PUBLISHED ON : பிப் 04, 2018

''வேணாம்ன்னு மொட்டையா சொன்னா எப்படி... காரணத்தை சொல்,'' என்றவனை ஏறிட்டுப் பார்த்தாள், நீரஜா.
''எத்தனை தடவ சொல்றது... இன்னொரு முறை மணவறையில உக்காந்து என்னால தாலி கட்டிக்க முடியாது. இன்னொரு கல்யாணத்த பற்றி நினைக்கிற மனநிலையில நான் இல்ல; என்னால, என் புருஷன் செய்த துரோகத்தை மறக்க முடியல.
''எங்கப்பா தொல்ல தாங்காமத் தான், திருமண தகவல் மையத்தில், புரொபைல் போட்டேன்; நீங்க ஒருத்தர் தான் முந்திரிக்கொட்டை கணக்கா, எங்கப்பா, அம்மாகிட்ட பேசி சம்மதம் சொல்லி, என்கிட்டே வந்து நிக்கிறீங்க... உங்கள யார் சம்மதம் சொல்ல சொன்னது?'' 'படபட'வென அவள் பொறிவதைக் கேட்டவன், தலையை பின்னுக்கு சாய்த்து, சிரித்தான்.
''எதுக்கு இப்போ சிரிப்பு...''
சட்டென்று சிரிப்பை நிறுத்தி, ''சாரி, நீரஜா... விஷயத்துக்கு வருவோம்; எனக்கு ஒரு தங்கை இருக்கா... அருமை பெருமையா கல்யாணம் செய்து வைச்சோம்... ஜோடிப் பொருத்தம் பிரமாதமா இருந்துச்சு; யார் கண் பட்டதோ, எண்ணி பத்தாம் நாள், விபத்தில் போய் சேர்ந்துட்டார், மாப்பிள்ளை. எல்லாரும் இடிஞ்சு போயிட்டோம். அப்பா இல்லாமல் வளர்ந்தவங்க நாங்க... சின்ன வயசுலேயே அப்பா இறந்துட்டார்; எங்கள வளக்க அம்மா படாதபாடு பட்டாங்க...'' என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, ''பாத்தீங்களா... உங்க அம்மா கூட தனியா நின்னு தானே உங்கள...'' என்றவள், அவன் உறுத்தலான பார்வையை கண்டு, நாக்கை கடித்து, அமைதியானாள்.
''முழுசா கேளு... அதே அம்மா தான், என் தங்கைக்கு மறு கல்யாணம் செய்து வைப்பதில் முனைப்பா நின்னு, பண்ணியும் வச்சாங்க,'' அவனுடைய குரலில் மலர முடியாமல் தவிக்கும் இதழ்களின் உணர்வு பரவிக் கிடந்தது.
''ஆனா, ரெண்டாவது கல்யாணத்துக்கு வரன் தேடி ரொம்பவே கஷ்டப்பட்டோம்; துக்கிரி, ராசியில்லாத பொண்ணுன்னு பேச்சு வேற... உன்னைப் போல தான் என் தங்கையும் கல்யாணம் வேணாம்ன்னு முரண்டு செய்தா. ஆனா, அம்மா தான், 'வயசு பொண்ணுக்கு குடும்பம், புருஷன் பாதுகாப்பு அவசியம்; எங்க காலம் போல இல்ல இப்போ... காலம் கெட்டுக் கிடக்கு'ன்னு பலவும் சொல்லி அவளை மாற்றினாங்க. இன்னிக்கு ஒரு வயசு குழந்தைக்கு நான் தாய் மாமன்; சந்தோஷமாயிருக்கா என் தங்கச்சி,'' என்றான்.
கதை கேட்கும் சுவாரஸ்யத்தில் இருந்தாள், நீரஜா.
''அம்மா, என்னை கல்யாணம் செய்துக்கச் சொல்லி நச்சரிச்சாங்க... அப்போ தான் உன் புரொபைல் கிடைச்சது; 'கணவனால் ஏமாற்றப்பட்டவள்...' என்ற வார்த்தை ரொம்பவே, என்னை, 'டிஸ்டர்ப்' பண்ணுச்சு...'' என்ற போது, அவளின் முகம் வாடியது.
