தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : நவ 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.தேவி, கடலுார்: ஆங்கிலத்தில், 'மடமட'வென்று பேசுபவர்களைப் பார்த்தால், நாலடி தள்ளி நிற்க தோன்றுகிறது... ஏன்?

ஆங்கிலத்தை விட தமிழ் மட்டம் என, எண்ணும் நம் மனப்பான்மை தான்! 'மடமட'வென தெலுங்கிலும், இந்தியிலும் பேசுபவர்களைப் பார்த்து, எப்போதாவது ஒதுங்கி இருக்கிறீர்களா, இல்லையே... 'எந்த விதத்திலும் என் மொழி தாழ்ந்தது அல்ல' என நினையுங்கள்; ஒதுங்கத் தோன்றாது!

* இ.இந்துமாறன், கோவை: 'செக்ஸ்' புத்தகங்களைப் படிப்பதால் ஒருவன் அல்லது ஒருத்தி கெட்டுப் போக வாய்ப்பு உள்ளதா?

தொடர்ந்து படிப்பதால், தவறு செய்ய மனம் துாண்டப்படத்தான் செய்யும்!

ஆர்.கிருஷ்ணன், திருப்பூர்: நம் நாட்டு குழந்தைகளிடையே, பாடப்புத்தகம் தவிர்த்து, மற்ற - புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எப்படி உள்ளது?

இந்தியாவில், 7 முதல் 18 வயதுடையோரில், 33 சதவீதம் பேரிடம் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. இதுவே, சீனாவில், 77 சதவீதமாக உள்ளது. நம்மிடையே, படிப்பறிவு குறைவு தான்!

எஸ்.ஜெயஸ்ரீ, வேட்டவலம்: சிறுகதை எழுத, 'டிப்ஸ்' தாருங்களேன்...

கதையின் கரு மனதில் உதித்த உடனேயே, அதற்கான முடிவை, பெரும்பாலான வாசகர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முடிவா என யோசித்துக் கொள்ளுங்கள்... நாலு கதாபாத்திரத்திற்கு மேல் அறிமுகப்படுத்தாதீர்...

சிறு கதையின் ஆரம்ப பாராவையும், அதன் பின் வரும் சம்பவங்களையும் மனதில் சில நாள் அசை போட்டு, திருப்தி வரும் வரை, திரும்பத் திரும்ப காகிதத்தில் எழுதிப் பாருங்கள்... சிறுகதை எழுதுவது வசப்படும்!

து.சுப்பிரமணியன், திருப்பூர்: தங்கத்திற்கு, நம் நாட்டுப் பெண்கள் இடையே உள்ள மோகத்தைப் போல மற்ற வெளிநாட்டுப் பெண்களிடம் உண்டா?

கிழக்காசியா, அமெரிக்கா, ஐரோப்பாவில் நான் பார்த்த வரை, மெலிதாக ஒரே ஒரு செயின்... அதுவும், 18 காரட் தங்கத்தில் அணிந்துள்ளனர், பெண்கள்.

இங்கே, அந்த நிலை எப்போது வருமோ! தங்கத்தால், தாலி தடைப்பட்டுக் கொண்டிருக்கும் தாரகைகளுக்கு, விமோசனம் கிட்டுமே!

* சி.முரளிதரன், மானாமதுரை: கணவன் - மனைவிக்குள் இருக்க வேண்டிய அந்தரங்க விஷயங்களை, நான்கு பேருக்கு நடுவில் அம்பலப்படுத்தும் கணவனை என்ன என்பது; அவரைத் திருத்துவது எப்படி?

அந்த, 'அப்பாவி' மனிதனுக்கு, இப்படி அம்பலப்படுத்துவதால் நேரும் அவமானங்களை, கேலிகளை, கிண்டல்களை புரிய வைக்க வேண்டும்; ஒரு வேளை உஷாராகலாம்!

எம்.ரங்கநாதன், ஜோலார்பேட்டை: நாட்டுப் புற பாடல், 'பாப்' இசை... எதை ரசிப்பீர்கள்?

இரண்டுமே ரசிக்கக் கூடியது தான்; ஆனால், ஒவ்வொன்றையும் ரசிக்க, தனித்தனி மூடு தேவை எனக்கு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us