநாள், அந்த பையன், தன் அறைத் தோழர்களுடன் வந்து, தாங்கள் சமைத்து சாப்பிட சில பாத்திரங்கள் வாங்கி வைத்திருப்பதாகவும், பிரஷர் குக்கரில் சமைக்க கற்றுத் தரும்படி அழைத்தான். வேறு வழியின்றி அவர்களுடன் சென்றேன்.

தயங்கியபடி வீட்டினுள் நுழைந்த என்னை, ஊதுபத்தியின் நறுமணம் வரவேற்றது. ஐந்து இளைஞர்களின் இருப்பிடமும் மிக துாய்மையாக, நேர்த்தியாக இருந்ததுடன், அவர்களது படுக்கையின் தலைப்பக்க சுவரில், அவர்களது பெற்றோரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. இதுபற்றி கேட்க, 'தினமும் எங்கள் பெற்றோரின் படங்களை பார்க்கும் போது, எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் எங்களை படிக்க வைத்து, எங்கள் முன்னேற்றத்தை காண கனவுகளுடன் காத்திருக்கும் அவர்கள், எங்களை தீய வழியில் செல்லாதபடி அறிவுறுத்துவது போல் உள்ளது...' என்று சொன்ன அவர்கள் மீது பரிவு ஏற்பட்டது.

அக்கணமே, அவர்களை என் பிள்ளைகளாக பாவித்து, மேலும் இரண்டு நாட்கள் தங்கி, வாய்க்கு ருசியாக சமைத்து கொடுத்து, ஊர் திரும்பினேன்.

படிப்பதற்கும், வேலை பார்க்கவும், வெளியூர் சென்று தங்கும் இளைஞர்களே... பண்பும், ஒழுக்கமும் உங்கள் வருங்காலத்தை வளமாக்கும்!

— என்.சந்திரா, தங்கச்சிமடம்.

ஓய்வு காலத்தை இப்படியும் செலவிடலாம்!

அரசு பள்ளியில் தையல் ஆசிரியையாக பணியாற்றி, ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டுக்கு, திருமண அழைப்பிதழ் கொடுக்க, நண்பருடன் சென்றிருந்தேன்.

வீட்டில் இருந்த மூன்று தையல் மிஷின்களில், பள்ளி மாணவியர் சிலர் தையல் கற்றுக் கொண்டிருந்தனர். ஆசிரியையின் உறவினரான என் நண்பர், 'வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பின், சும்மா இல்லாமல், தையல் சொல்லிக் கொடுத்து, மாதம் ஒரு தொகையை சம்பாதிக்கிறீங்க போலிருக்கே... கூடவே, பென்ஷன் பணம் வேறு; செம குஷி தான்...' என்றார்.

அதற்கு அந்த ஆசிரியை, 'தம்பி, வீட்டில் நானும், என் கணவர் மட்டும் தான் இருக்கோம்; மகனும், மகளும் திருமணமாகி வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருக்கிறாங்க. எங்களுக்கு பேச்சுத் துணைக்கும், மன ஆறுதலுக்காகவும், வீடு சற்று கலகலப்பாக இருக்கவும், நாலு பேருக்கு உதவியாய் இருக்கலாம்ன்னு தான், இந்த தையல் மிஷின்கள வாங்கிப் போட்டிருக்கேன்.

'பள்ளிக் கூடத்து பிள்ளைக மட்டுமின்றி, ஏழைப் பெண்களுக்கும், இலவசமாக தையல் வகுப்பு நடத்துறேன்; கட்டணம் வாங்குறதில்ல. பென்ஷன் பணம் வருது; அது போதும்...' என்று, 'நச்'சென்று பேசி, மனதில் உயர்ந்து விட்டார்.

ஓய்வு காலத்தை, மகன், மகள், பேரக் குழந்தைகளுடன் செலவிட வாய்ப்பில்லாதோர், இதுபோன்று, தாம் கற்ற கல்வி மற்றும் கைத்தொழிலை பிறருக்கு கற்றுக் கொடுப்பதால், ஓய்வு காலம் நிம்மதியாய் கழிவதுடன், தனிமை உணர்வும் ஏற்படாது!

— எஸ்.ராமு, திண்டுக்கல்.

வித்தியாசமான ஆட்டோ டிரைவர்!

சமீபத்தில் ஆட்டோவில் பயணித்த போது, ஆட்டோ டிரைவர், தன் எதிரே இருந்த சிறிய பாக்ஸில் இருந்து புத்தகங்கள் சிலவற்றையும், இரண்டு நாளிதழ்களையும் எடுத்து என்னிடம் கொடுத்து, 'இறங்கும் வரைக்கும், இதப் படிச்சுட்டு வாங்க...' என்று கொடுத்தார்.

அவர் கொடுத்த புத்தகங்களை வாங்கி பார்த்தேன்; மூலிகை மருத்துவம், உடற்பயிற்சி, வாழ்வில் முன்னேற வழிகள் என, எல்லாமே வாழ்க்கைக்கு உதவும் புத்தகங்கள்.

மேலும், அந்த ஆட்டோ டிரைவர், 'புத்தகம், பேப்பருக்காக மாசம், 400 ரூபா செலவு பண்றேன் சார்... என் வண்டியில ஏறுறவங்களுக்கு பயணம் போரடிக்காம இருக்கும்; நாலு விஷயத்தை தெரிஞ்சுக்குவாங்க... இதனால, எனக்கும் ஒரு ஆத்ம திருப்தி...' என்றார்.

பிறருக்கு ஏதாவது ஒருவகையில் உதவ வேண்டும் எனும் எண்ணங்கொண்ட அவரை மனதாரப் பாராட்டினேன்.

மருத.வடுகநாதன், வேதாரண்யம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us