''ஹேய்... உடனே அனுதாபம்ன்னு நினைச்சுக்காதே... இது அனுபவம் தந்த கரிசனம்; பட்ட வேதனையை உணர்ந்ததோட எதிரொலி. ஆமாம் நீரஜா... உன்னைப் போலவே நானும் ஏமாந்து, அவமானப்பட்டவன் தான்.
''கல்யாணத்துக்கு முதல் நாள், வரவேற்பு நிகழ்ச்சிக்காக உறவும், நட்பும் கூடியிருந்தது. போட்டோ எடுத்து, பரிசுகள் வாங்கி, வீடியோ முடிச்சாச்சு; மறுநாள் முகூர்த்தம்... நானும் கனவுகளோடு உறங்கி எழுகிறேன்... கல்யாண மஹாலே அல்லோலகல்லோலம்... கல்யாணப் பெண்ணை காணோம்... 'என் மனதுக்கு பிடிச்சவருடன் போகிறேன்; தேட வேண்டாம்...' என்று எழுதி வைத்து, போயிருந்தாள்.
''யோசிச்சுப் பாரு... இது எப்படிப்பட்ட அவமானம்... ஊரே கூடியிருக்கு; கல்யாண சத்திரமே, 'கொல்'லுன்னு ஆயிருச்சு,'' என்றவனின் முகம் இறுகி சிவந்தது.
நீரஜா, அவனை நிமிர்ந்து பார்த்தாள். மாநிறம், நல்ல உயரம்; பெண்களைப் போல கொஞ்சம் பெரிய கண்கள். பளீரென்று ஒளிரும் பல்வரிசை; நிகோடின் கறை படியாத ரோஜா நிற உதடுகள். மெல்லியதாய் மீசை... சட்டென, பார்வையை தழைத்துக் கொண்டாள்.
இருவருக்குமிடையே புகுந்து வந்த காற்றின் ஓசை சலசலப்பாக இருந்தது. அது, கடலை பார்த்த வீடு என்பதால், எதிரே கடல் அலை புரண்டு புரண்டு வருவது, 'சைலன்ட்' மூவியாக தெரிந்தது.
''நீரஜா... இன்னொன்னு சொல்லிடுறேன்... உங்க அப்பா, இதய நோயாளின்னு உங்கம்மா சொன்னாங்க. தான் பாத்து வச்ச மாப்பிள்ள, இப்படி பண்ணிட்டானேன்னு உள்ளே குமைஞ்சு கிடக்கார். நீ இன்னொரு கல்யாணத்துக்கு தயாராயில்லங்கிறது எனக்கு புரியுது. நானும் இன்னும் மனசளவுல பூரணமாத் தயாராகல. நம் பெற்றோர்களுக்காக, நாம கல்யாணம் செய்துப்போம்; நல்ல நண்பர்களாக இருப்போம். எத்தனை பேரை உன்னால இப்படி வேணாம்ன்னு மறுத்துட்டே இருக்க முடியும்... உன்னுடைய இந்த ரெட்டை வேஷம் உங்கப்பாவுக்கு தெரிஞ்சா தாங்குவாரா, யோசிச்சு பாரு... நான், சத்தியம் செய்றேன்... நீயா மனசு மாறினால் ஒழிய, உன் மீது, எந்த உரிமையும் கொண்டாட மாட்டேன்; என்னை நீ நம்பலாம்,'' என்று கூறி, 'எல்லாமும் பேசியாச்சு...' என்பது போல் கடலை பார்த்து, முகத்தை திருப்பிக் கொண்டான்.
பூவை பறிக்காமல் செடியிலேயே வைத்திருந்து அழகு பார்ப்பது போல, அவனது மவுனத்தில் புது அழகு தெரிந்தது. இதுதான் இவன் இயல்போ என்று நினைத்தாள்!
'ஆசை ஆசையாக, அப்பா பாத்து முடித்தவனுடன் வாழ்க்கையை துவங்கி, சகலத்தையும் அர்ப்பணித்து, அவனுக்காகவே வாழ்ந்த வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கி, பணம், நகை என்று எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டவனை எண்ணிப் பார்க்கவும் கசப்பாக இருந்தது. அப்பாவுக்கு முதல் முதலாய், 'அட்டாக்' வந்ததும் அப்போதுதான்.
'இவன் சொல்வதும் நிஜம் தான்; எத்தனை பேரை வேண்டாம்ன்னு சமாளிக்க முடியும்... அப்பாவுக்கு தெரிந்தால் தாங்க மாட்டாரே... இவன் சொல்வதை பேசாமல் ஏற்றுக்கொள்ளலாமா... இவனும் ஏமாந்து, அவமானத்தை ருசித்தவன்...' என்று அவள் மனதுள் பலவிதமான எண்ணங்கள்.
கறுப்பு வெல்வெட் துணியில் சிதறிய கண்ணாடி துண்டுகள் போல், நீரில், ரசவாதம் புரிந்து கொண்டிருந்தது, நிலவொளி. அவள் தலை கவிழ்ந்திருந்தாள்.
'குழந்தை மாதிரி இருக்கிறாளேடா... இவளை ஏமாற்ற எப்படிடா மனசு வந்தது... ரெண்டு குடும்பத்தை நாசமாக்கிட்டியேடா பாவி...'
நிச்சயித்த பெண், மாயமாகிப் போனதுமே, அவர்களை கண்டுபிடித்து ஏதேனும் செய்ய வேண்டும் என்று கொதி நிலையில் இருந்தவனை, திருமணத்திற்கு வந்திருந்த, டிடெக்டிவ் ஏஜன்சி நடத்தும் அவன் நண்பன் தான் அமைதிப்படுத்தினான். வெறி தணிந்த பின், 'ச்சே' என்ற அருவருப்புடன் ஒதுங்கிக் கொண்டான்.
இந்நிலையில், நீரஜாவின் புரொபைல் வந்ததுமே, அவனிடம் தான் ஓடினான். சூடுகண்ட பூனையாயிற்றே... அந்த நண்பன் தான் விவரம் சொன்னான், இவன் திருமணம் முடிக்க இருந்தவளை இழுத்துக்கொண்டு ஓடியவன், நீரஜாவின் புருஷன் தான் என்பதை!
பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு, துரோகம் செய்துள்ள உண்மையையும் புரிந்து கொண்டான். நீரஜா மீது ஈர்ப்பு வந்தது அப்போதுதான். இருவருமே ஒருவனால் ஏமாற்றப்பட்டு வாழ்வில் அவமானத்தை சுவைத்தவர்கள் என்ற எண்ணம் கூடுதல் அன்பை, அக்கறையை விளைவித்தது.
நீரஜாவின் அப்பாவை சந்தித்ததுமே உறுதிப்பட்டது அந்த எண்ணம். ஆனால், இதை தனக்குள்ளாகவே புதைத்து கொண்டான். இந்த உண்மையை பெற்ற தாயிடம் கூட கூறவில்லை. புருஷன் ஏமாற்றி ஓடிவிட்டான். நல்ல குடும்பத்து பெண்; வழி தெரியாமல் நிற்கிறாள் என்று மட்டும் தன் தாயிடம் சொல்லி வைத்தான்.
ஏமாற்றி போனவன், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு, முன்னேற்பாடாக வைத்துவிட்டு போயிருந்தான். நீரஜாவுடன் தான், தன் வாழ்க்கை என்பதில் உறுதியாக இருந்ததால் தான், அவள் மனதை மாற்ற இத்தனை பேச்சு!
தலைகுனிந்து அமர்ந்திருந்தவள், நிமிர்ந்து பார்த்து, ''ஓ.கே., இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு; அப்பாவுக்காகவாவது இதை ஒத்துகிட்டுதான் ஆகணும்,'' என்று புன்னகைத்தாள்.
''தேங்க்யூ நீரஜா,'' என்றவன், எழுந்து, கையை நீட்ட, கண நேர தயக்கத்துக்கு பின், அவன் கையை பிடித்து, எழுந்தாள்.
ஜே.செல்லம் ஜெரினா
